Published : 14 Mar 2017 09:03 AM
Last Updated : 14 Mar 2017 09:03 AM

திரை விமர்சனம்: நிசப்தம்

எட்டு வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படு வதால் ஏற்படும் பாதிப்புகளை யும், அவற்றிலிருந்து மீளும் வழியையும் உரக்கச் சொல்கிறது ‘நிசப்தம்’.

பெங்களூருவில் வசிக்கும் ஆதி (அஜய்) ஆதிரா (அபிநயா) தம்பதியின் ஒரே மகள் எட்டு வயது பூமிகா (பேபி சாதன்யா). எளிய நடுத்தர வாழ்வை நடத்தி வரும் இக்குடும்பத்தில் திடீரென புயல் வீசுகிறது. பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் பூமிகா, ஒரு காம வெறியனால் பிய்த்தெறியப்படு கிறாள். கொடூரமான பலாத்காரத் துக்குப் பின் குற்றுயிராக மீட்கப் படும் அவள், உடலாலும் மனதாலும் அடையும் சேதாரங்களைக் கண்டு, அவளது பெற்றோரின் வாழ்க்கை நொறுங்கிப்போகிறது.

ஊடகங்கள் செய்திக்காக ஓடி வருகின்றன. சட்டம் அந்தக் கொடூரனைத் தேடு கிறது. சிதைக்கப்பட்ட சிறுமியோ, அப்பா உட்பட எந்த ஆணையும் காண முடியாமல் பீதியில் உறைந்து கிடக்கிறாள். குழந்தையின் உடலை யும் மனதையும் தேற்றி, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடிந்ததா?

உண்மைச் சம்பவத்தில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கும் ‘நிசப் தம்’, பார்வையாளர்களின் இதயங் களில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தி விடுகிறது. தெளிந்த நீரோடைபோல் செல்லும் ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி, அந்த நீரோடையைக் கானல் நீராக்கிவிடும் சம்பவம், சம்பவத்துக்குப் பிறகான போராட் டம் என நேர்கோட்டில் செல்லும் திரைக்கதை, சம்பவத்தை நேரடி யாகக் காணும் சாட்சிகளாகப் பார்வையாளர்களை மாற்றி விடுகிறது.

பெற்றோரின் வலியையும் போராட்டத்தையும் மிகையின்றிப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மைக்கேல் அருண். பாதிக்கப்பட்ட பிஞ்சு உள்ளத்துக்கு நேரும் உளவியல் சிக்கல்களின் அடர்த்தி யையும் அதைக் குணமாக்கத் தேவைப்படும் உளவியல் சிகிச்சை யின் அவசியத்தையும் காட்டியுள்ள விதம் வலிமையானது.

இதுபோன்ற படங்களுக்குப் பொறுப்புணர்வும் நுட்பமும் நுண் ணுணர்வும் மலினமான பரபரப் பைத் தவிர்க்கும் போக்கும் அவ சியம். மைக்கேல் அருண் அணுகு முறையில் இவை அனைத்தும் இருக்கின்றன. கொடூரத்தைக் காட்சிப்படுத்துவதில் பொறுப்புணர் வோடும் கண்ணியத்துடனும் செயல்பட்டிருக்கும் இயக்குநர், குற்றத்தின் பாதிப்பை வசனங் களாலும் இலைமறை காய்போன்ற காட்சிகள் வழியாகவும் வலுவாகச் சித்தரித்திருக்கிறார். குழந்தையின் வேதனைகளை நுட்பமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

பல இடங்கள் மனதைத் தொடு கின்றன. கார்ட்டூன் பாத்திரங்கள் போல வேடமிடுவதற்கான பொருட் களை வாடகைக்கு விடுபவர் காட்டும் கரிசனம் நம் மனதை அசைத்துவிடுகிறது. குழந்தைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மருத் துவர் சொல்லும்போது பூமியின் அப்பா மட்டுமல்ல; பார்வை யாளர்களும் அழுகிறார்கள். பூமிகா மீண்டும் பள்ளிக்குச் செல்லும் போது குழந்தையின் சீருடைக்குள் இயற்கை உபாதைக்கான சிறு பையை அவளது அம்மா பொருத் தும் காட்சியில் யாராலும் கண்ணீ ரைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. இக்காட்சிகள் பெண் குழந்தை களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடி யவை. மாறுவேடத்தில் வந்து ஆறுதல் அளிக்கும் தந்தையை பூமிகா கண்டுபிடிக்கும் இடம் நெகிழவைக்கிறது.

உளவியல் சிகிச்சையாளர், காவல்துறை பெண் அதிகாரி ஆகியோர் குழந்தையிடம் நடந்து கொள்ளும் விதம் இதுபோன்ற சம்பவங்களைக் கையாள்வதற் கான பாடம். பூமிகாவின் நண்பர் கள் அவளை அரவணைத்துக் கொள்ளும் விதத்தில் குழந்தை களின் களங்கமற்ற உலகம் அழகாக வெளிப்படுகிறது. நீதிமன்றக் காட்சி கள் பதைக்கவைக்கின்றன.

இதுபோன்ற வழக்குகளில் காவல்துறையின் அணுகுமுறை, சட்ட நடைமுறைகள், குற்றம் இழைத்தவர்களுக்கு காட்டப் படும் சட்டப்படியான சலுகைகள் ஆகியவற்றையும் இயக்குநர் பொருத்தமாகக் காட்சிப்படுத்து கிறார். குற்றவியல் சட்ட நடைமுறை கள், ஏற்கெனவே பாதிக்கப்பட்ட வர்களின் காயங்களைக் குத்தி மேலும் புண்ணாக்கும் காரியத்தைச் செய்கின்றன என்பதையும் சொல்லியிருக்கிறார்.

குழந்தை சாதன்யாவின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை. வலியையும், வேதனை யையும், அதிலிருந்து மீண்டு வரும் உணர்வையும் அவ்வளவு அற்புதமாக கொண்டுவருகிறார். அஜய், அபிநயா இருவரும் பாத் திரம் உணர்ந்து செய்திருந்தாலும், இதுபோன்ற பாத்திரங்களுக்கு இன்னமும் வலுவான நடிப்பு தேவைப்படுகிறது. உளவியல் சிகிச்சையாளர் ராது, காவல் அதிகாரி கிஷோர் ஆகியோர் கதாபாத்திரங்களாகவே வெளிப் படுகின்றனர்.

பாத்திரங்களின் வலியையும் போராட்டங்களையும் துல்லிய மாகப் பிரதிபலிக்கிறது ஷான் ஜாசீலின் இசை. ‘மண் மீது பெண்ணாக’ என்ற பாடல் திரையரங்கை விட்டு வந்த பிறகும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள் மனதைத் தொடுகின்றன.

ஒரு படைப்பு என்ற வகையில் குறைகளும், போதாமைகளும் கொண்ட படம்தான் இது. வன்முறைக்கு முந்தைய காட்சிகள் படைப்பூக்கமோ, பக்குவமோ இல்லாமல் ஏனோதானோவென்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சில காட்சிகள் ஆவணப்பட ரகம். படத்தில் வசனங்கள் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். எனினும், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்த அரிதான பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் படம் என்பதால், குறைகளை மீறிப் பாராட்டப்பட வேண்டும். எவ்வளவு அபாயகர மான நிலையில் நம் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதைப் பொட் டில் அறைந்ததுபோல் சொல்லி விடும் இப்படம் காலத்தின் தேவை. கூடவே, குடிப் பழக்கத்தின் மோசமான விளைவையும் படம் அம்பலப்படுத்துகிறது. பாதிப்பை மட்டும் சொல்லாமல், மீண்டு வருவதற்கான வழியையும் தெளிவாகச் சொல்லியிருப் பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைப் பேசும் ‘நிசப்தம்’, பெரியவர்கள் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய படம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x