Published : 01 Jan 2016 11:10 AM
Last Updated : 01 Jan 2016 11:10 AM
ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரான். பளிச்சென்று விரிந்து செல்லும் தூய்மையான சாலைகளில் தவழ்ந்து செல்கிறது ஒரு மஞ்சள் நிற வாடகை கார். அதை ஓட்டிச் செல்பவர் ஈரானின் புதிய தலைமுறை திரைப்பட இயக்குநரான ஜபர் பனாஹி. டாக்ஸியின் டாஷ்போர்டில் கேமராக்களை மறைத்து வைத்திருக்கிறார் பனாஹி. அந்த ஒரு நாளில் விதவிதமான பயணிகளை ஏற்றிச் சென்று, அவர்கள் செல்ல விரும்பும் இடங்களில் இறக்கிவிடுகிறார்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பணக்காரர், ஏழை, நவீனத்துவவாதிகள், கலாச்சார விரும்பிகள், திருட்டு வீடியோக்காரர், மனித உரிமை ஆர்லவர்கள் என அந்த காரில் ஏறும் பயணிகள் பனாஹியை டாக்ஸி டிரைவர் என்று நம்புகிறார்கள். பயண நேரத்தில் முன்பின் அறிமுகமில்லாத தன் பயணிகளோடு பனாஹி பேச்சுக்கொடுக்கிறார். அவர்களோடு இயல்பாக உரையாடுகிறார். அந்த உரையாடலில் நவீன டெஹ்ரானின் மனச் சித்திரங்கள் விரிகின்றன. இதுதான் இன்றைய டெஹ்ரான் என்பதைப் பார்வையாளர்கள் நம்பகத் தன்மையுடன் அனுபவித்து முடிக்கிறார்கள். படம் முடிந்ததும் ஒரேசேர எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்.
2015-ல் நடந்து முடிந்த 65-வது பெர்லின் சர்வதேசப் படவிழாவில் சிறந்த படத்துக்கான தங்கக் கரடி விருதை வென்ற அந்த ஈரானியத் திரைப்படம் ‘டாக்ஸி’ (2015). ஆவணப் படத்துக்குரிய முனைப்பும் மெலிதான நகைச்சுவை இழையோட ஈரானின் சமூக, பண்பாட்டு, அரசியல் பார்வைகளை, உண்மையான டெஹ்ரான் குடிமக்கள் (பயணிகள்) வழியாக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநர் ஜபர் பனாஹி ஈரானில் வீட்டுச் சிறையில் வாழ்ந்துவரும் இயக்குநர்.
இவரது ஆக்கத்தில் உருவான ‘இது திரைப்படமல்ல’ (This Is Not a Film), ‘மூடப்பட்ட திரைச்சீலை’ (Closed Curtain) ஆகிய இரண்டு படங்களுக்காக 20 ஆண்டுகள் திரைப்படம் இயக்கவும் உருவாக்கவும், நாட்டை விட்டு வெளியேறவும் தடைவிதிக்கப்பட்டவர். அப்படிப்பட்டவர் எந்த தைரியத்தில் தனது மூன்றாவது திரைப்படமான ‘டாக்ஸி’யை எடுக்கத் துணிந்தார்?!
ஒரு காதல் கடிதம்
இதற்கு பனாஹியே ஒரு நேர்காணலில் பதில் தருகிறார்: “எந்த மூலைக்கு என்னைத் தள்ளினாலும் நான் திரைப்படங்கள் எடுப்பதை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது. இதுபோன்ற தனிமைப்படுத்தல்தான் திரைப்படங்களை இன்னும் முனைப்புடன் உருவாக்கும் தூண்டுதலை எனக்குத் தருகிறது”.
பனாஹியின் இந்தப் படைப்பை “சினிமாவுக்கு எழுதப்பட்ட ஒரு காதல் கடிதம்” என்று புகழ்ந்து விமர்சித்திருக்கிறார் பெர்லின் திரைப்பட விழா நிதிபதிகள் குழுவின் தலைவர், ஐரோப்பிய திரைப்பட இயக்குநர், திரைப்பட எழுத்தாளர் டேரன் அரோனாப்ஸ்கி. இயக்குநர் ஜபர் பனாஹி நாட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் அவருக்காக பெர்லின் வந்து, கண்ணீர் மல்க தங்கக் கரடி விருதை பெற்றுச் சென்றார் பனாஹியின் மருமகளும் ‘டாக்ஸி’ படத்தில் பள்ளி மாணவியாகத் தோன்றிய சிறுமியுமான ஹனா சையதி.
தணிக்கையில் தப்பிய திரைப்படங்கள்
அழுந்தப் பிடிக்கும் தணிக்கையின் கரங்களை மீறிக் கலையாளுமையுடன் பிறக்கும் ‘டாக்ஸி’ போன்ற ஈரான் நாட்டுப் படங்கள் மட்டுமல்ல; 57 நாடுகளிலிருந்து 13-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் குவியவிருக்கும் 150-க்கும் அதிகமான உலகப் படங்கள் அத்தனைக்கும் தணிக்கையிலிருந்து சிறப்பு விதிவிலக்கு அளிக்கிறது மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம். “இந்தியாவைப் பொறுத்தவரை சர்வதேசப் பட விழாக்களில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலகப் படங்களுக்கு மூன்று விதமான அனுமதியைப் பெற்றால்தான் திரைப்பட விழாக்களில் நாங்கள் திரையிட முடியும்” என்கிறார் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை ஒருங்கிணைந்துவரும் ‘இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்’ திரைப்படச் சங்கத்தின் பொதுச்செயலாளரான இ. தங்கராஜ்.
“திரைப்பட விழாவில் பங்கேற்கும் திரைப்படங்களை வர்த்தகரீதியாகத் திரையிடுவதில்லை என்ற உறுதிமொழியைக் கொடுத்து கேளிக்கை வரிவிலக்கு அனுமதி பெற வேண்டும். இதைப் பெற்றுக் கொடுத்தால்தான் திரையரங்க உரிமையாளர்கள் படங்களைத் திரையிட முன்வருவார்கள். அடுத்து மாநில அரசின் உள் துறையிடமிருந்து ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகளைத் திரையிட சிறப்பு அனுமதி பெற வேண்டும். மூன்றாவது முக்கியமான அனுமதி, இந்தப் படங்களுக்குத் தணிக்கையிலிருந்து விதிவிலக்கு. இதை மத்திய அரசிடமிருந்து பெற்றாக வேண்டியது மிக அவசியம். அப்போதுதான் சர்வதேச இயக்குநர்களின் படைப்புகளை முழுமையாக நமது பார்வையாளர்களுக்கு அளிக்க முடியும்” என்கிறார் தங்கராஜ்.
புதிய திரைகள்
ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 13-ம் தேதிவரை 8 நாட்கள் நடைபெறும் இந்தக் கோலாகலக் கொண்டாட்டத்தின் முதன்மையான கேந்திரம் என்றால் அது சென்னை, ராயப்பேட்டை யின் மணிக்கூண்டு சந்திப்பில் அமைந்திருக் கும் ‘உட்லேண்ட்ஸ்’ திரையரங்க வளாகம்தான். இங்கிருக்கும் இரண்டு திரைகளில் விழா நடைபெறும் எட்டு நாட்களும் கூட்டம் தெறிக்கும். திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்களும் இயக்குநர்களும் ரசிகர்களின் தொந்தரவு இல்லாமல் உலக சினிமாக்களைக் காண ‘சிவப்புக் கம்பள’ திரையிடல்கள் ஐநாக்ஸ் திரையரங்கில் உள்ள இரண்டு திரைகளில் நடைபெறும். ஆனால், கடந்த ஆண்டுகளில் அங்கேயும் இட நெருக்கடி தவிர்க்க முடியாததாகத் தொடர்ந்தது.
இதைக் கருத்தில் கொண்டு இம்முறை தமிழ் திரைப்பட உலகின் இதயமாக இருந்து இயங்கும் வடபழனி பகுதியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டூடியோ திரைப்படப் பள்ளி திரையரங்கையும் திரையிடலுக்குத் தேர்ந்தெடுத்து ஆச்சரியமூட்டி யிருக்கிறார்கள் விழாக் குழுவினர். பட விழாவின் மையங்களில் ஒன்றாக வடபழனியும் மாற்றியிருப்பது உதவி இயக்குநர்களையும் திரையுலகினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த மூன்று திரையரங்குகள் தவிர கேஸினோ, சத்யம் சினிமாஸ் ஆகிய திரையரங்குங்கள், ரஷ்ய கலாச்சார மையத் திரையரங்கு எனத் திரைகளின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறார்கள்.
திசைகாட்டி
திரைப்பட விழாவின் எல்லா நாட்களிலும் காலை 9 மணிக்குத் தொடங்கும் திரையிடல் இரவு 7.30 மணிக்கு ஐந்தாவது காட்சியுடன் நிறைவுபெறும். எந்தத் திரையரங்கில், எந்தக் காட்சியில், எந்தப் படத்தைத் தவறவிடாமல் பார்ப்பது என்ற திணறலும் இன்ப அவஸ்தையும் ‘தி இந்து’ தமிழ் இதழின் வாசகர்களுக்கு இருக்கப்போவதில்லை. ‘சென்னைத் திரைப்பட விழாவில் இன்று’என்ற தலைப்பில் தினந்தோறும் நமது நாளிதழில் வெளியாகும் செய்திச் சித்திரம் வழியாகப் படங்களைத் தேர்வு செய்து பார்க்கலாம். இன்னும் விரிவாகவும் சுவையாகவும் www.tamil.thehindu.com என்ற ‘தி இந்து’ தமிழ் இணையதளம் உங்களது சினிமா ரசனைக்குத் தெளிவான திசையைக் காட்டும்.
- தங்கராஜ்
அட்டகாசமானப் படங்கள்
13-வது சென்னை சர்வதேசப் படவிழாவில் முதல்முறையாக லத்தின் அமெரிக்க நாடான வெனிசுலாவிலிருந்து ஆறு தலைசிறந்த படங்கள் திரையிடப்படுகின்றன. இதேபோல் நாடுகளை மையப்படுத்தித் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் சீனாவிலிருந்து நான்கு படங்கள் திரையிடப்படுகின்றன.
உலக சினிமா பிரிவில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஜெர்மனியைச் சேர்ந்த ரெய்னர் வெர்னர் ஃபாஸ்பைண்டெர் (Rainer Werner Fassbinder) இயக்கிய 7 படங்களும், டென்மார்க் நாட்டின் இயக்குநர் நில்ஸ் மல்முரோஸ் (Nils Malmoros) இயக்கிய 6 படங்களும் திரையிடப்படுகின்றன. தங்கள் திரைப் பயணத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் இயக்கிய இந்தப் படங்களின் மூலம் இவர்களது கலையாளுமையின் வளர்சிதை மாற்றத்தை ரசித்து வியக்க முடியும்.
கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட ஈரான் நாட்டின் ‘டாக்ஸி, ரோமானியா நாட்டின் ‘அப்ரிம்’, தொடக்க விழா திரைப்படமாக திரையிடப்படும் ஜெர்மனியின் ‘விக்டோரியா’, ஸ்வீடனின் ‘ஃப்ளோக்கிங்’, குரோசியாவின் ‘ தி ஹை சன்’, கொலம்பியாவின் ‘எம்பிரேஸ் ஆஃப் த சர்ப்பென்ட்’, இத்தாலியின் ‘மை மதர்’, ஜப்பானின் ‘ஜர்னி டு த ஷோர்’, ஐஸ்லேண்டின் ‘ராம்ஸ்’, மெக்ஸிகோவின் ‘க்ரானிக்’ ஆகிய திரைப்படங்கள் தவறவிடக் கூடாத உலக சினிமா பிரிவுப் படங்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.
17 உலக நாடுகளிலிருந்து கடந்த ஆண்டு சிறந்த வெளிநாட்டு மொழிப் படப்பிரிவில் ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு அனுப்பட்ட 20 சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது விழாக் குழு. இந்தப் பட்டியலில் இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு அனுப்பட்ட மராத்தி மொழிப் படமான ‘கோர்ட்’டும் அடக்கம்.
இந்தியன் பனோரமா பிரிவில் 22 ஆண்டுகளுக்குப் பின் சமஸ்கிருத மொழியில் தயாரான ‘ப்ரியமானசம்’, தமிழ்ப் படங்களின் போட்டிப் பிரிவில் பங்கேற்கும் ‘ரேடியொப்பெட்டி’ ஆகிய படங்களையும் தவறவிடாதீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT