Last Updated : 03 Mar, 2017 09:38 AM

 

Published : 03 Mar 2017 09:38 AM
Last Updated : 03 Mar 2017 09:38 AM

மொழி கடந்த ரசனை 23: பிரவாகமாகக் கொட்டிய கண்ணீர்

வழக்கமான திகில் படங்களிலிருந்து மாறுபட்டது ‘வோ கோன் தீ’ என்ற இந்திப் படம். ‘யார் நீ’ என்ற பெயரில் தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்ட இந்தப் படம், மிகவும் வித்தியாசமான காட்சிச் சூழலைக் கொண்டது. நாயகன், தான் விரும்பும் பெண்ணை நெருங்கவிடாதபடி அவனைச் சுற்றி திகிலான சூழல் நிலவுகிறது. இதனால் மனம் வருந்தி அவளைப் புறக்கணிக்கிறான். இந்தக் காட்சியை நம் கண் முன் நிறுத்தும்படியான பாடல் வரிகளை எழுதுவது மிகக் கடினமான சவால். இதில் அதிகம் வெற்றி பெற்றது இந்திப் பாடலின் ஆசிரியர் மெஹதி அலி கானா அல்லது தமிழ்ப் பாடல் எழுதிய கண்ணதாசனா என்று வியக்கும் வண்ணம் சிறப்பாக அமைந்துள்ளன அந்த இரு மொழிப் பாடல்களும்.

‘ஜோ ஹம்னே தாஸ்தான் அப்னே சுனாயீ தோ, ஆப் கியோன் ரோயே’ என்று தொடங்கும் இந்திப் பாடலின் பொருள்:

நான் என் கதையைச் சொல்வதைக் கேட்டு

நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?

அழிவு என் உள்ளத்தை ஆக்கிரமித்ததற்கு

நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?

என் இதயத்தின் துக்கம் இது.

நீங்கள் ஏன் இதைச் சகித்துக்கொள்ள வேண்டும்?

இதனால் நான் விடும் கண்ணீர்

உங்கள் கண்களில் ஏன் வழிய வேண்டும்?

துன்பத்தின் தீயை நானே மூட்டிக்கொண்டதற்கு

நீங்கள் ஏன் அழ வேண்டும்?

ஏற்கனவே மிகவும் அழுதுவிட்டேன்

இனியும் அழ மாட்டேன் என் அமைதியை இழப்பதன் மூலம்

உங்களை அமைதி இழக்க விட மாட்டேன்.

பிரளயம் என் மீது கொட்டிய கண்ணீரை

நீங்கள் ஏன் விட வேண்டும்?

உங்களது கண்ணீர் நிற்கவில்லையெனில்

நானும் அழுவேன். நான் விடும் கண்ணீரில்

சந்திரனையும் நட்சத்திரங்களையும் மூழ்கடிப்பேன்

அழிந்து போகட்டும் அழகான இயற்கை எல்லாம்

தன் இசை அமைப்புக்கு நல்ல கவிதை வரிகள் மிக முக்கியம் என வலியுறுத்தும் மதன் மோகன், தயாரிப்பாளர்களிடம் படத்தின் பாடலாசிரியராக மெஹதி அலி கான்தான் இருக்க வேண்டும் எனக் கூறினாராம். இதற்கு இணயாண வரிகளாக அமைந்த, ‘என் வேதனையில் உன் கண் இரண்டும் என்னோடு அழுவதேன் கண்ணா’ என்ற கண்ணதாசன் எழுதிய பாடலின் தொடக்க வரிகள், தமிழ்த் திரையில் பொதுவாக நாயகி, நாயகனிடம் வெளிப்படுத்தாத உணர்வின் அடையாளமாக அமைந்தன.

‘என் இதயத்தின் துக்கம் இது, நீங்கள் ஏன் இதைச் சகித்துக்கொள்ள வேண்டும்?’ என்பது இந்திப் பாடலின் வரி. ‘ஒருவரே வேறு பார்வை பார்க்கும் பொழுது (நீ) அழுவதேன் கண்ணா’ - இது கண்ணதாசன் . இதே கண்ணதாசன், ‘இருவர் உள்ளம்’ திரைப்படத்துக்காக எழுதிய ‘இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா” என்ற வரிகளின் புதிய விளக்கமாகவும் மேற்படி வரிகள் திகழ்கின்றன.

நானே வருவேன்

படத்தின் மூன்றாவது சிறந்த பாடலாக விளங்கும் ‘ நயனா பர்ஸே ரிம்’, படத்தின் கருவைச் சுமந்த பாடல். அதாவது, படத்தில் அடிக்கடி ஒலிக்கும் தீம் சாங். இனிமையான மெட்டில் அமைந்த, லதா மங்கேஷ்கருக்குப் பிடித்த, இப்பாடலின் வரிகள் மற்ற இரண்டு பாடல்கள் அளவுக்கு ஆழமானவையல்ல. இதன் தமிழ் வடிவில் கண்ணதாசன் எழுதியுள்ள வரிகள் இதே சூழலைக் கவித்துவ அழகுடனும் கருத்துச் செறிவுடனும் கையாள்கின்றன.

இந்தப் பாடலின் பொருள்:

கண்கள் பனிக்கின்றன ரிம்ஜிம் ரிம்ஜிம் என

உலர்ந்த உன் ஆசைகளைக் குடித்துவிட்டு

அந்த நாள் என் நினைவில், அந்த நினைவு என் அருகில்

இப்பொழுது வரை என் இதயம் பொங்குகிறது

உன் அழியாத காதலின் துணையால்

நீ இல்லாமல் சூனியமாக உள்ளது சூழல்

தடுமாறுகின்றன உடன் உள்ள தடங்கள்

கண்கள் பனிக்கின்றன ரிம்ஜிம் ரிம்ஜிம் என

விழிகள் நீ இன்றிச் சுழல்கின்றன

காதல் என் கையை விட்டு நழுவுகிறது

வா அருகில் என் விட்டில் பூச்சியே

எரிகிறது கற்பு என்ற மெழுவர்த்தி

வா என் நண்பனே ஏன் பயப்படுகிறாய்

இதே சூழலுக்கு கண்ணதாசன் எழுதிய வரிகளைப் பாருங்கள்:

நானே வருவேன் இங்கும் அங்கும்

யாரென்று யார் அறிவார்

உன் மங்கல மாலைப் பெண்ணாக

உன் மஞ்சள் குங்குமம் மலராக

நான் வந்தேன் உன்னிடம் உறவாட

உன் மாளிகை சொல்லும் கதையாக

சொந்தம் எங்கே செல்லும்

அது வந்து வந்து சொல்லும்

அவன் தந்த உறவல்லவா

மயங்கும் கண்ணைப் பாராமல்

கலங்கும் நெஞ்சைக் கேளாமல்

பிரிந்து செல்ல எண்ணாதே

என் கண்ணீர் பேசும் மறவாதே

மழை வந்த வேளை

மனம் தந்த பாதை

காமன் தந்த உறவல்லவா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x