Last Updated : 19 May, 2017 10:33 AM

 

Published : 19 May 2017 10:33 AM
Last Updated : 19 May 2017 10:33 AM

சினிமாஸ்கோப் 34: நான் மகான் அல்ல

திரைக்கதைகளுக்கு நடிகர்களைத் தேடுவதற்கும் நடிகர்களுக்குத் திரைக்கதை எழுதுவதற்கும் அடிப்படையில் பெரிய வித்தியாசமிருக்கிறது. திரைக்கதைக்கு ஏற்ற கதாபாத்திரத்தைத் தேடும்போது அந்தக் கதாபாத்திரத்தின் தன்மைகளை மட்டும் வெளிப்படுத்தினாலே போதும். கதாபாத்திரத்தின் குணாதிசயம் புரிந்துவிடும். நாயக நடிகர்களுக்குத் திரைக்கதை எழுதும்போது அவர்களின் குணநலன்களையும் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம். அவற்றையும் சேர்த்துத்தான் ரசிகர்கள் கதாபாத்திரத்தின் தன்மையைப் புரிந்துகொள்வார்கள்.

நடிகர்களுக்குப் பொருந்தாத குணாதிசயத்தைக் கதாபாத்திரத்திடம் தவிர்த்திட வேண்டும். இல்லையென்றால் அந்தக் கதாபாத்திரம் எடுபடாது. அதனாலேயே நடிகர் எம்.ஜி.ஆர். தனது படங்களில் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் குடிப்பதுபோலவோ, புகைப்பதுபோலவோ காட்சிகள் அமைப்பதைத் தவிர்த்தார். அப்படியான காட்சிகள் தனது இமேஜைச் சரித்துவிடக்கூடியவை என நம்பிச் செயல்பட்டார் அவர்.

புதுமுகங்கள் ஏன் தேவை

எம்.ஜி.ஆர். இயல்பில் நல்லவரா கெட்டவரா என்பது வேறு விஷயம். ஆனால், ரசிகர்கள் பார்க்க விரும்பிய நல்ல எம்.ஜி.ஆர். மட்டுமே திரையில் காட்சி தந்தார். கதாபாத்திரங்களது குணாதிசயம் நடிகர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் காரணமாகவே அவர் அந்தப் புரிதலைக் கொண்டிருந்திருக்கலாம். எனவேதான், புதுமையான முயற்சிகளை மேற்கொள்ளும்போது, புதுமுக நடிகர்களைக் கொண்டு அல்லது தனக்கென பெரிய இமேஜ் ஏதுமற்ற நடிகர்களைக் கொண்டு பரிசோதனை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

‘ஒருதலை ராகம்’, ‘புதுவசந்தம்', ‘சேது’, ‘சுப்பிரமணியபுரம்’, ‘சூது கவ்வும்’ எனப் பல உதாரணங்களைச் சுட்ட முடியும். இப்படியான படங்களின் கதாபாத்திரங்களை ரசிகர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், அந்த நடிகர்கள் பற்றிய முன்முடிவுகள் எவையும் ரசிகர்களிடம் இருக்காது.

எச்சில் கையால் காக்காவைக்கூட விரட்டாதவர் என்று பெயர் எடுத்த நடிகரை வைத்துக் கொடைவள்ளல் ஒருவரைப் பற்றிய கதையை உருவாக்கும்போது, ஒன்றுக்குப் பலமுறை யோசிக்க வேண்டியதிருக்கிறது. உதாரணத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘லிங்கா’ படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நடிகர் ரஜினிகாந்த் ஏற்றிருந்த கதாபாத்திரம் தனது சொத்தை எல்லாம் விற்று ஊருக்காக அணைகட்டுவது போல திரைக்கதை அமைந்திருக்கும். அது சாத்தியமா என்பதை ரசிகர்கள் அந்தக் கதாபாத்திரத்தை மட்டும் வைத்துத் தீர்மானிக்கவில்லை கதாபாத்திரத்தை ஏற்றிருந்த நடிகரின் குணநலன்களையும் பரிசீலித்தே தீர்மானித்தார்கள். ஆகவே அந்தத் திரைக்கதை எடுபடாமல் போனது.

சமூகவலை எனும் எழுச்சி

அதே போல் ஒரு திரைக்கதையை எந்தக் காலகட்டத்தில், யாருக்காக எழுதுகிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரே உத்தியை எப்போதும் பின்பற்றும் போக்கும் ஆபத்தானது. ‘லிங்கா’ திரைப்படம் எண்பதுகளில் வெளியாகியிருந்தால் ஒருவேளை அது மிகப் பெரிய வெற்றியைக்கூடப் பெற்றிருக்க முடியும். அன்று ரஜினி காந்த் என்ற நடிகருக்கு மிகப் பெரிய இமேஜ் இருந்தது. சமூக வலைத்தளங்களின் அபரிமிதமான வளர்ச்சி ரஜினி காந்தின் முகமூடியை அகற்றியிருக்கிறது. இந்தச் சூழலில் வெளியான ‘லிங்கா’வின் திரைக்கதை ரசிகர்களுக்கு அந்நியமாகப் பட்டிருக்கலாம்.

இந்தப் படத்தின் தோல்வி தந்த பாடத்தாலேயே அதன் பின்னர் வெளியான ‘கபாலி’ என்ற ரஜினி காந்த் படம் தலித் சினிமா என்று முன்னிறுத்தப்பட்டு வெற்றியை நோக்கி நகர்த்தப்பட்டது என்பதாகவும் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. ரஜினி காந்த் என்னும் நடிகருக்கான திரைக்கதையை எழுதுவது பெரிய கம்ப சூத்திரமல்ல; ஆனால், ஏழு கடல் தாண்டி, எட்டு மலை தாண்டிச் சென்று திரைக்கதையைப் பெற்று வந்தது போல் காட்டிக்கொள்ள வேண்டும். ‘அருணாச்சலம்’ என்னும் சாதாரணப் படத்துக்காக என்னவெல்லாம் கதைகள் பரப்பப்பட்டன என்பதைக் கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள்.

ரஜினி காந்தை முன்வைத்துச் செய்யப்படும் பல கோடி ரூபாய் வியாபாரத்தின் பொருட்டே இந்தத் திரைக்கதைக்காக, இந்தத் திரைப்படத்துக்காக எப்படி எல்லாம் சிரமப்பட்டிருக்கிறோம் என்ற விஷயங்களை எல்லாம் படம் தொடங்கிய நாள் முதலே ஊடகங்களின் உதவியுடன் பார்வையாளர்களிடம் பரப்புகிறார்கள்.

திரைபிம்பம் முன்னிறுத்தும் ரஜினி

ரஜினியைப் பொறுத்தவரை, அவர் திரைப்படங்களில் ஏழைகளுக்கு உதவுவார்; பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பார்; அநியாயங்கள் கண்டு பொங்குவார்; அம்மா, தங்கை என்றால் நெகிழ்வார். மொத்தத்தில் திரைப்படங்களில் அவர் ஓர் ஏழைப் பங்காளன்; ஒரு நவீன கால ராபின்ஹூட். பெரும்பாலான திரைப்படங்களில் இப்படியான திரைக்கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துவந்தவர் அவர்.

