Last Updated : 21 Apr, 2017 10:27 AM

 

Published : 21 Apr 2017 10:27 AM
Last Updated : 21 Apr 2017 10:27 AM

கதைப் பஞ்சம் யாருடைய பிரச்சினை? - சமுத்திரகனி நேர்காணல்

“நமக்குக் கிடைச்ச இந்த வாழ்க்கை மூலமா அடுத்த தலைமுறைக்கு ஏதாவது ஒன்றை விட்டுட்டு போகணும். ஒரு மனிதனின் இறப்பு அவனோட மூச்சுக் காற்று நிற்பதோடு முடிவதல்ல; அவனைப் பற்றிய கடைசி நினைவுகள் இங்கே ஏதோ ஒரு வடிவத்தில் உயிர்வாழணும். அப்படி நாம விட்டுப் போகிற நினைவுகளை மக்கள் நீண்ட காலத்துக்கு பேசிக்கிட்டே இருக்கணும். இதைத் இந்தத் ‘தொண்டன்’ பிரதிபலிப்பான்!’’ என்று பேசத் தொடங்கினார் சமுத்திரக்கனி

நம் அரசியல் கட்டமைப்புக்கும், ‘தொண்டன்’ என்ற வார்த்தைக்கும் இடையேயான பிணைப்பு பெரிது. இதில் என்ன மாதிரி அரசியலைப் பேசுகிறீர்கள்?

தொண்டன் என்றாலே அது அரசியல் என்று ஆகிவிட்டது. இது அரசியல் படமல்ல. பக்கத்தில் இருக்கும் ஒருவன் கஷ்டப்படும்போது அவனுக்கு உதவி செய்பவனுக்குப் பெயரும் தொண்டன்தான். படத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வருகிறேன். எப்பவுமே உயிர் பிரச்சினையை சுமந்துகொண்டே ஓடிக்கொண்டிருக்கும் ஒருவனின் ஓராண்டு கால வாழ்க்கைதான் கதைக் களம். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, இளைஞர்களின் பொறுப்புணர்வு, பயம் என்பவை எந்த அளவில் நம்மை ஆட்கொள்கிறது என்பது உள்ளிட்ட விஷயங்களைக் கதை பேசும். குறிப்பாக ஒரு இடத்தில் வரும் நான்கு நிமிட சிங்கிள் டேக் காட்சிக்காக 6 மாதம் உழைத்திருக்கிறோம். அந்த இடம் படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும்.

படத்தில் தொண்டனாக வரும் கதையின் தலைவன் நீங்கள்தானே?

படத்தில் நானும் தொண்டன்தான். என்னைப்போல விக்ராந்த், தம்பி ராமையா, சூரி, சுனைனா, மூர்த்தி, கஞ்சா கறுப்பு என்று பலர் நடித்திருக்கிறார்கள். அவர்களும் தொண்டர்கள்தான். சில காலங்களுக்கு முன் குறிப்பிட்ட சிலர் தலைவர்களாக இருந்து களத்தில் இறங்கித் தொண்டு செய்தார்கள். இப்போது அதெல்லாம் இங்கே இல்லை.

நாவல், சிறுகதையைப் படமாக்கும் இயக்குநர்களின் வரிசையில் நீங்களும் இணைந்திருக்கிறீர்கள். ஆனால், இங்கே வெளிவரும் பல திரைப்படங்கள் கதைப் பஞ்சத்தால் தமிழ் சினிமா இன்னும் தள்ளாடுவதைக் காட்டுகிறதே?

எழுத்தைப் படமாக்கும்போது அதை எப்படி ஜனரஞ்சகமாகக் கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். பிடிமானம் மிக்க திரைக்கதையோடு சுவாரஸ்யம் கலந்து கொடுத்தால் அதை மக்கள் ஏற்கத் தயாராக இருக்கிறார்கள். கதைப் பஞ்சம் என்பது கதை பண்ணத் தெரியாதவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை. இன்றைய நாளிதழை எடுத்துப் பார்த்தால் அதில் நான்கு கதைகள் இருக்கும்.

தொண்டனுக்கு முன் ‘கிட்ணா’ படத்தின் வேலைகளைத்தானே தொடங்கினீர்கள்?

கிட்ணா நாற்பது ஆண்டுக் காலக் கதை. அந்தப் பயணத்தைத் தொடங்கிவிட்டால் இடையிடையே வெளியே வர முடியாது. தவிர்க்க முடியாத சில இயக்குநர்கள் நடிக்க அழைக்கும்போது அதை மறுக்க முடியவில்லை. கிட்ணா 5 கால நிலைகளில் நடக்கும் கதை. அந்தந்தக் காலகட்டத்துக்குப் போய் பதிவு செய்ய வேண்டும். தயாரிப்பாளராக நானே இருப்பதால் அதற்கான பொருளாதாரத்தையும் ஏற்பாடு செய்துவிட்டே இறங்க உள்ளேன்.

நீங்கள் சமீப காலமாக மலையாள சினிமாவுக்கும் சேர்த்துக் கதை உருவாக்குவதாகக் கூறப்படுகிறதே?

அதெல்லாம் கிடையாது. ‘அப்பா’ படத்தைப் பார்த்துவிட்டு அப்படி ஒரு பேச்சு உருவாகியிருக்கலாம். ஒரு கதை என்ன கேட்கிறதோ அந்த வேலையைத்தான் செய்து வருகிறேன். ‘தொண்டன்’ படத்தை எந்த ஒரு மொழி, மாநிலத்தோடும் பிரித்து பார்க்க முடியாது. நம் எல்லோருக்குமான படம் அது.

நடிகர் சமுத்திரக்கனியின் திட்டம், அளவுகோல் என்ன?

எப்போதுமே இயக்குநர் சமுத்திரக்கனிக்குத்தான் முதலிடம். வெற்றி மாறன், பிரியதர்ஷன் மாதிரியான சில இயக்குநர்கள் கூப்பிட்டதும் கதையைக்கூடக் கேட்காமல் ஓடிவிடுவேன். காரணம், அவர்கள் மீதான நம்பிக்கை. இதேபோல எல்லோர் முன்பும் நிற்க முடியாது.

இளைஞர்களோடு போராட்டக் களத்தில் உங்களைப் பார்க்க முடிந்தது. ஆனால், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் போன்ற நிகழ்ச்சிகளில் காண முடியவில்லையே?

65 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த ஒரு எழுச்சியாகத்தான் இளைஞர்கள், மாணவர்கள் இணைந்ததைப் பார்க்கிறேன். தொடர்ச்சியாக ஏமாற்றங்களை சந்தித்த மனிதன் விரக்தியின் உச்சிக்குச் சென்றதின் விளைவுதான் அது. அடுத்தடுத்து விவசாயம், தண்ணீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் மாணவர்கள் இறங்கினால்தான் அதிகாரத்தில் இருப்பவர்கள் திரும்பிப் பார்ப்பார்கள். தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் இந்த முறை எனக்கு ஓட்டு இல்லை.

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலுக்கு முன் விஷால் என்னிடம் கேட்டபோது, ‘நான் திரைத்துறையினர் முன் வைக்கும் நல்ல விஷயங்களுக்குப் பின்னால் எப்போதும் இருப்பேன்!’ என்று சொன்னேன். நடிகர் சங்க விஷயத்தின்போது, ஒரு பக்கம் நான் வளர்ந்த இடம் ‘ரேடான் கம்பெனி’, இன்னொரு பக்கம் நாசர், விஷால் அணியினர். எனக்கு இரண்டு தரப்பினருமே வேண்டும். எல்லோருமே எனக்கு முக்கியமானவர்கள்.

ஒரு தொண்டனாகத் தற்போதைய அரசியல் சூழ்நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நண்பன் கரு.பழனியப்பனிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘‘வேட்பாளர்களை 5000 பேர் கொண்ட பொது இடத்துக்கு வரவழைத்து தொகுதியில் உள்ள பிரச்சினைகளை எப்படிச் சரி செய்வீர்கள், என்னென்ன தேவை இருக்கிறது என்பதை எப்படிப் புரிந்துகொள்வீர்கள் என்பதுபோன்ற கேள்விகளுக்கு சில மணி நேரம் பேசச் சொன்னாலேயே அவர்களில் பல பேர் ஓடிவிடுவார்கள். மீதமுள்ளவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை நாம் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்” என்று சொன்னார். நிச்சயம் இப்படி ஒரு காலம் வரும். உண்மையாக நின்று மக்களை மட்டுமே நேசித்து சரித்திரம் படைத்தவர்கள் வாழ்ந்த மண் இது. அப்படிப்பட்ட இந்த மண் முடிந்தவரைக்கும் பொறுத்துப் பார்க்கும். அதன் பிறகு, சலித்து, தேவையற்ற அழுக்குகளை வெளியேற்றிவிடும். தற்போது சலிக்கும் வேலை தொடங்கிவிட்டது. விரைவில் சரியான தலைவனைச் சமூகம் அடையாளம் காட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x