Published : 02 Mar 2017 08:27 PM
Last Updated : 02 Mar 2017 08:27 PM
“எந்தப் படத்துக்கான விளம்பர நிகழ்ச்சிகளிலும் நான் கலந்துகொள்வதில்லை. ஆனால்; ‘காஸி' படத்துக்காகக் கேட்டபோது என்னால் முடியாது என்று சொல்ல முடியவில்லை. ஏனென்றால் சமீபத்தில் எனக்கு மிகவும் சவாலாக அமைந்த படம் அது” என்று பேசத் தொடங்கினார் இந்தியத் திரையுலகின் முன்னணிப் படத்தொகுப்பாளரான கர் பிரசாத்.
‘காஸி' படத்துக்கான படத்தொகுப்பு எந்த அளவுக்குச் சவாலாக இருந்தது?
நீர்மூழ்கிக் கப்பலை மையமாக வைத்து ஒரு போர்த் திரைப்படம். கதையை எழுதும் முன் நிறைய ஆராய்ச்சிகள் செய்திருந்தார் இயக்குநர். அந்தக் காலகட்டத்தில் நீர்மூழ்கிக் கப்பல் எப்படி இருந்தது, எப்படியெல்லாம் செயல்பட்டார்கள் என்பதை முழுமையாகத் தெரிந்து வைத்திருந்தார். ஆனால், சினிமாவில் ஓரளவுக்கு மட்டுமே அதையெல்லாம் காண்பிக்க முடியும். இயக்குநர் அனைத்தையுமே படமாக்கியிருந்தார். ஆனால், சினிமாவுக்கு இவ்வளவுதான் எனக் குறைத்துக் காட்டியுள்ளோம். அதுதான் ரொம்பவும் சவாலாக இருந்தது.
எந்த வகையான படங்களுக்கு படத்தொகுப்பு செய்வது மிகவும் கடினம்?
‘காஸி' மாதிரியான போர் சார்ந்த படங்கள்தான் மிகவும் கடினம். ஏனென்றால் காமெடி, காதல் என எதையும் திணிக்க முடியாது. எங்குமே தொய்வு விழாதபடி எடிட்டிங் இருக்க வேண்டும். அப்போதுதான் ரசிகர்களை ஒன்ற வைக்க முடியும். ஒரே மாதிரியான காட்சிகளும் இடம்பெற்று விடக் கூடாது.
கடந்த 30 ஆண்டுகளாக இத்துறையில் இருக்கிறீர்கள். ஆனால் வணிக ரீதியான படங்களுக்கு அதிகம் பணிபுரியவில்லையே?
தெலுங்கில் ‘ஒக்கடு', தமிழில் ‘சிட்டிசன்', ‘ரெட்', ‘பில்லா', ‘ஆரம்பம்', ‘துப்பாக்கி' எனப் பல கமர்ஷியல் படங்கள் செய்துள்ளேன். கமர்ஷியல் படத்தையும் முடிந்தவரை யதார்த்தமாகச் சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. அதை ஒப்புக்கொள்ளும் இயக்குநர்களோடுதான் பணியாற்றுகிறேன். ஒரே மாதிரியான படங்களைச் செய்துகொண்டே இருக்க முடியாது. வித்தியாசமான படங்கள் செய்யும்போதுதான் திருப்தி ஏற்படுகிறது. அதற்காகத்தான் அசாமி, இந்தி, தெலுங்கு, தமிழ் என நிறைய மொழி படங்கள் எடிட்டிங் செய்கிறேன். புதிய இயக்குநரோடு புதுமையான களத்தில் பணியாற்றும்போது திருப்தி அதிகம் கிடைக்கிறது.
ஒருசில படங்களைப் படத்தொகுப்பில் பார்க்கும்போதே இவை வெற்றி பெறாது என ஊகிக்க முடியும். அப்போது உங்களுடைய மனநிலை எப்படியிருக்கும்?
படப்பிடிப்பு முடிந்துவிட்ட பிறகு, இது சரியில்லை, காப்பாற்ற முடியாது என்ற வட்டத்துக்குள் செல்ல முடியாது. இதை எப்படிக் காப்பாற்றலாம், இன்னும் எதைச் சேர்க்கலாம் என்றுதான் யோசிப்பேன். படப்பிடிப்பு இன்னும் இருக்கிறது என்றால், இக்காட்சியை மட்டும் எடுங்கள் இன்னும் பிரமாதமாக இருக்கும் எனச் சொல்வேன்.
இப்போது நான் பணியாற்றுகிற படங்கள் அனைத்துமே படப்பிடிப்பு நடக்கும்போதே எடிட்டிங் தொடங்கிவிடும். இது புரியும் எனக் காட்சிப்படுத்துவார்கள், ஆனால் படத்தில் வைக்கும்போது புரியாது. இந்தக் காட்சியை எப்படிக் காட்சிப்படுத்தினால் ரசிகர்களுக்குப் புரியம் என எடுத்துச் சொல்லி அதன்படி படப்பிடிப்பு செய்யச் சொல்வேன்.
டிஜிட்டல் மாற்றங்கள் வந்தவுடன் படத்தொகுப்பாளரின் பணி அதிகமாகியுள்ளதா?