எப்போதுமே வலுவான திரைக்கதையிலேயே திறமையான நடிகரின் பங்களிப்பு பளிச்சிடும். ரஜினி காந்தின் படங்களில் திரைக்கதையை வலுவேற்றுவதற்காக அவரது தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்களை இணைத்துக் காட்சிகள் அமைக்கப்பட்டதும் தமிழ்த் திரை கண்ட ஒன்றே. தமிழில் பெரிய வெற்றிபெற்ற ‘மன்னன்’ படம் ‘அனுராகா அரளிது’ என்னும் கன்னடப் படத்தின் மறு ஆக்கம்தான். இந்தப் படத்தில் விஜயசாந்தி ஏற்றிருந்த கதாபாத்திரத்துக்கு எதிராக ரஜினி காந்த் பேசும் வசனங்கள் அரசியல்ரீதியாக அவருடைய ரசிகர்களால் அர்த்தம்கொள்ளப்பட்டன. ‘மன்னன்’ படத்தில் ரஜினி காந்த் சொந்தக் குரலில் ஒரு பாடல் பாடியிருப்பார். ‘அடிக்குது குளிரு’ என்னும் அந்தப் பாடலை எப்போது கேட்டாலும் ஜன்னி வந்துவிடும். என்றபோதும் அந்தப் படம் பெற்ற வெற்றிக்குத் தமிழக ரசிகர்களின் இந்தப் புரிதலும் காரணமானது.

திரைக்கதையின் பலம்

இதற்கு அடுத்து வெளிவந்த ‘அண்ணாமலை’ படத்தில் அரசியல்ரீதியான வசனங்கள் படு வெளிப்படையாகவே அமைக்கப்பட்டிருந்தன. வினுச்சக்ரவர்த்தி ஏற்றிருந்த ஏகாம்பரம் எனும் அரசியல் கதாபாத்திரத்துக்கு எதிராக ரஜினி பேசும் வசனங்கள் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரானதாக ரசிகர்களால் புரிந்துகொள்ளப்பட்டுப் பலத்த கைதட்டலைப் பெற்றுத் தந்தன. ‘அண்ணாமலை’யின் மூலப் படமான ‘குத்கர்ஸ்’ என்னும் இந்திப் படத்தில் இந்தக் காட்சிகள் கிடையாது. இவை தமிழுக்காகவே செய்யப்பட்ட மாற்றங்கள். அதுவும் ரஜினி கதாபாத்திரம் கேமராவைப் பார்த்தே சவால் விடும்; வசனங்களைப் பேசும்.

‘அண்ணாமலை’ பெற்ற வணிக வெற்றியால் இப்படியான வசனங்கள் அவருடைய படங்களான ‘பாண்டியன்’, ‘உழைப்பாளி’, ‘முத்து’ போன்றவற்றிலும் தொடர்ந்தது. ஆனால், இத்தகைய வசனங்கள் பாண்டியனுக்குக் கைகொடுக்கவில்லை. அது ‘பாம்பே தாதா’ என்னும் கன்னடப் படத்தின் மறு ஆக்கமாகவே உருவானது. ஆனாலும், ஜெயசுதாவைப் பார்த்து ரஜினி பேசும் பல வசனங்கள் ஜெயலலிதாவைப் பார்த்துப் பேசப்படுவதாக நினைத்தே ரசிகர்கள் படத்தைப் பார்த்தனர். ஆனாலும் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

ஆக, மக்கள் செல்வாக்குப் பெற்ற நட்சத்திரமாக இருந்தாலும் திரைக்கதை சரியாகச் சோபிக்கவில்லை எனில் நட்சத்திரத்தின் உழைப்பு வீண்தான் என்பதே பாலபாடம். ரஜினி காந்த் பெரிய நடிகர், ரசிகர்கள் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது உண்மை எனில், ரஜினி காந்த் ஆத்மார்த்தமாக நடித்துக் கொடுத்த ‘ஸ்ரீராகவேந்திரர்’, அவர் கதை வசனம் எழுதிய ‘வள்ளி’, ஆன்மிக அனுபவமாகக் கருதி நடித்த ‘பாபா’ போன்றவை பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவை தோல்வியே கண்டன. திரைக்கதையின் பலத்திலேயே நடிகர்கள் ஜொலிக்க முடியும்; நடிகர்கள் பலத்தில் திரைக்கதை ஜொலிக்காது என்பதையே அது உணர்த்துகிறது.

தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x