Published : 06 Jan 2017 10:44 AM
Last Updated : 06 Jan 2017 10:44 AM
‘கிஸ்மத்’ என்ற துருக்கிய மூலச் சொல்லுக்கு ‘விதி - தலைவிதி’ என்று பொருள். பெர்சிய மொழியிலிருந்து உருது மொழிக்குச் சென்று பின்னர் இந்தித் திரை மொழியில் வெகுவாக பயன்படுத்தப்படும் இந்தச் சொல்லின் ‘கிஸ்மத்’ மிகச் சிறப்பானது. ‘கிஸ்மத்’ என்ற ஒரே பெயரில் 1943,56, 69, 80, 95,98, 2004 ஆகிய வருடங்களில் ஏழு இந்தித் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. மற்ற எந்தப் பெயரிலும் எந்த மொழியிலும் இவ்விதம் எப்போதும் நடப்பது சாத்தியமில்லை. இது தவிர இதே பெயரில் மூன்று இந்தித் தொலைக்காட்சித் தொடர்களும் மூன்று நேபாளி படங்களும் எடுக்கப்பட்டு அவை எல்லாமே வெற்றியடைந்தன. அது மட்டுமின்றி, கிஸ்மத் என்ற சொல்லை முன்னோட்டாக அல்லது பின்னொட் டாகக் கொண்டு ‘கிஸ்மத் கா சித்தாரா’ (விதி நட்சத்திரம்) ‘கிஸ்மத் கா கேல்’ (விதியின் விளையாட்டு) ‘ஹமாரி கிஸ்மத்’(நம் விதி) கிஸ்மத்வாலா (அதிஷ்ட்டகாரன்) போன்ற படங்களும் தோல்வியடைந்ததில்லை.
ஒரு சீண்டல் பாடல்
இந்தத் திரை நம்பிக்கையை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியது அர்ஜுன் ஹின்கோரனி எடுத்த மூன்று கிஸ்மத் படங்கள். அவற்றில் முதலாவதாக வந்த ‘கஹானி கிஸ்மத் கீ’(விதியின் கதை). இதுவும் வெற்றிப் படம். தர்மேந்திரா ரேகா ஜோடி சேர்ந்து நடித்த இந்தப் படத்தின் ‘அரே ரஃப்த்தா, ரஃப்த்தா தேக்கோ, ஆங்க் மேரி லடி ஹை, ஆங்க் மேரி லடி ஹை வோ பாஸ் மேரி கடி ஹை’ என்ற ‘டீசர் சாங்’ வகையைச் சார்ந்த சீண்டல் பாட்டு, இன்றளவும் மும்பை மக்கள் கேட்டு மகிழும் வேகமான மெட்டுடைய வித்தியாசமான பாடல்.
பல தரப்பட்ட மொழி பேசும் மும்பை மக்களை அடையாளப்படுத்தி அவர்களை விளிக்கும், பாய்யியோ பஹணோ (உ.பி., ம.பி., பிஹார் வட இந்தியர்கள்) மகன் பாய், சகன் பாய் (குஜராத்தி மார்வாடி) ரகோபா தோன்டுபா (மராட்டிய சாமன்யர்கள்) கர்னல் சிங் ஜர்னல் சிங் (பஞ்சாபி, சீக்கியர்) போன்ற சொற்களுடன் தொடங்கும் இந்தப் பாடல் மும்பை தெருக்களில் படமாக்கப்பட்டது.
ரேகாவின் ‘கேட் வாக்’, தர்மேந்திராவின் எளிய சாமானியனுக்கான உடல் மொழி யோடு, இந்தப் பாடலை இவரைத் தவிர வேறு எவரும் இப்படிப் பாடியிருக்க முடியாது என்று உறுதியாகச் சொல்லக்கூடிய பல குரல் மன்னன் கிஷோர்குமாரின் கேலியான தொனி ஆகியவை வெகுவாகக் கவர்ந்தன. கல்யாண் ஆனந்த்ஜியின் இசை அமைப்புக்கேற்ற ராஜேந்திர கிஷனின் பாடல் வரிகள் கொண்ட இப்பாடல் ‘அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு, என் நெஞ்சு குலுங்குதடி’என்ற தமிழ் சீண்டல் பாட்டை நமக்கு நினைவுபடுத்தும். இப்பாடலின் பொருள்:
மெல்ல மெல்லப் பாருங்கள்
என் விழிகளில் விழுந்தவள்
என் எதிரில் எழுந்து நிற்கிறாள்.