கண்டிப்பாக. முன்பெல்லாம் ஃபிலிம் சுருளில் படமாக்கும்போது நஷ்டமாகிவிடுமே என்பதால் மிகவும் கவனமாக இருப்பார்கள். இப்போது அந்தக் கவலையில்லை. என்ன நடந்தாலும் கிராபிக்ஸில் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலை வந்துள்ளது. இதோடுதான் நாங்களும் பயணித்துக்கொண்டிருக்கிறோம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் உடல் உழைப்பு குறைந்துள்ளது, எங்களுடைய பணி அதிகமாகியுள்ளது. எப்படி வேண்டுமானாலும் காட்சியை உருவாக்கிக்கொள்ளலாம் என்ற நிலைக்கு இயக்குநர்கள் பலர் வந்துவிட்டார்கள். பாதி செட் போட்டுவிட்டு, மீதியை க்ரீன் மேட்டில் படமாக்கி கிராபிக்ஸ் மூலமாகப் பெரிதாகக் காட்டுகிறார்கள். அதையெல்லாம், காட்சிப்படுத்தியாச்சு என நினைத்து எடிட்டிங் செய்ய வேண்டும். கிராபிக்ஸ், பின்னணி இசையை எல்லாம் மனதில் கொண்டுதான் எடிட்டிங் செய்வேன்.
இவற்றோடு தற்போது முதல் டீஸர் வரும்போதே, அப்படத்துக்கு வரவேற்பு எப்படியிருக்கும் என்பதை அது முடிவு செய்துவிடுகிறது. அதற்குப் பிறகு படம் நல்லாயிருக்கு, நல்லாயில்லை என்பது படம் வெளியானவுடன் தெரிந்துவிடும். ஆகவே, டீஸர், ட்ரெய்லர் விஷயங்களை மிகவும் கவனமாகக் கொடுக்க வேண்டியதுள்ளது. அதற்கு நிறைய சிரத்தை எடுத்துச் செய்ய வேண்டியுள்ளது.
ஃபிலிம், டிஜிட்டல் இரண்டில் உங்கள் மனதுக்கு நெருக்கமானது எது?
1998-ம் ஆண்டு வரை ஃபிலி்ம் சுருளோடுதான் எனது பயணம் தொடர்ந்தது. அதனால் ஃபிலிமைப் பார்த்தாலே அதுதான் உண்மை என்பதுபோல ஒரு சந்தோஷமும் அந்த நாட்களின் ஏக்கமும் வந்துவிடும். டிஜிட்டல் முழுவீச்சில் வந்தபோது அதன் மாற்றங்களைக் கண்டு சிலர் பயந்தார்கள். ஆனால், இந்த மாற்றங்கள் வேலையில் ஒரு கச்சிதத்தைக் கொண்டுவர உதவியது. ஃபிலிமிலும் கச்சிதமாகப் பணிபுரிய முடியும், ஆனால் அதற்கு நிறைய நேரம் தேவை. ஃபிலிமில் 3 மாதம் பணியாற்றினாலும் நேரம் போதவில்லையே எனத் தோன்றும். டிஜிட்டலில் அப்படியில்லை. என் மூளை எப்படியெல்லாம் ஒரு கதைக்குள் பயணிக்கிறதோ அதை உடனே என்னால் பார்க்க முடிகிறது. ஒரு காட்சியில் ஒரே ஒரு பிரேமை மட்டும் நீக்க வேண்டும் என்பது டிஜிட்டலில் மிகவும் எளிது. ஃபிலிமில் கற்றுக்கொண்டதையெல்லாம் டிஜிட்டலில் உபயோகிப்பது எளிமையாக இருக்கிறது.
எடிட்டிங்கில் உங்களுடைய மனதுக்கு நிறைவான படங்கள் பற்றி...
மணிரத்னத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்' பிடிக்கும். கதையிலிருந்து எடிட்டிங், திரைக்கதை உத்தி என அனைத்துமே புதுமையாக இருந்தன. மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘வானப்ரஸ்தம்' ரொம்ப சவாலாக இருந்தது. கதகளி நடனக் கலைஞரைப் பற்றிய படம். ஒரு காட்சிக்கு எவ்வளவு கதகளி நடனம் தேவையோ அதை மட்டும் வைத்து முடிக்க வேண்டும். அதுவும் கடினமாக இருந்தது.
நந்திதா தாஸ் இயக்கிய ‘ஃபிராக்', கலவரம் குறித்த படம். கலவரத்தைக் காட்டாமல் நடிகர்களின் பயத்தாலும் சத்தத்தாலும் உணர வைக்க வேண்டும். படத்தில் 5 கதைகள். ஒரு கதைக்கும் இன்னொன்றுக்கும் தொடர்பு கிடையாது. ஒரு கதையைக் காட்டிக்கொண்டே வந்து, இன்னொன்றுக்குள் சென்றால் இரண்டிலுமே ஆர்வம் இருக்காது. இறுதிக் காட்சியே கிடையாது. எடிட்டிங் செய்யும்போது ஒரு காட்சியை இறுதிக் காட்சிக்கு வைத்தால் சரியாக இருக்குமே எனத் தோன்றியது. அதற்குத் தகுந்தாற் போன்று எடிட்டிங்கை மாற்றினேன். அதுவும் மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்த படம்.
தற்போது நிறைய படத்தொகுப்பாளர்கள் வந்துவிட்டார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நல்லதுதான். ஒருசில இயக்குநர்கள் காட்சிப்படுத்தியவுடனே எப்படி எடுத்துள்ளோம் என்பதை உடனே எடிட் செய்து பார்க்க வேண்டும் என நினைப்பார்கள். அந்த மாதிரியான தருணத்தில் கூடவே ஒரு எடிட்டர் இருந்தால் உதவியாகத்தான் இருக்கும். படம் பார்க்கும்போது எங்கு எடிட் செய்திருக்கிறோம் என்பதே தெரியக் கூடாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT