Published : 11 Apr 2014 10:37 AM
Last Updated : 11 Apr 2014 10:37 AM
சொர்ணமுகி என்ற சினிமாவுக்கான விழா. படத்தின் நாயகன் பார்த்திபன் என்பதால் அழைப்பிதழில் தொடங்கி அத்தனையிலும் வித்தியாசம் தெரிந்தது. படத்தின் கதை காதல் தொடர்பானது. எனவே பிரபல இயக்குனர்களைக் கொண்டு காதல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளச் செய்திருந்தார் சொர்ணமுகி இயக்குனர் கே.எஸ். அதியமான்.
இளம் இயக்குனர்கள் காதல் பாடிய அந்த மேடையில் கம்பீரமாக ஏறி நின்றார் இயக்குனர் பாலுமகேந்திரா. மெல்லிய ஆனால் அழுத்தமான குரலில் அவர் தன் பால்ய காதல் கதையைப் பகிர்ந்துகொண்டார். அவரும் அவருடைய பள்ளி சிநேகிதியும் கையில் பையுடன் ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்ற நாட்களையும் பனை மரத்தடியில் இயற்கை உபாதையைக் கழித்த பொழுதுகளையும் அவர் சொல்லிக்கொண்டே செல்ல, எல்லோருமே அந்த சிங்கள கிராமத்து ஒத்தையடிப் பாதையில் நடைபோட்டோம்.
எத்தனையோ விதமான காதல் கதைகள் அந்த அரங்கத்தில் அரங்கேறியிருந்தாலும் பாலுமகேந்திரா உண்மைக்கு மிக அருகில் நின்று கதை படித்தார். அந்தக் காதலில் இருந்த உண்மை உப்பும் உறைப்புமாக இருந்தது.
அடுத்த நாள் காலையில் பாலுமகேந்திரா அலுவலகத்தை அடைந்தேன். கதைச் சுருக்கத்தைக் கேட்ட பாலுமகேந்திரா சின்னதாகச் சிரித்தார். ‘அடுத்தவன் காதல்ல எவ்ளோ ஆர்வம்..?’ என்று மறுபடியும் சிரித்தவர், ‘என்ன புத்தகம் படிச்சுகிட்டிருக்கே..?’ என்று குறுக்கு விசாரணை செய்தவர், வாசிப்பைப் பற்றி எப்படி நேசிக்க வேண்டும் என்று ஒரு நண்பனைப் போலச் சொன்னவர், ‘நாளைக்கு பார்க்கலாமா?’ என்றபடி எழுந்து உள்ளே போய்விட்டார்.
அடுத்தடுத்த நாட்களில் என் அலுவலகம் பாலுமகேந்திரா முகத்தில்தான் விடிந்தது. அலுவலகத்தில் அழகான காதல் கதைக்கு கேரண்டி சொல்லியிருந்ததால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு வேறு!
திடீரென்று பிடித்து உட்கார வைத்து, ‘அந்தக் காதல் கதையைவிட அழகான கவிதை ஒண்ணு தரட்டுமா..?’ என்றார். கையில் ஒரு காகிதமும் தயாராக இருந்தது. அதில் இருந்த வட்டத்துக்குள் சிக்காத சதுரங்கள் என்ற முதல் வரி கண்ணில் பட்டது. அடுத்தடுத்து இருந்த வரிகளை அவர் காட்டவில்லை.
நான் அவரைத் துரத்தத் தொடங்கிய நான்காவது நாள். அலுவலகத்தில் மிச்சம் ஒரு பாரம். அதாவது முப்பத்தி யிரண்டு பக்கங்களே மீதியிருக்கின்றன. அதற்குள் பாலுமகேந்திராவைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். ஆனால், வட்டத்துக்குள் சிக்காத சதுரங்கள் என்ற வரியைத் தவிர வேறு எதுவும் தேறவில்லை.
அடுத்த நாளும் பாலுமகேந்திராவின் அலுவலகத்தில் காத்திருந்தேன். சின்னச் சிரிப்போடு வந்தார் பாலுமகேந்திரா. அவர் முகத்தில் என்னுடனான சினேகம் தெரிந்தது. ‘குட் மார்னிங் மை பாய்…!’ என்றார்.
என்னை எதுவுமே கேட்காமல், ‘நேத்து ஒரு சினிமா பார்த்தேன்… நல்ல அனுபவம்…’ என்று எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் ஆரம்பித்தார். அங்கே முப்பத்தியிரண்டு பக்கங்களுக்கான பட்டியல் தயாராகியிருக்கும். பாலுமகேந்திரா என்று போட்டு மூன்று பக்கங்களை ஒதுக்கியிருப்பார்களே என்ற கவலை முகத்தில் தெரிய நின்றிருந்ததைப் பார்த்துவிட்டு, ‘இந்த ஒரு வாரம் இங்கே சுத்துனதுல என்ன கிடைச்சுது...?’ என்றார்.
‘பிரிண்ட் பண்ற மாதிரி எதுவுமே கிடைக்கலையே… ஒரு பத்து நிமிஷம் அந்த பள்ளிக்கூட காதலைப் பத்திப் பேசினீங்கன்னா நல்லாயிருக்கும்…’ என்றதும், கொஞ்சம் சீரியஸானது முகம். ‘எத்தனை விஷயங்கள் கண் முன்னே இருந்தது. அதையெல்லாம் விட்டுட்டு இன்னமும் அந்த காதல்லயே சுத்திகிட்டிருக்கியா..?’ என்றார்.
‘அதுதான் அசைன்மெண்ட்… அந்த வேலையைப் பார்க்கணுமே சார்…’ என்றதும், ‘ஓகே… ஆனா, அந்தக் காலத்துல நடந்ததை இப்ப சொன்னா ஆபாசமா இருக்கும் ஆனா, அன்னிக்கு நடந்ததெல்லாம் எனக்கு பவித்ரமான விஷயம். அதை நான் சொன்னா வெறுமே வேடிக்கை பார்க்கிற மாதிரி இருக்கும். அது அந்தப் பொண்ணுக்கு செய்ற துரோகம் மட்டுமில்லே எனக்குள்ளே இருக்கற பாலுவுக்குச் செய்ற துரோகம் அந்தச் சின்னப் பையன் ரொம்ப வேதனைப்படுவான்… அதனால, நீ புறப்படு. எப்ப வேணா நீ வந்துட்டு போலாம் ஆனா, இந்தக் கட்டுரைக்காக இன்னொரு தடவை வராதே…’ என்றார்.
வழக்கமாக வாரத்துக்கு மூன்று நான்கு கட்டுரைகள் வெளியாகும். ஆனால், அந்த இதழில் பெயரைத் தேடிப் பார்த்தாலும் கிடைக்காது என்கிற நிலை. ஆனால் நான் வருத்தப்படவில்லை. என்னையும் சமமாக மதித்துத் தன்னைப் பற்றிப் பேசி, என்னைப் பற்றி விசாரித்து, எனக்குப் படிக்க சில விஷயங்களைச் சொல்லிக் கொடுத்து, சினிமாவைப் பற்றி என்னோடு விவாதித்து… பெருமையாக இருந்தது.
அன்று எழுத முடியாமல் போனது இன்று எழுதுவதற்காகத்தானோ..?!
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT