Published : 10 Oct 2014 12:10 PM
Last Updated : 10 Oct 2014 12:10 PM
பாலிவுட்டில் சாதிக்கும் கனவுடன் மும்பை ரயில் நிலையத்தில் அந்த இளைஞன் வந்திறங்கி 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று அவனுக்குப் பல அடையாளங்கள். திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், கவிஞர், சமூகப் போராளி எனப் பல முகங்கள். அவர்தான் ஜாவேத் அக்தர்.
உருதுக் கவிஞரும் பிரபலப் பாடலாசிரியருமான ஜன் நிசார் அக்தர் மற்றும் எழுத்தாளர் சாஃபியா அக்தர் தம்பதியினரின் மகனாகப் பிறந்த ஜாவேத் அக்தரின் ரத்தத்தில் ஏழு தலைமுறை எழுத்தாளர்களின் மரபு கலந்துள்ளது. உருது மொழியில் மதிக்கப்படும் கவிஞரான மஜாஸ் இவரது தாய்மாமன்.
1964-ல் மும்பை வந்த ஜாவேத் அக்தருக்கு முதல் திரைக்கதை வெற்றி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் ‘யாகீன்’ படம் வழியாகக் கிடைத்தது. அடுத்து திரைக்கதை எழுத்தாளர் சலீம் கானுடன் இணைந்து திரைக்கதை எழுதத் தொடங்கிய ஜாவேத் அக்தர் சலீம்-ஜாவேத் என்ற பெயரில் எழுதிய தீவார், ஷோலே, சீதா அவுர் கீதா, டான் ஆகிய படங்கள் பெருவெற்றி பெற்றன. ஷோலே திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவுக்குக் கோபக்கார இளைஞனான அமிதாப் பச்சன் கிடைத்தார்.
ரமேஷ் சிப்பி இயக்கிய ஷோலே திரைப்படம் இந்திப் பட ரசிகர்களை மட்டும் அல்ல, இந்திய மக்கள் அனைவரையும் பித்துப்பிடிக்க வைத்த படமாகும். அகிரா குரசோவாவின் செவன் சாமுராய் படத்தை இந்தியச் சூழலில் அருமையான கௌபாய் கதையாக மாற்றிப் பெருவெற்றி பெற்றார்கள் சலீம்-ஜாவேத் இரட்டையர்கள். ஷோலே படம் வெளிவந்து 39 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் இந்திய சினிமாவின் அரிதான காவியங்களில் ஒன்றாக ஷோலே கருதப்படுகிறது.
1981-ல் சலீம் கான் - ஜாவேத் அக்தரின் தொழிற்கூட்டணி முடிவுக்கு வந்தது. அதன் பிறகு கமல் ஹாசன் நடித்த சாகர், மிஸ்டர் இந்தியா, பேடாப் போன்ற வெற்றிப் படங்களுக்கு திரைக்கதை எழுதி சாதித்தார் ஜாவேத்.
1980-ல் இருந்து உருதுக் கவிதைகளை எழுதத் தொடங்கியிருந்த ஜாவேத், 1981-ல் சாத் சாத் திரைப்படத்தில் பாடல்களை எழுதத் தொடங்கினார். இந்தி சினிமாவின் மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்தவர் அக்தர். 1942 எ லவ் ஸ்டோரி படத்தில் அதன் நாயகன் அனில் கபூர் பாடி இந்தியாவே ரசித்த ‘ஏக் லட்கி கோ தேகோ தோ’ பாடல் இவர் எழுதியதே.
அனில் கபூர் நடித்து மாதுரி தீட்சித்தைப் பெரும் புகழுக்குக் கொண்டுசென்ற ‘தேசாப்’ படத்தில் வந்த ‘ஏக் தோ தீன்’ பாடல் இவருடையதே. தமிழில் வெளியான ஜீன்ஸ் படத்தில் வைரமுத்து எழுதிய பாடல்களை இந்தியில் வெளியான ஜீன்ஸுக்கு மொழிமாற்றியவர் இவரே. வைரமுத்துவைப் போலவே காலம்தோறும் தன்னை நவீனப்படுத்திக்கொள்ளும் ஜாவேத் அக்தர், ஏ.ஆர்.
ரஹ்மானின் இசையில் அமீர் கானுக்குப் பெரும்புகழைக் கொடுத்த லகான் படத்திற்கும் பாடல்களை எழுதினார். சமீபத்தில் விஸ்வரூபம் படத்தின் இந்தி வடிவமான ‘விஸ்வரூப்’ படத்திற்கும் இவர்தான் பாடலாசிரியர். திரைப்பாடலுக்குப் பலமுறை தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
கவிஞர் ஜாவேத் அக்தர் முக்கியமான சமூகச் செயல்பாட்டாளரும்கூட. பாபர் மசூதி தகர்ப்பு, குஜராத்தில் நடந்த இனப் படுகொலைகளுக்கு எதிராகத் துணிச்சலாகக் குரல்கொடுத்தது மட்டுமின்றி, சட்டப் போராட்டங்களையும் தன் மனைவியும் நடிகையுமான ஷபானா ஆஸ்மியுடன் சேர்ந்து நடத்திவருகிறார்.
2010-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாவேத் அக்தர், இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களின் கவுரவம் மற்றும் பொருளாதாரத்தை மீட்கும் காப்பிரைட் திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்ததில் முன்னின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT