Published : 10 Jan 2014 12:00 AM
Last Updated : 10 Jan 2014 12:00 AM
பிரபாகரன் இறுதிப் போரில் கொல்லப்பட்டுவிட்டார். கொழும்பில் கொண்டாட்டம் தொடங்குகிறது. பிரபாகரனின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. சாலைகளெங்கும் சிங்களக் கொடிகளை அசைத்தபடி இளைஞர்கள் உற்சாகக் கூச்சல் இடுகிறார்கள். சிறுவர்கள் அதி நவீனப் பொம்மைத் துப்பாக்கியால் தங்களுக்குள் சுட்டுக்கொள்கிறார்கள். பட்டாசுகளின் வெடிச்சத்தங்கள் விண்ணைப் பிளக்கின்றன. Between tomorrow and yesterday என்னும் சிங்களப் படத்தின் தொடக்கக் காட்சி இதுதான். இந்த ஆண்டு வெளிவந்துள்ள இந்தப் படம் போருக்குப் பிறகான இலங்கையின் இன்றைய சிக்கலைச் சித்தரிக்கிறது. போரில் ஈடுபட்ட இருதரப்பையும் இப்படம் விமர்சிக்கிறது. இதன் இயக்குநர் நீலேந்திர தேசப்பிரியா.
போர் முடிவடைந்த பிறகு தென்னிலங்கையைச் சேர்ந்த பலரும் வடபகுதிக்குச் சுற்றுலா செல்கிறார்கள். விடுதலைப் புலிகள் இருந்தவரை வட பகுதி என்பது சிங்களவனுக்கு வெறும் சொற்களால் ஆன கற்பனை நிலம்தான். அவர்களுக்கு வடபகுதியைப் பார்க்க வேண்டும் என்னும் ஆர்வம் இருக்கிறது. மேலும் தங்கள் படைகள் எதிரியை வீழ்த்திய இடத்தைக் காணும் பெருமித உணர்வு அவர்களிடம் இருக்கிறது. விமல், சுராஜ், துங்கா ஆகிய மூன்று இளைஞர்களும் விமலின் ஆட்டோவில் செல்லத் திட்டமிடுகிறார்கள். இவர்கள் மூவரும்தான் கதையின் மையப் பாத்திரங்கள். இதில் சுராஜ் பல்கலைக்கழக மாணவன். அவனுக்கு காதலியின் அண்ணனுடன் பகை இருக்கிறது. “பார்த்தாயா? அது போல் உன்னையும் சுட்டுவிடுவோம்” என ஒரு காட்சியில் சுராஜைப் பார்த்து அவன் மிரட்டுகிறான். சுராஜ் எப்போதும் பயத்துடனும் உணர்ச்சிவசமாகவும் இருக்கிறான். அவன் உருவம் திரையில் தோன்றும் காட்சியில் ஒரு மெல்லிய சோகப் பின்னணி இசை வந்து செல்கிறது. விமல் ஆட்டோ ஓட்டுபவன். கல்யாணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான். விமலுக்கு தன் பெரியப்பாவுடன் சொத்துத் தகராறு இருக்கிறது. அகிம்சையின் குறியீடான வெள்ளைப் புறாக்களை வளர்த்துவருபவன். துங்கா குடும்பஸ்தன். இரு குழந்தைகளுக்குத் தகப்பன். தன் எளிய வாழ்க்கை குறித்த அச்சமும் பதற்றமும் கொண்டிருக்கிறான்.
திட்டமிட்டபடி பயணம் விமலின் ஆட்டோவில் நந்திக் கடலை நோக்கிச் செல்கிறது. அங்கு அவர்களைப் போல் சுற்றுலா வரும் ஜெஸிதா என்ற பெண்ணுடன் விமலுக்குக் காதல். சுற்றுலா வந்தவர்கள் எல்லாரும் ஒன்றாக இணைந்து இரவில் பாடுகிறார்கள். அதில் கும்மாளமான சிங்களப் பாடல்களைப் பாடுகிறார்கள். மறுநாள் பகலில் நந்திக் கடலில் குளித்துக் கும்மாளமிடுகிறார்கள். ஜெஸிதாவின் செல்போன் அழைப்பு வர விமல் கரையேறி வருகிறான். பேச்சின் ஊடே கால்களால் மண்ணைத் துழாவும் விமல் மண்ணுக்கடியில் ஒரு பாலித்தீன் பையைக் கண்டுபிடிக்கிறான். அழைப்பைத் துண்டித்துவிட்டுத் தன் இரு நண்பர்களையும் கூட்டிக்கொண்டு சட்டெனப் புறப்படுகிறான். கண்டெடுத்த புதையலை நண்பர்களுக்குக் காண்பிக்கிறான். அது ஒரு நவீனக் கைத்துப்பாக்கி. அதன் பிறகு அந்த மூவரின் சுற்றுலாப் பயணத்தில் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. துங்கா அதை வீசி எறிந்துவிடும்படி கேட்டுக்கொள்கிறான். ஆனால் திருமணம் ஆகாத இளைஞர்களான, வன்மம் வளர்த்துவைத்திருக்கும் சுராஜுக்கும் விமலுக்கு துப்பாக்கி வேண்டியிருக்கிறது. துப்பாக்கி நண்பர்களுக்குள் நம்பிக்கையின்மையை வளர்க்கிறது. திரும்பும் இடமெங்கும் வாகனச் சோதனைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. பதற்றமும் நீள்கிறது.
எல்லாவற்றையும் தாண்டி துப்பாக்கியுடன் கொழும்பிற்கு வந்து சேர்கிறார்கள். துப்பாக்கியை விமல் தன் புறாக் கூண்டில் மறைத்து வைக்கிறான். அந்தத் துப்பாக்கி விமலின் பெரியப்பாவை மிரட்டுகிறது. அந்தத் துப்பாக்கியால் சுராஜ் காதலியின் அண்ணன் காயம் அடைகிறான். அது துங்காவால் அவன் வீட்டில் மறைத்து வைக்கப்படுகிறது. இறுதியாக குண்டுகள் நிரப்பப்பட்ட அந்தத் துப்பாக்கி அச்சுறுத்தும் வகையில் துங்காவின் குழந்தைகளின் கைகளில் விளையாட்டுப் பொருளாகிறது. இதன் பிறகு நடக்கும் விபத்தால் மூவரும் வெவ்வேறு தருணங்களில் கைதுசெய்யப்படுகிறார்கள். அந்த ஆயுதம் புலிகளுடையது என்பது நிரூபணமாகிறது. விமலையும் துங்காவையும் இலங்கை ஊடகங்கள் சிங்களப்புலிகள் என்கின்றன. சுராஜின் தாய், ஒரு தமிழச்சி என்பதும் விசாரணையில் தெரிய வருகிறது. அவன் புலியாகிறான். ஜெஸிதாவும் சிங்களப்புலியாகக் கைதுசெய்யப்படுகிறாள். சிறைக்குச் செல்லும் ஜெஸிதா இறந்த உடலாக ஒரு ஏரிக் கரையின் அருகில் கிடக்கும் காட்சி வந்து செல்கிறது. அவள் ராணுவத்தாரால் கொல்லப்பட்டிருக்கக்கூடும்.
இறுதிக் கட்டப் போர் எனச் சித்தரிக்கப்படும் இந்தப் போரின் முடிவு இலங்கையின் சாமான்ய மக்களின் வாழ்க்கையைப் பதற்றம் மிக்கதாக மாற்றியிருப்பதுதான் இப்படத்தின் மையம். போரின் வெற்றி தங்கள் வாழ்க்கைக்கான சுபிட்சத்தைக் கொண்டுவந்துவிடும் என நம்பும் இலங்கையின் சாமான்ய மக்களின் வாழ்க்கை முன்பு இருந்ததைவிடவும் சிக்கலாக மாறுகிறது. இந்தப் போரின் வன்முறை ராணுவத்தின் கைகளில் இருந்து மக்களின் கைகளுக்கு மாறுகிறது. அந்த வன்முறையைத்தான் இப்படம் துப்பாக்கியாக உருவகிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT