Last Updated : 21 Sep, 2018 11:36 AM

 

Published : 21 Sep 2018 11:36 AM
Last Updated : 21 Sep 2018 11:36 AM

ஹாலிவுட் ஜன்னல்: இது ‘முதல்வன்’ கதை!

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்து அரை நூற்றாண்டை எட்டும் தருணம் இது. அதன் பின்னணியைப் பேசும் திரைப்படமாக வரும் அக்டோபரில் வெளியாகிறது ‘ஃபர்ஸ்ட் மேன்’.

மனித இனம் கடந்து வந்த பாதையில், அவன் நிலவில் வைத்த முதல் காலடி முக்கியமானது. 1969-ல் நாசா ஏவிய ‘அப்பல்லோ 11’ விண்கலத்தில் பயணித்த இருவரில் நீல் ஆம்ஸ்ட்ராங் அந்தக் காலடிக்குச் சொந்தக்காரர் ஆனார். இவரது சுயசரிதை ‘ஃபர்ஸ்ட் மேன்: த லைஃப் ஆஃப் ஏ. நீல் ஆம்ஸ்ட்ராங்’ என்ற தலைப்பில் வெளியாகி புலிட்சர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

இதனை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘ஃபர்ஸ்ட் மேன்’ திரைப்படத்தை, ஆஸ்கர் விருது பெற்ற ‘லா லா லேண்ட்’ படத்தின் இயக்குநர் டேமியன் சாஷெல் இயக்கி உள்ளார். லாலா லேண்ட் நாயகன் ரையன் காஸ்லிங், நீல் ஆம்ஸ்ட்ராங்காக வருகிறார். ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப அணியும் ‘ஃபர்ஸ்ட் மேன்’ படத்துக்காக இயக்குநருடன் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

விண்வெளி சாகசத்துக்கான ஆபத்து மிகுந்த தொடக்க முயற்சிகளைப் பதிவு செய்திருப்பதுடன், அதற்குத் தன்னை அர்ப்பணித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின் தனிப்பட்ட வாழ்க்கையின் உருக்கமான கட்டங்களையும் தொட்டுச் செல்கிறார்கள். தரையிறங்கும் பயிற்சியில் மயிரிழையில் உயிர் தப்பியது, 2 வயது மகனை மூளை புற்றுநோய்க்கு பலி கொடுத்தது, மனைவியுடனான சச்சரவு, நாசாவின் அரசியல் என ஆம்ஸ்ட்ராங்கின் ஒன்பது ஆண்டு வாழ்க்கையின் வாயிலாகப் பலவற்றையும் படம் பதிவு செய்திருக்கிறது.

அமெரிக்கக் கொடியை நிலவில் நாட்டும் காட்சியை இருட்டடிப்பு செய்திருப்பதாக அந்நாட்டின் தேச பக்தர்கள் பலர் கச்சை கட்டிக் கிளம்பி இருக்கிறார்கள். உச்சமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘இந்த படத்தைப் பார்க்கப் போவதில்லை’ எனக் கருத்து தெரிவித்தது படத்துக்கு விளம்பரம் சேர்த்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x