Published : 28 Apr 2017 10:07 AM
Last Updated : 28 Apr 2017 10:07 AM

இயக்குநரின் குரல்: பள்ளிப் பருவம் கொண்டாட மட்டும்தானா? - வாசுதேவ் பாஸ்கர்

புதுமுகங்கள் நடித்துவரும் ஒரு படத்தை, தயாரிப்பில் இருக்கும்போதே அதன் தொலைக்காட்சி உரிமையை வாங்கியிருக்கிறது சன் தொலைக்காட்சி. அந்தப் படம் வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் நாயகனாக அறிமுகமாகும் ‘பள்ளிப் பருவத்திலே.’ இயக்குநரைச் சந்தித்தபோது…

பெரிய படங்களுக்கான தொலைக்காட்சி உரிமையை விற்பதே பெரிய குதிரைக்கொம்பாக இருக்கும்போது, இந்தப் படத்தை சன் நிறுவனம் வாங்கும் அளவுக்கு அப்படி என்ன இருக்கிறது?

கதை, திரைக்கதை, அதற்குப் பொருத்தமான நடிகர்கள் ஆகிய மூன்றையும் நம்பிக் களமிறங்கினோம். கதையைக் கேள்விப் பட்டதும் சன் டிவி ஆர்வம் காட்டினார்கள். அதன் பிறகு நாயகன், நாயகி தவிர்த்த மற்ற முக்கிய நட்சத்திரங்களின் பட்டியலைப் பார்த்தார்கள். அவர்களுக்குப் பிடித்து விட்டது. உடனடியாக படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிக்கொண்டார்கள். இது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

அறிமுக நட்சத்திரங்கள் தவிர வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள்?

நாயகனாக நந்தன் ராமும் நாயகியாக வெண்பாவும் நடிக்கிறார்கள். இவர் ‘கற்றது தமிழ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இவர்களைத் தவிர முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்.கே. சுரேஷ், பொன்வண்ணன், கே.எஸ். ரவிகுமார், தம்பி ராமைய்யா, ஊர்வசி, பேராசிரியர் ஞானசம்மந்தம், பருத்திவீரன் சுஜாதா, வேல்முருகன், காதல் சிவகுமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அறிமுக நட்சத்திரங்கள் இருவருமே மிக இயல்பாக, யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றிக் கேட்க வேண்டுமா.. மிகச் சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

அண்மையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர், நடிகர் ஆர்.கே.சுரேஷ் இந்தப் படத்தில் நடிக்க மறுத்தேன் என்று பேசியிருக்கிறாரே?

எங்களைப் பாராட்டிப் பேசினார். அவர் எனது நீண்டகால நண்பர். நான் அவரை இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க அழைத்தபோது மிகவும் யோசித்தார். காரணம் விஜய் , விக்ரம் , சசிகுமார் படங்களில் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் யதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்தால், அது தனக்கு எதிராகப் போய்விடக் கூடாது என்று பயந்தார். கதையைக் கேட்டதும் என்ன ஆனாலும் இதில் நான் நடிக்கிறேன். இதுபோன்ற கதைகள் எப்போதாவதுதான் கிடைக்கும்“ என்று ஆர்வத்துடன் வந்துவிட்டார். அதைத்தான் அப்படி மேடையில் பாராட்டிப் பேசினார். இந்தப் படத்தில் அவருக்குச் சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. இந்தப் படத்தில் ரிஸ்க் எடுத்து நடித்திருப்பதுபோல, வேறு எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் மிகச் சிறப்பாக சண்டைக்காட்சிகளை வடிவமைத்து யதார்த்தமாகவும் விறுவிறுப்பாகவும் எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

என்ன கதை, எங்கே படப்பிடிப்பு நடந்தது?

கலகலப்பான குடும்ப சூழலையும், பள்ளி மாணவர்களையும் மையப்படுத்தி அமைக்கப்பட்ட நகைச்சுவை கலந்த, காதல் கதை. பள்ளிப்பருவம் திரும்பவும் கிடைக்காது. கொண்டாட மட்டுமல்ல; பெற்றுக்கொள்ளவும் அந்தப் பருவத்தை விட்டால் முடியாது என்பதை இன்றைய உலகமய கிராமத்து மனிதர்கள் வழியே கூறும் கதை. கிராமமும் நகரமும் சந்திக்கிற பகுதிதான் கதைக்களம். படத்தின் படப்பிடிப்பு ஐம்பது நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, ஆம்பலாபட்டு மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துவிட்டது.

இந்த ஐம்பது நாள் படப்பிடிப்பில் எங்கள் யாருக்கும் எந்த வித சோர்வும் இருந்ததில்லை. காரணம் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல, கிராமத்திலேயே தங்கி, கிராம மக்களுடன் பழகினோம். படத்துக்காக மட்டும் காமெடி செய்யாமல் கே.எஸ். ரவிகுமார், ஊர்வசி, தம்பி ராமைய்யா, கஞ்சா கறுப்பு உட்பட எல்லா நடிகர்களும் படப்பிடிப்புத் தளத்தை சுற்றி எங்களையும் ஊர்மக்களையும் சிரிக்க வைத்து சந்தோஷப் படுத்திக்கொண்டே இருந்தார்கள். நாட்கள் ஓடியதே தெரியவில்லை.

உங்களைப் பற்றிக் கூறுங்கள்?

சினிமா மேல் இருந்த காதலால் கே.எஸ். ரவிகுமார், சுரேஷ்கிருஷ்ணா ஆகிய இருவரிடமும் உதவியாளனாகச் சேர வேண்டும் என்று பல முறை முயற்சித்தும் முடியாமல் போனது. ஆனால் நான் தயாரித்த ‘வேதா’ படத்தின் இசை வெளியிட்டு விழாவின் மூலம் கே.எஸ். ரவிகுமார் சாரின் அறிமுகம் கிடைத்தது. நான் யாரிடம் உதவியாளராகச் சேர வேண்டும் என்று நினைத்தேனோ, அவரை எனது இயக்கத்தில் நடிக்க வைத்தது எனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன். அவரிடம் நான் கதை சொன்னபோது, முழுக் கதையையும் கேட்டுவிட்டு, “இது என்ன விருதுக்காக எடுக்கிற படமா?” என்று கேட்டார். இதே கேள்வியை கதையைக் கேட்ட பின் கவிப்பேரரசு வைரமுத்துவும் என்னிடம் கேட்டார். இவர்கள் இருவரும் இப்படிக் கேட்டதே எனக்குத் தேசிய விருது கிடைத்த சந்தோஷத்தைத் தந்தது.

படத்துக்கு இசை சிற்பிதானே?

இல்லை. விஜய்நாராயணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x