எப்பொழுது என்னை அறிந்தாளோ
அப்போதிலிருந்து என்னிடம் மயங்குகிறாள்
நானும் ரகசியமாக அவளை விரும்புகிறேன்.
இவள் என் மனதில் அமர்ந்துவிட்டாள்
நன்றாக வசமாகிவிட்டாள்.
(இப்படி தர்மேந்திரா பாடி ஆடும் பொழுது, ரேகா, ‘யே கியா கஹரஹே ஹோ மை னேத்தோ ஐய்ஸீ நஹீன் கஹாத்தா’ -அட இது என்ன இப்படிச் சொல்லுகிறாய், நான் ஒன்றும் அப்படி ஏதும் சொல்லவில்லை என்று சிணுங்கி வெளிப்படுத்தும் கண் அசைவும் உடல் மொழியும் இந்திப் பட ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொன்டன.)
எனக்குக் காதல் கற்றுக் கொடுத்தது யார்
காதல் கற்றுத்தந்து இவள்தான்
என்னைப் பைத்தியமாக்கியதும் இவளே.
இது காதலின் மகத்துவம். மதுவின் தாக்கம் அல்ல.
நடக்க வேண்டியதே நடந்தது
எவரின் பிழையும் இல்லை.
கரங்களில் சிக்கிக்கொண்டாள் கருத்தில் வசமாகிவிட்டாள்.
அட முதலில் வம்பு செய்தது இவள்தான்.
வம்பு செய்து என்னை வசப்படுத்தியது இவள்தான்.
இவளுக்கு என் மேல் விருப்பம்.
எனக்கு இவள் மேல் விருப்பம்.
உள்ளத்தோடு உள்ளம் கலந்துவிட்டது.
உரையாடல் இங்கு நின்றுவிட்டது.
இதுதான் உண்மை.
இப்படி முடியும் இந்தப் பாடலின் இறுதியில், ‘பைத்தியம் பிடித்துவிட்டதா உனக்கு? நான் ஒன்றும் அப்படிச் சொல்லவில்லை’ என்று பொய்யாகச் சினம் கொள்ளும் ரேகாவை, ‘வெட்கப்படாதே வெட்கப்படாதே’ என்று குழைந்து வசீகரிக்கும் குரலால் மராட்டிய மீனவப் பாட்டு மெட்டில் பாடியிருக்கிறார் கிஷோர் குமார்.
மதுவின் ‘மகத்துவ’த்தைக் கூறுவது போன்ற இப்படத்தின் இன்னொரு பாடல் இங்கு குறிப்பிடத்தகுந்தது. தமிழ்த் திரையில் கண்ணதாசனைத் தவிர எவரும் எழுதத் துணியாத, எந்த நாயகனும் நடிக்கத் தயங்குகிற பாடல் அது. ‘துனியா முஜ்ஸே கஹ்த்தி ஹை பீனா சோட் தே, யே கியோன் நஹீன் கஹத்தி ஹை ஜாலிம், ஜீனா சோட் தே’ என்று தொடங்கும் அந்தப் பாடலின் பொருள்:
இந்த உலகம் என்னிடம் கூறுகிறது
குடியை விட்டுவிடு என்று.
அது என்னிடம் ஏன் கூறுவதில்லை
வாழ்வதை விட்டுவிடு என்று.
என்ன புரியும் இந்த உலகத்திற்கு
என்ன தெரியும் இந்த உலகத்திற்கு.
எத்தனை கடினம் இந்த வாழ்க்கைப் பயணம்.
இறப்பின் கண் ஒவ்வொரு அசைவிலும் தெரிகிறது.
துக்கத்தைக் கண்டு அஞ்சி நான் குடிக்காவிட்டால்
நண்பா சொல் நான் எப்படி உயிர்வாழ்வது?
இந்த உலகம் என்னிடம் கூறுகிறது
குடியை விட்டுவிடு என்று.
அது என்னிடம் ஏன் கூறுவதில்லை
வாழ்வதை விட்டுவிடு என்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT