Published : 19 Aug 2016 11:13 AM
Last Updated : 19 Aug 2016 11:13 AM

நா. முத்துக்குமார்: எளிமையின் வழி தேடி வந்த வண்ணத்துப்பூச்சி!

அது 2006-ம் ஆண்டு. அப்போது நான் உதவி இயக்குநர். சென்னையின் சாலிக்கிராமத்தில் பிரசாத் லேப் இருக்கும் சாலையில் இருசக்கர வாகனத்தில் விரைந்துகொண்டிருந்தேன். லேப் எதிரேயிருந்த தேநீர்க் கடையிலிருந்து “ஜேசு” என்ற கணீர்க் குரல். வண்டியை ஓரங்கட்டித் திரும்பிப் பார்த்தேன். நா. முத்துக்குமார் நின்றிருந்தார். என்னை இயற்பெயர் சொல்லி அழைக்கிற வெகுசில நண்பர்களில் முத்துக்குமாரும் ஒருவர். வண்டியைத் திருப்பி, கடைவாசலில் நிறுத்திவிட்டு முத்துவைப் பார்த்தேன்.

அவரது கையில் இருந்த கண்ணாடி டம்ளர் தேநீரிலிருந்து ஆவி பறந்துகொண்டிருந்தது. எனக்கு டீ சொல்லிவிட்டுத் திரும்பினார். “ஏன் ஜேசு இப்படிப் பண்ணீங்க? உதவி இயக்குநரா வேலை செய்யணும்ன்னு எங்கிட்ட சொல்றதுல உங்களுக்கு என்ன ஈகோ?” என்று அக்கறை கலந்த கோபத்துடன் கேட்டார். நான் பிரபலமான இயக்குநரிடம் உதவியாளராகச் சேரவில்லை என்பதில் அவருக்கு வருத்தம். தேநீர்க் கடைக்கு அருகில் அருணாசலம் சாலையில் இருந்த அவரது அலுவலகத்துக்கு அழைத்துப்போனார்.

எப்போது சந்தித்தாலும் ஜெயமோகன், சாரு நிவேதிதா தொடங்கி, கலாப்ரியா, கல்யாண்ஜி என்று நகர்ந்து, தற்போது படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தைப் பற்றிக் கூறிய பின், “நாகராஜுவும் ஏர்னெஸ்டும் எப்படியிருக்காங்க?” என்று என் முன்னாள் அறை நண்பர்களை விசாரித்துவிட்டு, தற்போது எழுதிக்கொண்டிருக்கும் பாடல்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவார்.

அப்போது ‘வெயில்’ படத்தின் இசை வெளியாகியிருக்கவில்லை. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வெயிலோடு விளையாடி’ பாடலை எனக்குப் பாடிக்காட்டினார் முத்து. பாடுவதற்குமுன் “வெயிலை மட்டுமே வானமாகப் பார்த்து, புழுதியைச் சட்டையாக அணிந்துகொள்ளும் வறண்ட தென்தமிழக ஊரொன்றில் இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்கள் வாழ்கின்றன. அவர்களது பால்ய வாழ்வின் கொண்டாட்டத் தருணங்களை இந்தப் பாடல் சித்தரிக்கிறது” என்று பாடலுக்கான சூழ்நிலையை விவரித்த பின் பாட ஆரம்பித்தார்.

இசை இல்லாமலேயே அவர் பாடப் பாடக் காட்சிகள் எனக்குள் விரிந்தன. அவர் பாடி முடித்ததும், “கிராமிய பால்யத்தின் பொதுக்கூறுகள் இந்தப் பாடலின் அனுபவமாக வசீகரிக்கின்றன. உங்களுக்கு இந்தப் பாடலுக்காக தேசிய விருது கிடைக்கலாம் “ என்றேன். “விருது நமக்கு எப்போ கிடைக்கணும்ன்னு இருக்கோ அப்போ கிடைக்கட்டும் ஜேசு. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்” என்றார் அமைதியாக.

எளிமையின் ஆழம்

நிஜ வாழ்வில் மட்டுமல்ல; தன் கலை வாழ்விலும் எதிர்பார்ப்புகள் எதையும் வரித்துக்கொள்ளாத இந்த எளிமைதான் நா. முத்துக்குமாரின் தனித்த முத்திரை. முத்துகுமாரின் பிரபலமான கவிதைத் தொகுப்பாக ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ வெளியான பிறகுதான் இலக்கியப் பரிச்சயம் கொண்ட இளைய தலைமுறை சினிமா இயக்குநர்களுக்கு முத்துக்குமார் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. தமிழ் வாழ்க்கையின் யதார்த்த தருணங்களை உணர்ச்சிபூர்வமான காட்சி மொழியில் கவிதையாக்குவதற்கு முத்துகுமார் நம்பியது எளிமையைத்தான்.

உயில் என்று தலைப்பிட்ட கவிதையில்…

‘மகன் பிறந்த பிறகுதான்

அப்பாவின் பாசத்தை

அறிந்துகொள்ள முடிந்தது

என் அன்பு மகனே

உன் மகன் பிறந்ததும்

என்னை நீ அறிவாய்!’

என்று எழுதியிருக்கிறார் முத்துக்குமார். ஆனால் அப்பாவைக் கொண்டாடியவர் அவர். தமிழாசிரியரான அவரது தந்தை, தனது ஊதியத்தின் 20 சதவீதத்தில் புத்தகங்கள் வாங்கிச் சேர்த்து, வீட்டிலேயே நூலகம் கட்டித் தன் மகனுக்குத் தமிழின் முகத்தைக் காட்டி வளர்த்தவர். அப்பா திறந்து காட்டிய புத்தக உலகம் தந்த அறிவு, பாட்டியின் பாசம், கிராமத்து வாழ்வின் அனுபவங்கள் ஆகியவற்றோடு சென்னை வந்த முத்துக்குமாரை நட்புலகம் ஆரத் தழுவிக்கொண்டதற்கு அவரது எளிமையும் அவரது தமிழின் எளிமையும்தான் ஆதாரமான காரணம். அடுத்து, யாரையும் நிராகரித்துவிடாத அவரது அன்புலகம்.

‘மாநகரத்துச் சாலைகளுக்கு

அவ்வப்போது உயிர் கொடுக்கிறது

தொட்டியில் பூத்த

ரோஜாச் செடிகளுடன்

வந்து போகும் மாட்டு வண்டி!’

என்று நேசத்துடன் சென்னையின் வாழ்வை எழுதியவர் முத்து. “ஏன் இப்படி உங்களை வருத்திக்கிறீங்க முத்து? ஒழுங்கா தூங்குங்க” என்றால் “முத்துக்குமார் பாட்டு எழுத மாட்டேன்னு சொல்லிட்டாருன்னு யாரும் என்னைப் பத்தி சொல்லிடக் கூடாது ஜேசு…” என்று அனைவரையும் திருப்திப்படுத்த நினைத்து ஓய்வின்றித் தன்னை உருக்கிக்கொண்ட இவரது திரைப்பாடல்கள் மெட்டுக்களில் ஒட்டிவைக்கப்பட்ட வெற்று வார்த்தைகள் அல்ல.

‘ஒரு வண்ணத்துப்பூச்சி

எந்தன் வழி தேடிவந்தது…

அதன் வண்ணங்கள் மட்டும்

இன்று விரலோடு உள்ளது’

என்று எழுதி நவீனக் கவிதையைத் திரைப்பாடலுக்கு இடம்பெயர்த்துக் காட்டி அதில் வெற்றிபெற்ற கவிஞன்தான் முத்துக்குமார். இத்தகைய தொடர் முயற்சியின் மூலம் தமிழ்த் திரைப்பாடல்களில் நவீனத்தைப் பெருமளவில் புகுத்தியவர். கண்ணதாசனுக்கும் வைரமுத்துவுக்கும் பிறகு கற்பனை வளமும் எளிமையும் கூடிய கவிதை வடிவில் தமிழ் வாழ்க்கையின் வண்ணங்களைத் திரைப்பாடலில் தீட்டிக் காட்டியவர். இசையோடு இணைந்தும் பிணைந்தும் மனித உணர்வுகளை அழகிய வரிகளில் இழைத்துக் காட்டும் கலைத் தருணங்கள் நிறைந்த பாடல்களைத் தன் எளிமையான மொழியால் மிகக் குறுகிய காலத்தில் படைத்துக் காட்டி மறைந்திருக்கிறார் முத்துக்குமார்.

நாம் இழந்த இயக்குநரும் இலக்கியவாதியும்

காஞ்சிபுரத்தில் கன்னிகாபுரம் கிராமத்தில் பிறந்து வளர்ந்த முத்துக்குமார் வீட்டருகே இருந்த பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பயின்றவர். வேதியியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர். அதனாலோ என்னவோ அறிவியலோடு இணைந்து இயற்கையை நேசிக்கும் கவிஞனாக உருக்கொண்டார். ’நியூட்டனின் மூன்றாம் விதி’ கவிதைத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் இதற்கு உதாரணம். சென்னை வந்து பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் முடித்ததுமே தனக்குக் கிடைத்த தமிழாசிரியர் பணியைப் புறம்தள்ளிவிட்டு சினிமாவுக்குப் பாட்டெழுதக் கிளம்பினார். யாப்பிலணக்கத்தை முதுகலையில் முறையாகப் பயின்று சங்க இலக்கியங்களை ஆர்வத்துடன் வாசித்து முடித்துவிட்டிருந்தாலும் அந்தப் புலமை எதையும் தன் கவிதையின் மொழியின் மீது அவர் திணித்துவிடவில்லை.

ஜென் தத்துவம் மீதும் ஜென் கவிதைகள் மீதும் தீராக் காதல் அவரிடம் இருந்துகொண்டேயிருந்தது. ‘காட்டிலே காயும் நிலவு கண்டுகொள்ள யாருமில்லை’ என்று எழுதிக் காதலின் ஏகாந்த மனநிலையை வெளிப்படுத்தியவர். ‘மின்சாரக் கம்பி மீது மைனாக்கள் கூடு கட்டும்’ என்று சாதியத்தை மீறி எழும் காதலை நவீனமாக உணர்த்தியவர். ‘காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது’ என்று ஜென் தத்துவத்தை மிக எளிய காட்சிக் குறியீடுகளாகத் திரைப்பாடல்களுக்கு இடம்பெயர்த்தவர்.

தொடர்ச்சியான இலக்கிய வாசிப்பும் திரை இயக்கத்தின் மீது பிடிப்பும் கொண்டிருந்த முத்துக்குமாரை ஒரு திரைப்பட இயக்குநராகவும் நாவலாசிரியராகவும் நாம் காண முடியாதபடி செய்துவிட்டது அவரது மறைவு. ஆனால், அவர் எழுதிச் சென்றிருக்கும் வரிகள் இனிவரும் காலங்களில் திரைப்பாடலை இலக்கியத்துக்கு அருகில் கொண்டுசெல்லும் முயற்சியில் முக்கியமான பங்களிப்பாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x