Published : 06 Jan 2017 10:39 AM
Last Updated : 06 Jan 2017 10:39 AM
எளிய தொழிலாளர்களாக இருக்கும் ‘லைட் மேன்’களில் தொடங்கி, திரைக்குப் பின்னால் மறைக்கப்படும் நாயகர் பலர். நட்சத்திரங்களைப் பின்தொடரும் ஒளிப்படக் கலைஞர்களும் அந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். நட்சத்திரங்களை மேலும் அழகாகக் காட்டும் இவர்கள்
தங்கள் முகங்களில் வெளிச்சம் பட அனுமதிப்பதே இல்லை. மாறாக, தங்கள் ஒளிப்படங்கள் வழியே அவர்கள் பேசத் தவறுவதில்லை. அந்த வரிசையில் கோடம்பாக்கத்தில் தற்போது பேசப்படும் ஒளிப்படக் கலைஞர் தீரன் என்கிற நரேந்திரன். அவருடன் ஒரு சிறு உரையாடல்…
உங்களைப் பற்றிய சிறு அறிமுகம்...
எனது சொந்த ஊர் அரக்கோணம். சென்னை இந்துக் கல்லூரியில் வணிகவியல் படித்தேன். முதுகலை முடித்தபிறகு கார்ப்பரேட் நிறுவனமொன்றில் உடனடியாக வேலை கிடைத்தது. சின்சியராக உழைத்தேன். கைநிறைய சம்பளம் கிடைத்தாலும் செய்தவேலையில் ஏனோ மனம் நிறைவடையவில்லை. இதற்காகத்தான் வாழ்க்கையில் ஒரு 25 வருடத்தைச் செலவழித்திருக்கிறோமா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
அப்போதுதான் செய்கிற வேலை விட்டுவிட்டுப் பிடித்த வேலையைச் செய்வோம் என்று எனக்குப் பிடித்தமான கேமராவை முழுநேரமாகக் கையில் எடுத்தேன். 12 மணிநேரம் படம்பிடித்துக்கொண்டேயிரு என்று சொன்னாலும் ‘உனக்குப் பசிக்கவில்லையா?” என்று நீங்கள் கேட்கிறவரை எடுத்துக்கொண்டிருப்பேன். கடந்த 15 ஆண்டுகளாக இப்படி வாழ்ந்துகொண்டிருப்பதால்தான் நீங்கள் என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.
இது டிஜிட்டல் யுகம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தெரிந்த அனைவருமே அசத்தலாம் என்ற சூழலில் உங்களைப் போன்ற ஒளிப்படக் கலைஞர்களைத் தனித்துக் காட்டுவது எதுவென நினைக்கிறீகள்?
தனித்துவம். எல்லோரையும்போல் என்னையும் பார்க்காதீர்கள் என்று சொல்ல நினைக்கும் வெளிப்பாடு. என்னதான் அதிநவீன வசதிகளோடு டிஜிட்டல் தளத்துக்கு போட்டோகிராபி வந்துவிட்டாலும் அதில் கலையை வெளிப்படுத்த தெரிந்தவன்தான் கிரியேட்டர். இசையோ, ஒளிப்படமோ, டிஜிட்டல் ஓவியமோ கருவிகள் மூலம் நீங்கள் வெளிப்படுத்தினாலும் அதில் கலை இருக்க வேண்டும். என்னைப் போன்ற ஒரு ஒளிப்படக்காரனின் கண்களை நீங்கள் உற்றுக் கவனித்தால் கலையைக் காணமுடியாது. ஆனால், எனது ஒளிப்படங்களில் நீங்கள் அதைக் காண முடியும் என்று என்னால் கூறமுடியும்.
கறுப்பு வெள்ளைத் ஒளிப்படம் என்றால் அது தீரன் என்று பெயர் வாங்கியிருக்கிறீர்களே?
ஏனோ கருப்பு வெள்ளை மீது நம் கண்கள் ஆழ்ந்து பயணிப்பதற்கு அவை இரண்டே வண்ணங்கள் மட்டும்தான் என்பதே எனக்குக் காரணமாகப்படுகிறது. தவிர, கறுப்பு வெள்ளையில் கட்டுப்படுத்தப்படும் ஒளியின் அளவும் அதன் ‘லைட் அண்ட் ஷேட்’ ஜாலமும் வண்ணங்களுக்கு எதிர்மாறான ஈர்ப்பாக மாறி ஈடுபடவைக்கின்றன.
ஒளிப்படக் கலையில் உங்கள் பயணம் எதைநோக்கியது?
என் அப்பா இயற்கை நேசர். இயற்கை பற்றி நிறைய சொல்லிக்கொடுத்தார், இயற்கை சார்ந்த ஆவணப்படங்களை நிறைய பார்க்க வைத்தார். அதனால் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞனாக வேண்டும் என்பது என் சிறுவயது ஆசை. ஆனால், நான் வழிகாட்டியாகவும் என் உடன்பிறந்த சகோதரன்போலவும் நினைக்கும் மக்கள் தொடர்பாளர் நிகில்முருகனால் இன்று பிரபலமான செலிபிரட்டி போட்டோகிராபராக மாறியிருக்கிறேன். தூர நின்று பார்த்த மிகப்பெரிய நட்சத்திரங்களைக் கூட சில மாலைகளில் எவ்வித முன் அனுமதியும் இன்றிப் படமெடுத்திருக்கிறேன். அதற்கு அனுமதித்த அந்த நட்சத்திரங்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டவன். இந்தத் துறையில் கிடைத்திருக்கும் அங்கீகாரத்தாலும் வாய்ப்புகளாலும் நான் ஃபேஷன் அண்ட் மாடலிங் போட்டோகிராபியில் முழு வீச்சுடன் ஈடுபட்டிருக்கிறேன்.
நட்சத்திரங்களை வெளியிடங்களில் நிறுத்தியும் கேண்டிட்டாகவும் எடுப்பதில் அதிக ஆர்வம் காட்ட என்ன காரணம்?
இயற்கை வாழ்வது வெளியேதான். எத்தனை பெரிய நட்சத்திரம் என்றாலும் அவுட்டோரில் எடுக்க அனுமதிக்கும்படி அன்புடன் கேட்டு சம்மதிக்க வைத்துவிடுவேன். உயிர் நிரம்பிய படங்களை இயற்கை ஒளியில்தான் எடுக்க முடியும். அதேபோல் திரைக்கு வெளியே, நட்சத்திரங்கள் பொதுநிகழ்வுகளுக்கு வரும்போது தங்களது யதார்த்த பிம்பங்களை இயல்பாகப் பிரதிபலிக்கும் தருணங்களைக் ‘கேண்டிட்டாக’ பதிவு செய்வதில் நமக்குப் புதையலாகக் கிடைப்பது அவர்களது உடல்மொழி உள்ளமொழி இரண்டும். அதை மிஸ்பண்ணவே மாட்டேன்.
உங்கள் கேமரா?
எனக்கு சிறு டிஜிட்டல் கேமராவை முதலில் அக்கா கொடுத்தார்கள். அதில் எடுக்க ஆரம்பித்தவன், பிறகு ஒளிப்படக் கலையை முழுநேர வாழ்க்கையாக ஆக்கிக்கொண்டபோது என் தோழி 40 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கெனான் கேமாரா வாங்கித் தந்தார். அது ஹை எண்ட் கேமரா அல்ல. ஆனால், இன்றுவரை அந்தக் கேமராவில்தான் எடுத்துக்கொண்டிருக்கிறேன். விலையுயர்ந்த கேமராவின் வசதிகள் கலையை ஒருபோதும் வெளிப்படுத்தாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT