Published : 31 Mar 2017 10:43 AM
Last Updated : 31 Mar 2017 10:43 AM
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று கிராமத்திலிருந்து நிறைய இளைஞர்கள் கிளம்பி வருவார்கள். அப்படி வந்த அனைவருமே சினிமாவில் சாதித்ததில்லை. ஆனால் ராண்டில்யா கொஞ்சம் மாறுபட்ட வளரும் கலைஞர்.
‘நாளைய இயக்குநர்' 1-ம் பகுதியில் நலன் குமாரசாமியோடு இணை இயக்குநர், சில முன்னணி ஒளிப்பதிவாளர்களிடம் உதவியாளர், 25 குறும்படங்கள், 4 கார்ப்பரேட் விவரணைப் படங்கள், 4 வணிக விளம்பரங்கள் ஆகியவற்றின் ஒளிப்பதிவாளர், ‘வன்மம்', ‘மய்யம்' உள்ளிட்ட சில படங்களில் குணச்சித்திர நடிகர் எனக் கிடைத்த வாய்ப்புகள் அனைத்திலும் தனது திறமையை நிரூபித்துவருகிறார். ‘நாளைய இயக்குநர்' 4-ம் பகுதியில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதையும் வாங்கியுள்ளார். அவரிடம் ஒரு சின்ன உரையாடல்..
உங்கள் பின்னணி என்ன?
எந்ததொரு சினிமா பின்னணியிலிருந்தும் நான் வரவில்லை. இதைச் செய்தால் சாதிக்கலாம் என்று சொல்ல ஆள் கிடையாது. என்னுடைய எண்ணமெல்லாம் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பதுதான். சினிமா வழியில் வந்துவிட்டேன், திரும்பச் சென்றால் இந்த உலகம் ஏற்றுக்கொள்ளாது. சினிமாவில் போய்த் தோற்றுப் போய்விட்டான் என்பார்கள். கண்டிப்பாக ஒரு நாள் சாதிப்பேன்.
முதலில் எது உங்கள் விருப்பமாக இருந்தது?
நடிக்க வேண்டும் என்றுதான் வந்தேன். ‘பொல்லாதவன்' படத்தில் ரவுடிகள் கூட்டத்தில் ஒருவனாக நின்று கொண்டிருப்பேன். நடித்துக் கொண்டிருக்கும்போது, ஒளிப்பதிவாளர் தூங்கிக்கொண்டிருப்பார். ஒளிப்பதிவு செய்யும்போது நடிகர் தூங்கிக்கொண்டிருப்பார். இருவருமே விழித்திருந்தால் கண்டிப்பாகச் சண்டை வந்துவிடும். மற்றவர்களுடைய பணியில் தலையிடுவதில்லை. என்ன வேலைக்குக் கூப்பிடுகிறார்களோ, அதைச் சரியாகச் செய்கிறோமா என்பதில்தான் கவனமாக இருப்பேன். நடிகர் - ஒளிப்பதிவாளர் என இரண்டிலுமே சாதிக்க வேண்டும் என்பதுதான் ஆசை.
வீட்டில் என்ன சொல்லிவிட்டுத் திரைத்துறையில் இருக்கிறீர்கள் ?
குடும்பத்தில் யாருமே ஒத்துழைப்பு தருவதில்லை. சுயமாக இந்நிலைக்கு வந்துள்ளேன். குடும்பத்தினருக்கு சினிமா அறிவு கிடையாது. சினிமாவில் சாதித்துவிட்டுத்தான் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்
எது உங்களை இங்கே இழுத்து வந்தது?
கிராமத்தில் சிறு வயதிலிருந்தே போஸ்டர் ஓட்டும் நண்பர்களோடு சுற்றிக் கொண்டு படம் பார்த்துக்கொண்டிருப்பேன். என் வீட்டு வாசலில் போஸ்டர் ஒட்டுவதற்கு ஒரு இடத்தைத் தயார் செய்து கொண்டுவந்து, திரையரங்கில் இலவசமாகப் படம் பார்க்கப் பாஸ் வாங்கினேன். நிறையப் படங்கள் பார்த்தேன். அப்போது ஏன் நாமும் நடிக்கக் கூடாது எனத் தோன்றியது. உடனே சென்னைக்கு வந்து சினிமாவில் பணியாற்றத் தொடங்கினேன். உழைக்க உழைக்க நல்ல அழைப்புகள் வந்துசேரும் என்று நம்புகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT