Published : 19 May 2017 10:33 AM
Last Updated : 19 May 2017 10:33 AM

இயக்குநரின் குரல்: பன்றி ஒரு அதிர்ஷ்ட விலங்கு! - ஜெகன் சாய்

வெள்ளைப் பன்றியை வைத்து ‘ஜெட்லி’ என்ற தலைப்பில் ஒரு ‘பிளாக் ஹியூமர்’ படத்தை இயக்கி, நடித்துத் தயாரித்துக்கொண்டிருக்கிறார் ஜெகன் சாய். படத்தின் டீஸர் இணையத்தைக் கலக்க, இசை உரிமையை திங் மியூசிக் வாங்கி ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. விலங்குகளை வைத்துச் சுதந்திரமாகப் படமாக்க இயலாத தமிழ் சினிமா சூழலில் ஒரு பன்றியை எப்படி முதன்மைக் கதாபாத்திரம் ஆக்கினார் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவரிடம் பேசியபோது…

தமிழ் சினிமாவில் விலங்குகளை வைத்து வித்தை காட்டிய காலமெல்லாம் முடிந்துவிட்டதே?

சாதனைச் சிகரம் சாண்டோ சின்னப்பாதேவர் விலங்குகளை வைத்துச் செய்யாத மேஜிக் கிடையாது. இராம.நாராயணன் இன்னொரு முன்னோடி. இவர்கள் அனைவருமே அவர்களது எல்லைகளில் நின்று விலங்குகளை வைத்து நாடகத் தன்மைகொண்ட வணிகப் படங்களை எடுத்தார்கள். இன்று அதுபோன்ற கதைகளுக்கோ சித்திரிப்புக்கோ வேலை இல்லை. ஆனால் ஹாலிவுட், உலக சினிமா, அனிமேஷன் ஆகிய தளங்களில் விலங்குகளுக்குத் தரப்படும் இடமே தனி.

ஏன்.. இந்தியாவில் நாகராஜ் மஞ்சுளே இயக்கிய ‘ஃபான்றி’ என்ற மராத்திப் படத்தில் பன்றியின் இடம் என்ன என்பதை அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் உணர்ந்திருப்பார்கள். அப்படியொரு ‘அரசியல்’பூர்வமான இடத்தைத்தான் இந்தப் படத்தில் ‘ஜெட்லி’க்கு கொடுத்திருக்கிறோம். ஜெட்லி என்பதுதான் இதில் நடிக்கும் பன்றியின் கதாபாத்திரப் பெயர். மார்ஷியல் ஆர்ட் நடிகர் ஜெட்லியைப் போல மின்னல் வேகத்தில் செயல்படும் கதாபாத்திரமாகப் பன்றிக்குட்டி வருகிறது. ஹாலிவுட்டிலிருந்து பன்றிக்குட்டியைத் தருவித்துப் படப்பிடிப்பு நடத்திவருகிறோம். எங்களுக்கு இருக்கும் விலங்குநல அமைப்புகளின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப பன்றியை வைத்து லைவ் காட்சிகளை படம்பிடித்து வருகிறோம். உலகத் தரத்திலான கிராஃபிக்ஸும் இருக்கும். ஏனென்றால் ஜெட்லி ஒரு கட்டத்தில் கதையில் பேசத் தொடங்கிவிடுவார்.

பன்றி என்றாலே இழிவாகப் பார்க்கும் மனப்பாங்கு இங்கே இருப்பதை மறந்துவிட்டீர்களா?

எங்கள் படமே அந்தப் பார்வைக்கு வேட்டு வைக்கத்தானே வருகிறது. மனிதன், விலங்குகள் என்ற பாகுபாட்டைத் தவிர, இறைவன் படைப்பில் இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று எதுவுமே இல்லை. ஆனால் விலங்குகள், பறவைகளில் நாம்தான் ஏற்றத்தாழ்வு பார்க்கிறோம். பன்றி என்றால் நமக்கு ஒவ்வாமை. ஆனால் ஐரோப்பியர்கள் அதைக் கொண்டாடுகிறார்கள். செல்லப் பிராணியாகவும் வளர்க்கிறார்கள். இங்கே நிலைமை அப்படியே தலைகீழ்.

காரில் அல்லது பைக்கில் பன்றி இடித்துவிட்டாலோ மோதிவிட்டாலோ, அந்த வண்டியை அதன் பிறகு வைத்துக்கொள்ளக் கூடாது; அது துரதிர்ஷ்டம் என்று நம்புகிறோம். பன்றி மோதிய விஷயம் வெளியே தெரியாமல், வந்தவிலைக்கு விற்றுவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த மூடநம்பிக்கை எத்தனை முட்டாள்தனம் என்பதைக் கொஞ்சம் நெருக்கமாகச் சிந்தித்தால் புரியும். பன்றி இடித்த வண்டியை விற்பருக்கு வேண்டுமானால் நஷ்டமாக இருக்கலாம். வாங்குபவருக்கு லாபம்தானே?

பன்றி மீதான முட்டாள்தனங்களைக் கொஞ்சம் காசாக்குவோம் என்று நினைக்கிற ஒருவனும் அவனது நண்பனும் ஒரு வெள்ளைப் பன்றிக்குட்டியை ஐரோப்பாவிலிருந்து வாங்கிவந்து இங்கே வளர்க்க ஆரம்பிக்கிறார்கள். அதிலிருந்து அவர்களுக்குச் சோதனை தொடங்குகிறது. அதையெல்லாம் அவர்களால் கடந்து தங்கள் தொழிலில் வெல்லமுடிந்ததா இல்லையா என்பதுதான் கதை.

இது குழந்தைகளை மையப்படுத்திய நகைச்சுவை படமா?

நிச்சயமாக இல்லை; இந்தியாவை நோக்கித் திரும்பும் உலக அரசியலைச் சொல்லும் கதை. வளர்ந்த நாடுகள் என்றாலும் பக்கத்து நாடுகள் என்றாலும் இந்தியா போன்ற வாங்கும் சக்தி கொண்ட ஒரு நாட்டின் மீது நீள்வது அன்புக் கரம்போல் வெளித்தோற்றத்துக்குத் தெரியலாம். ஆனால் அதில் அவர்களது வியாபாரச் சந்தையை விரிவுபடுத்தும் உத்தி ஒளிந்திருக்கும். இந்த உத்தியால் கிழக்கிந்திய கம்பெனி காலத்தைவிட தற்போதுதான் நாம் துண்டில் புழுபோல அதிகமாய்த் துடித்துக்கொண்டிருக்கிறோம்.

நாம் நினைத்தால் தூண்டிலிருந்து துள்ளிக்குதித்து வெளியேறலாம், சின்னக் காயத்தோடு தப்பித்துக்கொள்ளலாம் என்பதைச் சொல்லுகிறோம். நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த ஆபத்தை யாருமே பதிவு செய்ததில்லை. இதைப் பிரச்சாரமாகச் சொன்னால் அது ஆவணப்படம். அதையே புத்திசாலித்தனமாகச் சொன்னால் அது பொழுதுபோக்கு சினிமா. நாங்கள் சொல்லும் விதம் உங்களுக்குப் பிடிக்கும் ‘தாரே ஜமீன் பார்’, ‘த்ரி இடியட்ஸ்’, ‘சூது கவ்வும்’ உயரத்துக்குப் படத்தைக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காகவே திரைக்கதைக்காகப் மூன்று வருடங்களைச் செலவிட்டிருக்கிறோம்.

உங்களது சினிமா பின்னணி?

இயக்குநர்கள் ஜெகன்நாத், ராதாமோகன், அபியும் நானும் திரைக்கதாசிரியர் நாராயணன் என எனக்குச் சினிமாவில் தரமான கலைஞர்கள் பலர் நண்பர்கள். அவர்களிடம் நெருக்கமாகப் பழகி, சினிமா இயக்கத்தையும் எழுத்தையும் கற்றுக்கொண்டு படத்தைத் தயாரித்து, நடித்து, இயக்க வந்திருக்கிறேன்.

யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்?

கௌதம் வாசுதேவ் மேனனின் இணை இயக்குநர் கண்ணன் பொன்னையாவும் நானும் பன்றியை வளர்க்கும் நண்பர்கள் ஜிம்பிலியாகவும் ஜிம்பாவாகவும் நடிக்கிறோம். கதாநாயகியாக புதுமுகம் நயனா நடித்துவருகிறார். கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் பவண் நடிக்கிறார். தேசிய விருதுபெற்ற மலையாள நடிகர் சலீம் குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எங்கள் ஐவருடன் சேர்த்துத் திரைக்கதையில் மொத்தம் 22 முக்கியக் கதாபாத்திரங்கள். கதையில் எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் சரிசமமான முக்கியத்துவம். தற்போது எஞ்சிய கதாபாத்திரங் களுக்கான நட்சத்திரத் தேர்வில் ஈடுபட்டிருக்கிறோம். விரைவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பைத் தொடங்க இருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x