Published : 21 Sep 2018 11:36 AM
Last Updated : 21 Sep 2018 11:36 AM
அஜயன் பாலா – திரைப்பட எழுத்தாளர், இயக்குநர்
சினிமா இணைப்பிதழ் அல்லது சினிமா பக்கம் என்றால் நட்சத்திரங்களின் பெரிய படங்களைப் பார்ப்பது, அவர்களைக் குறித்த சர்ச்சைக்குரிய செய்திகளை படிப்பது என்ற நிலையே ‘இந்து தமிழ்’ நாளிதழ் தொடங்கப்படுவதற்கு முன்புவரை இருந்தது.
இதை மாற்றியது ‘இந்து டாக்கீஸ்’. திரைப்படம் சார்ந்த அறிவு, திரைப்பட வரலாறு இரண்டுக்கும் சமமாக இடமளித்த முதல் நாளிதழ் ‘இந்து தமிழ்’தான். ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழ் வழியே கவனம் பெற்ற உலகத் திரைப்படங்கள், பிறமொழி இந்தியப் படங்கள் ஏராளம்.
வெகுஜன திரைப்படங்கள் மட்டுமே சினிமா அல்ல, அவற்றுக்கு மாற்றாக வெளியாகும் ஆவணப்படங்கள், குறும்படங்களுக்குக் கவனம் பெற்றுத்தரும் அங்கீகார மேடையாக ‘இந்து டாக்கீஸ்’ இருப்பதைப் பார்க்கிறேன்.
கேபிள் சங்கர் – எழுத்தாளர், இயக்குநர்
நாளிதழ்களின் சினிமா பகுதி என்பது தயாரிப்பில் இருக்கும் திரைப்படங்களைப் பற்றிய செய்திகள், வெளியாகும் படங்களுக்கு விமர்சனம் வெளியிடுவது என்று மட்டுமே இருந்துவந்தது. இதை அப்படியே புரட்டிப்போட்டது ‘இந்து தமிழ்’.
சினிமா ரசனையை வளர்க்கும் உள்ளடக்கத்துக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தது, திரையுலக வியாபாரம், வசூல், திரையுலகப் போக்குகள் ஆகியவற்றை வல்லுநர்களைக் கொண்டு எழுத வைத்தது ஆகிய இரண்டும் தமிழ் பத்திரிகை உலகில் இதற்குமுன் நிகழாதவை. இந்த முயற்சி சினிமா பகுதியை வாசிப்பவர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக அமைந்தது.
அதேபோல் பிரபல நட்சத்திரங்கள், நட்சத்திர இயக்குநர்களின் பேட்டிகளுக்கு அப்பால் சிறு படங்களை இயக்கும் அறிமுக இயக்குநர்கள், சுயாதீன படைப்பாளிகளின் பேட்டிகளையும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பேட்டிகளையும் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வெளியிட்டு வருவதிலும், ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழே முன்னோடி என்பேன்.
ஜி.வி. பிரகாஷ் - இசையமைப்பாளர், நடிகர்
இன்று யூடியூபில் கிடைக்காதது எதுவுமில்லை. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று சோஷியல் மீடியா ஆட்சி செய்யும் காலத்தில் சினிமாவுக்காக நான்கு பக்கங்களை ஒதுக்கி ஒரு இணைப்பிதழைக் கொண்டுவருவது சினிமா துறைக்கு மிகப் பெரிய சப்போர்ட்.
‘இந்து டாக்கீஸின்’ எல்லாப் பகுதிகளையும் வாசிக்க எனக்கு நேரம் கிடைப்பதில்லை. ஆனால், சக நடிகர்களின் பேட்டிகளைப் படித்துவிடுவேன். அதேபோல் திரையிசைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகும் ‘மியூசிக் காலம்’ பகுதிகளை விரும்பி வாசிப்பேன்.
முன்பு ‘மொழிகடந்த ரசனை’, ‘காற்றில் கலந்த இசை’, இப்போது ‘ராகயாத்திரை’ அந்த வரிசையில் வருகின்றன.
ஐஸ்வர்யா ராஜேஷ் – நடிகை
என்னைப் போன்ற நடிகைகளைப் பற்றிய செய்திகளை, படங்களை மற்ற பத்திரிகைகளில் பெரிதாக வெளியிடுவதை அடிக்கடிப் பார்க்கிறேன்.
ஆனால் பேட்டி என்றால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது தீபாவளி, பொங்கல் நேரத்தில் வெளிவந்தாலே பெரிய விஷயம். ஆனால், பேசப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்கும்போதெல்லாம் எனது பேட்டிக்கு ‘இந்து தமிழ்’ இடம் தந்திருக்கிறது.
அதிலும் கதாபாத்திரம், நடிப்பு, சமூகம் சார்ந்து கேள்விகள் கேட்பது எனக்குப் பிடிக்கும். அப்படிக் கேட்கப்படும்போது நாமும் சிறந்த பதிலைக் கூறவேண்டும் என்ற உற்சாகத்தை ‘இந்து டாக்கீஸ்’ ஏற்படுத்தியிருக்கிறது.
சொல்லப்போனால் நடிப்புடன் சமூகம் பற்றிச் சிந்திக்கவும், இந்தப் பேட்டிகள் என்னைத் தூண்டியிருக்கின்றன.
இந்து டாக்கீஸில் வாசகர் விரும்பிய மாற்றங்கள் இந்து டாக்கீஸ் இணைப்பிதழை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை கேட்டிருந்தோம். ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற படிவத்தை ஆர்வமுடன் முன்வந்து பூர்த்திசெய்து நூற்றுக்கும் அதிகமான வாசகர்கள் அனுப்பியிருந்தார்கள். இந்து டாக்கீஸில் வெளியாகும் படைப்புகளில் நட்சத்திரப் பேட்டிகள், அந்தக் கால திரை ஆளுமைகளின் கதை, சினிமாத் தொழில்நுட்பம், பிறமொழிப் படங்களைப் பற்றியத் திரைப் பார்வைகள், உலகப் படங்களுக்கான அறிமுகம் ஆகியவற்றை பெரும்பாலோர் தங்கள் விருப்பமாகக் கூறியிருக்கிறார்கள். தொடர்களில் ‘சிரித்ராலயா’, ‘திரைப்பள்ளி’ ஆகியவை அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. ‘ஹாலிவுட் ஜன்னல்’, ‘கோடம்பாக்கம் சந்திப்பு’, ‘திரைப் பார்வை’ ஆகியவை வாசிப்பில் வாசகர்களின் முதன்மைத் தேர்வாக இருந்துள்ளன. அந்தக் கால சினிமா, சாதனை படைத்த திரை ஆளுமைகள் குறித்து வெளிவராதத் தகவல்கள், சினிமா தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சார்ந்து இன்னும் அதிகமாகப் படைப்புகளை வெளியிடும்படி பலரும் கேட்டிருக்கிறார்கள். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ‘காமிக்ஸ் ரீவைண்ட்’ என்ற புதிய பகுதி இந்த இதழில் தொடங்கப்பட்டுள்ளது. திரையரங்கம், தொலைக்காட்சிக்கு வெளியே, புதிய பொழுதுபோக்குத் தளமாக உருவெடுத்திருக்கும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் படைப்புகளை அறிமுகம் செய்யும் பகுதியாக ‘டிஜிட்டல் மேடை’யும் தொடங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் நீங்கள் பரிந்துரை செய்திருக்கும் கருத்துகளைக் கவனத்தில் கொண்டு, வரும் வாரங்களில் அடுத்தடுத்த மாற்றங்களை ‘இந்து டாக்கீஸ்’ தாங்கிவரும். உங்கள் வாசிப்புக்கு மேலும் அர்த்தமும் சுவையும் கூட்டத் தயாராகி வருகிறோம். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT