Published : 24 Sep 2016 10:31 AM
Last Updated : 24 Sep 2016 10:31 AM
கட்டுப்பாட்டை இழந்து ஓடும் ரயிலில் நடக்கும் ஒரு காதல் பயணமே ‘தொடரி’.
டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் ரயில் கேன்டீனில் வேலைபார்க்கும் ஊழியர், பூச்சியப்பன் (தனுஷ்). அதே ரயிலில் பயணிக்கும் நடிகை ஷாவின் (பூஜா ஜாவேரி) ஒப்பனை உதவியாளர் சரோஜா (கீர்த்தி சுரேஷ்). முதல் பார்வையிலேயே கீர்த்தியின் மீது காதலைப் படர விடுகிறார் தனுஷ். ஆரம்பத்தில் பிடி கொடுக்காத கீர்த்தி ஒரு கட்டத்தில் மனம் மாறுகிறார். அதே ரயிலில் மத்திய அமைச்சர் ராதாரவி பயணிக் கிறார்.ரயில் ஓட்டுநர் ஆர்.வி.உதயகுமாருக்கும், உதவியாளர் போஸ் வெங்கட்டுக்கும் மோதல் ஏற்படுகிறது. அதன் பிறகு ரயில் மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொள்கிறது. அந்த ஆபத்து என்ன? தனுஷ், கீர்த்தி காதல் என்ன ஆனது? பயணிகளின் நிலை என்ன?
பயணிகளுக்கு இணையாகப் பார்வையாளர்களுக் கும் அந்தப் பதற்றத்தைக் கடத்துவதில் இயக்குநர் பிரபு சாலமன் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார்.ஆனால், இந்தப் புள்ளியை எட்டுவதற்கு முந்தைய 45 சொச்சம் நிமிடங்கள் கடுமையான அலுப்பை ஏற்படுத்திவிடுகின்றன.
காதல், ஒரேவிதமான காமெடி ஆகியவற்றுக்காகத் தேவைக்கும் மிக அதிகமான நேரம் செலவாகி இருக்கிறது. அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிக்கும் தனுஷுக்கும் இடையே ஏற்படும் மோதல் முதலில் சுவாரஸ்யம் சேர்த்தாலும், போகப் போக அது வேடிக்கை ஆகிவிடுகிறது.
ரயில் தறிகெட்டு ஓடத் தொடங்கிய பிறகு, அந்த ரயிலுக்கு வெளியே இருப்பவர்களைக் குழப்பி யடிக்கும் திருப்பங்கள் பொருத்தமாகவே அமைந் திருக்கின்றன. நெருக்கடியை அமைச்சர் அணுகும் விதம், ஊடகங்கள் எதிர்கொள்ளும் விதம், பயணிகளின் பதற்றம், நிர்வாகத்தினரின் சொதப்பல் கலந்த முயற்சிகள் ஆகியவை சித்தரிக்கப்பட்டுள்ள விதம் இழுவை யைக் கொஞ்சம் குறைக்கிறது.
உயிர் போகிற அபாயத்துக்கு நடுவே, ஆளுக்கு ஆள் நடத்தும் காமெடிக் கூத்துகள் பெரிதும் எரிச்சலையே கிளப்புகின்றன. பயணிகளைக் காப்பாற்றுவதில் நாயகன் முக்கியப் பங்காற்றுவார் என்பது தெரிந்ததுதான் என்றாலும் சூப்பர் ஹீரோத்தனத்தை மட்டுப்படுத்தியிருப்பது ஆறுதல்.
தீவிரவாதிகள் இல்லை என்று தெரிந்த பிறகு மீட்புப் பணியில் அரசின் நடவடிக்கையைச் சித்தரித்த விதம் தலையைச் சுற்றவைக்கிறது. ஹெலிகாப்டர் தனது முயற்சியை பேருக்குச் செய்துவிட்டு, செய்வதறியாமல் வானத்தில் சும்மா சுற்றிக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு தறிகெட்டு ஓடும் ரயிலில் பற்றி எரியும் பெட்டிக்கு மேல் நின்றுகொண்டு தனுஷ் ஆடுகிறார், பாடுகிறார். இயக்குநருக்கு இருந்தாலும் இவ்வளவு ‘நகைச்சுவை’ உணர்வு கூடாது! அதுவும்போக, உதட்டசைவுகள் மூலம் அடிக்கடி - சத்தமின்றி உதிர்க்கப்படும் கெட்ட வார்த்தைகள் தேவைதானா?
ரயில் நிலைய அதிகாரிகளின் உரையாடல்கள், அமைச்சரின் பேச்சுக்கள் ஆகியவை யதார்த்தம். காட்சி ஊடகங்கள் குறித்த கேலிகள் மிகையானதாக இருந்தாலும், ஆங்காங்கே கைதட்டல் வாங்கவும் செய்கிறது.
அதிகமான சவால் எதுவும் இல்லாத வேடத்திலும் தனுஷ் பக்குவமான நடிப்பைத் தந்திருக்கிறார். தம்பி ராமய்யா, கருணாகரன் ஆகியோர் நகைச்சுவைக்கு மெனக்கெட்டு இருக்கிறார்கள். வெள்ளந்திப் பெண்ணாக கீர்த்தி சுரேஷின் நடிப்பு கொஞ்சம் கச்சிதம்... கொஞ்சம் ஓவர் ஆக்ஷன். ராதாரவியின் அலட்டிக்கொள்ளாத நடிப்பு சிறப்பு.
பின்னணி இசையில் கவனம் ஈர்க்கிறார் இமான். கடைசிப் பாடல் மட்டும் மனதில் தங்குகிறது. வி.மகேந்திரனின் ஒளிப்பதிவு பதற்றத்தைக் கூட்ட துணைபுரிகிறது. அதையும் தாண்டி துருத்தலாகத் தெரிவது ‘கிராஃபிக்ஸ்’ வேலை!
ரயில் கட்டுப்பாட்டை இழந்த பிறகு தான் இயக்குநருக்குப் படத்தின் மீது கட்டுப்பாடு வருகிறது. அதன் பிறகேனும் திரைக்கதை வண்டியைத் தடம் மாறாமல் செலுத்தியிருக்கலாம். ‘நிறுத்த முடியாத’ வண்டியின் ஓட்டத்தை ஆங்கில பாணியில் காட்ட நினைத்தவர், ஆங்கிலத்துக்கான தர்க்க நியாயங்களிலும் கவனம் செலுத்தி இருக்க வேண்டாமா!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT