Published : 04 Feb 2017 08:35 AM
Last Updated : 04 Feb 2017 08:35 AM
ஐடி துறையில் வேலை செய்யும் கிருஷ்ணா (ஜெய்), சக ஊழிய ரான திவ்யாவை (ப்ரணிதா) காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் கிருஷ்ணாவை உதறித் தள்ளும் திவ்யா, வேறொருவரை விரும்புகிறார். இதில் மனமுடையும் கிருஷ்ணா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார். சாகும் முன் தனது உயிர் நண்பர்களான ரமேஷ் (கருணாகரன்), மொய்தீன் (காளி வெங்கட்), சௌமி நாராயணன் (நவீன்) ஆகிய மூவருக்கும் தகவல் தருகிறார். பதறும் நண்பர்கள் கிருஷ்ணாவைத் தேடிப் புறப்படுகிறார்கள். அந்த முயற்சி யில் ஆளுக்கொரு பிரச்சினையில் மாட் டிக்கொள்கிறார்கள். அவற்றிலிருந்து அவர்களால் வெளியே வர முடிந்ததா? கிருஷ்ணாவைக் கண்டுபிடித்துக் காப் பாற்ற முடிந்ததா? கிருஷ்ணாவின் காதல் என்ன ஆயிற்று?
அறிமுக இயக்குநர் மகேந்திரன் ராஜமணி, புதுமையான கதையைத் தேடி மெனக்கெடவில்லை. மாறாக, திரைக்கதை, கதாபாத்திரங்கள், சுவா ரஸ்யமான திருப்பங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியிருக்கிறார். படம் முழுவதிலும் நகைச்சுவையை அழுத்த மாகப் படர விட்டிருக்கிறார். காதல் தோல்வி, தற்கொலை, கொலைவெறித் தாக்குதல் ஆகியவை திரைக்கதையில் இருந்தாலும் நகைச்சுவையே பிரதான இடம் பெறுகிறது. கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளிலுமே சிரிப்புக்கு உத்தரவாதம் உண்டு.
நண்பர்கள் கிருஷ்ணாவைப் பதற்றத் துடன் தேடிக்கொண்டிருக்க, அவரோ ஒரு விடுதியில் மது பாட்டில்களையும் விஷத்தையும் வைத்துக்கொண்டு செய்யும் லூட்டிகள் ரசிக்கவைக்கின்றன. சிறைக் காட்சி உள்ளிட்ட சில காட்சிகள் நேர்த்தியாக உள்ளன. தம்பி ராமய்யா விடம் ஜெய் பேசும் காட்சிகளில் திரையரங்கம் சிரிப்பில் அதிர்கிறது. இவ்வளவு இருந்தும் முக்கியமான திருப்பங்களில் பாலியல் அம்சங்களைக் கலந்திருப்பது முகம் சுளிக்க வைக்கிறது.
கிருஷ்ணா, அவரது நண்பர்கள், கருப்பு ராக் ஆகியோரின் பாத்திரங் களுக்குத் தந்திருக்கும் முழுமையைக் கதாநாயகி திவ்யாவின் கதாபாத்திரத் துக்குத் தராமல்போனது உறுத்தல். துளியும் வலுவற்ற மேலோட்டமான பாத்திர வார்ப்பு அந்தப் பாத்திரத்தை மலினப்படுத்துவதுடன் கதையையும் பலவீனப்படுத்துகிறது.
காதல் தோல்விக்கான தீர்வு சாவதில் இல்லை என்ற சீரியசான செய்தியை ஜாலியான காட்சிகள் வழியே சொல்ல முயல்கிறது படம். விறுவிறுப்பாக நகரும் படத்தில் கதாநாயகன் தற்கொலைக்கு முயற்சிக்கும் காட்சிகள் இழுத்துக் கொண்டே செல்வதும், ரவுடி கருப்பு ராக்கைப் பலர்துரத்திச் செல்லும் காட்சிகளின் நீளமும் எரிச்சலூட்டு கின்றன. வசனங்கள் படத்தின் பெரிய பலம்.
காதல் தோல்வி என்றால் அதற்குப் பெண்தான் காரணமாக இருப்பாள் என்னும் தமிழ் சினிமாவுக்குப் பழக்கமான பொறுப்பற்ற குற்றச் சாட்டையே இந்தப் படமும் முன் வைக்கிறது. சந்தானம் வரும் காட்சி யிலும் இதே அம்சம் மீண்டும் வலியுறுத் தப்படுகிறது. இந்தக் கருத்து மீண்டும் மீண்டும் திரைப்படங்களில் முன் வைக்கப்படுவதால் நிஜ உலகில் பெண்களுக்கு எதிரான உணர்வுகள் அதிகரிப்பதற்கான அபாயம் இருக் கிறது. பெண்களுக்கு எதிரான நியாய மற்ற தாக்குதல் இது என்று நமது இயக்குநர்கள் ஏன் உணர்வதில்லை?
ஜெய்யின் நடிப்பு மெருகேறிவரு கிறது. ஆனால், அவர் ஒரே மாதிரி வசனம் பேசுவதைத் தாங்க முடியவில்லை. காளி வெங்கட், தம்பி ராமைய்யா, ராஜேந்திரன், நவீன் ஆகியோரும் கவர்கிறார்கள். தலா ஒரு காட்சியில் வந்தாலும் சந்தானம், அஞ்சலி இருவரும் நிறைவு.
பளிச்சென்று தோற்றமளிக்கும் ப்ரணிதா பலவீனமான கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார் என்றாலும் அவதூறைச் சுமக்கும் கதாபாத்திரத்தைத் துணிச்சலாக ஏற்றுக்கொண்டதற்காகவே அவரைப் பாராட்டலாம்.
துள்ளலான பாடல்கள், காட்சி களுக்கேற்ற பின்னணி இசை ஆகிய இரண்டிலும் ஜமாய்த்திருக்கிறார் இசை யமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி. ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி தனது பங்களிப்பைச் சரியாகச் செய்திருக்கிறார்.
யதார்த்த நடப்புகள் மீதான எள்ளல், நட்பின் உயர்வைக் காட்டும் காட்சிகள், அளவான சென்டிமெண்ட், கொஞ்சம் ஆக்ஷன் என்று பொழுதுபோக்குப் படத்துக்கான கலவையைச் சரியாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT