Last Updated : 07 Feb, 2014 12:00 AM

 

Published : 07 Feb 2014 12:00 AM
Last Updated : 07 Feb 2014 12:00 AM

தி லன்ச் பாக்ஸ்: கைபேசிகளுக்கு நடுவே...!

அகத்தியன் இயக்கிய காதல் கோட்டை (1996) திரைப்படம் ஞாபகம் இருக்கிறதா? அஜித்குமார், தேவயானி நடிப்பில் வெளி வந்து பல தேசிய விருதுகளைப் பெற்றது. இப்போது வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் ‘தி லன்ச் பாக்ஸ்’ என்னும் இந்திப் படம், காதல் கோட்டையை உங்களுக்கு நினைவுபடுத்தும்.

‘தி லன்ச் பாக்ஸ்’ படத்தின் கதை என்ன?

மும்பையில் ஒரு குமாஸ்தா வேலையில் இருக்கும் சாஜன் ஃபெர்னான்டாஸ் (இர்ஃபான் கான்) கொஞ்ச நாட்களில் ரிடையர் ஆகப் போகிறவர். மனைவி இறந்து, குழந்தை இல்லாமல், தனியாக வாழ்க்கையைக் கழிப்பவர். உணவு விடுதி ஒன்றிலிருந்து மதிய உணவை டப்பாவாலாக்கள் மூலம் பெற்று ஒவ்வொரு நாளும் சாப்பிட்டுவருபவர். ஓய்வுபெறப் போவதால், அவரிடத்தில் தொழிலைக் கற்றுக்கொள்வதற்காக ஷேக் (நவாஜூதீன் சித்திகி) என்பவரை நிர்வாகம் நியமிக்கிறது. ஆனால் சாஜன் வேலையைக் கற்றுத் தராமல் தட்டிக் கழித்துவருகிறார். ஷேக்கும் பொறுமையாக வேலையைக் கற்றுக்கொள்ள முயல்கிறார்.

இலா (நிம்ரத் கவுர்) எனும் இளம்பெண், தன் கணவன் தன்னை விட்டு வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்திருப்பதைத் தெரிந்துகொள்கிறாள். தன் கணவனின் காதலை மீண்டும் பெற, ஒரு நாள் சிறப்பான உணவுகளைச் செய்து, ஒரு கடிதத்தையும் வைத்து, டப்பாவாலாக்கள் மூலம் கொடுத்து அனுப்புகிறாள். சரியான முறையில், சரியான விலாசத்தில் சேர்க்கும் டப்பா வாலாக்கள், இலாவின் டப்பாவுக்கு தவறான எண்ணைப் போட்டு விட, அந்த உணவுப் பெட்டி, சாஜனைச் சேர்கிறது. சாஜனுக்கு மிகப் பெரிய ஆச்சரியம்; ஒரு சிறப்பான உணவை நீண்ட நாட்களுக்குப் பின் சுவைக்கிறார். இலாவின் கடிதத்தையும் படிக்கிறார். அவளின் காதலும் புரிகிறது. அவளுக்கு ஒரு நல்ல பதில் கடிதத்தை அனுப்புகிறார்.

இலாவிற்கு வேறு ஒருவரின் பதில் கடிதம் ஆச்சரியம் தருகிறது. மறு நாள் அவள் திரும்பவும் உணவை அனுப்பும்போது ஒரு கடிதம் அனுப்புகிறாள். திரும்பவும், டப்பா வாலாக்கள் தவறிழைக்க, அந்தப் பெட்டி சாஜனை அடைகிறது. சாஜன் சாப்பிட்டுப் பதில் கடிதம் அனுப்புகிறார். சில நாட்கள் இது தொடர்கிறது. அவர்களுக்குள் அன்னியோன்யம் உண்டாகிறது. வாழ்க்கையில் ஒரு பிடிப்பு சாஜனுக்கு ஏற்படுகிறது. ஷேக்கிற்கு, வேலையைச் சொல்லித் தருகிறார். ஷேக் தவறு செய் யும்போது, அதைத் தன் தவறு என ஏற்கிறார். ஒரு பிடிப்புள்ள, அன்பான மனிதனாக, இலாவிற்கு பதில் கடிதங்கள் அனுப்புகிறார். சக மனிதர்களிடம் அன்பைப் பொழிகிறார். இலாவின் கடிதத் தொடர்பு அவரை முற்றிலும் மாற்றி விடுகிறது.

இலா, தன் கணவன் தன்னை விட்டு விலகுவது பற்றி ஒரு கடிதத்தை சாஜனுக்கு அனுப்பி, அதனால் தான் பூடான் சென்று வாழ விரும்புவதாக எழுதுகிறாள். சில நாட்களில் ரிட்டயராக உள்ள சாஜன், தானும், அவளுடன் பூடான் வர ஆசைப்படுவதாக எழுதுகிறார். சாஜனைச் சந்திக்க வேண்டும் என இலா கடிதம் எழுதுகிறாள். சாஜனும் ஒத்துக்கொள்கிறார்.

குறிப்பிட்ட நாளில், இலா ஒரு உணவு விடுதியில் அவருக்காகக் காத்திருக்கிறாள். சாஜன் அங்கே வந்தாலும், அவளைச் சந்திக்காமல் திரும்புகிறார். அவ்வளவு இளமையான ஒரு பெண்ணின் நட்பை விரும்புவது தவறு என்று நினைக்கிறார். ஏன் சொன்ன மாதிரி வரவில்லை என இலா கடிதம் எழுதுகிறாள். அவளை விடத் தான் வயதில் மூத்தவன், எனவே தன்னை மறந்து நல்ல வாழ்க்கையைத் தேடிக்கொள்ளுமாறு சாஜன் எழுதுகிறார். சாஜனின் கடிதங்களால் வாழ்க்கையில் அன்பையும் ஊக்கத்தையும் மீண் டும் பெற்ற இலா, தன் அன்பை வெளிப்படுத்திப் பதில் எழுதுகிறாள். சாஜன் படித்துப் பதில் தராமல் அலுவலகத்திலிருந்து ரிடையர் ஆகிறார்.

சில நாட்கள் சாஜனிடம் இருந்து எந்தக் கடிதமும் வராததால், இலா அந்த லன்ச் பெட்டி சேர்க்கப்படும் அலுவலகத்திற்குச் செல்கிறாள். சாஜன் ரிடையர் ஆகி நாசிக் சென்று விட்டதாக ஷேக் சொல்கிறார். இலா ஏமாற்றம் அடைகிறாள். இறுதியில் அந்தக் காதல் என்ன ஆனது என்பதை தி லன்ச் பாக்ஸ் படம், சுவாரஸ்யமாகச் சொல்கிறது.

படத்தின் சிறப்புகள்

இர்ஃபான் கான், நிம்ரத் கவுரின் அற்புதமான நடிப்பில் இப்படம் மிளிர் கிறது. மொபைல் மூலம் அனை வரும் பேசிக்கொள்ளும் இந்த நவீன காலத்தில், கடிதத்திற்கு இன்றும் இருக்கும் சிறப்பான இடத்தை இப் படம் காண்பித்து, நம் மெல்லிய உணர்வு களைத் தூண்டுகிறார் இயக்குநர்.

ரூபாய் 10 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம், ரூபாய் 20 கோடிக்கு மேல் இந்தியாவில் மட்டுமே வசூல் செய்து வெற்றி அடைந்தது. இயக்குநர் ரிதேஷ் பாத்ரவுக்குப் பல விருதுகளைப் பெற்றுத் தந்தது. உலகத் திரைப்பட விழாக்களிலும் பாராட்டுகளை அள்ளியது. ரிதேஷ் பாத்ராவுக்கு இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x