Published : 19 Sep 2014 11:29 AM
Last Updated : 19 Sep 2014 11:29 AM
ஆங்கில நாளிதழ் ஒன்று தனது டிவிட்டர் கணக்கில் “ஓ மை காட்! தீபிகா படுகோனின் கிளிவேஜ் ஷோ” என்ற தலைப்பில் ஒரு புகைப்படக் கட்டுரைக்கு இணைப்பு கொடுத்திருந்தது (தற்போது இந்த ட்வீட் நீக்கப்பட்டுவிட்டது). இந்த ட்வீட்டை கவனித்த கோச்சடையான் புகழ், பாலிவுட் நாயகி தீபிகா படுகோன் தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். “ஆமாம் நான் ஒரு பெண், எனக்கு மார்பகங்கள் இருக்கின்றன, அதனால் கிளிவேஜ் இருக்கிறது, இதில் உங்களுக்கென்ன பிரச்சினை?” என்று காட்டமாக ட்வீட் செய்தார். தீபிகாவின் மனக் கொதிப்பு அத்துடன் அடங்கிவிடவில்லை.
தொடர்ந்து தீ தெறிக்கும் ட்வீட்டுகளை அடுத்தடுத்துப் பதிவிட்ட அவர், “பெண்ணுக்கு மரியாதை கொடுப்பது எப்படி என்பது தெரியாமல், பெண்ணுரிமை குறித்துப் பேசாதீர்கள்” என்றார். அடுத்து வந்த ட்வீட்டில் “இந்தியாவின் செய்திப் பத்திரிகை ஒன்றுக்கு, இதுதான் முக்கிய நியூஸா!?” என நறுக்கென்று கேட்டிருந்தார்.. சம்பந்தப்பட்ட பத்திரிகையின் பிரம்மாண்டத்துக்கு அஞ்சாமல் வெளுத்து வாங்கிய தீபிகாவின் துணிவையும் அவரது உணர்வையும் பாலிவுட்டில் பாராட்டியும் ஆதரித்தும் பேசிவருகிறார்கள்.
முக்கியமாக டிவிட்டரில் தீபிகாவைப் பின் தொடரும் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவுசெய்தனர். சம்பந்தப்பட்ட நாளிதழையும் தீபிகா ரசிகர்கள் வசைபாடித் தீர்த்தனர். தீபிகா கோபத்துடன் டிவிட் செய்த 60 நிமிடங்களில் 1550 பேர் அதை ரீடிவிட் செய்தனர்.
டிவிட்டர் இருக்கட்டும்; பொதுவெளியில் தீபிகாவுக்கு ஆதரவு கிடைக்குமா என்று ஃபேஸ் புக், டுவிட்டர் இரண்டிலும் சூடான விவாதம் தொடங்கியது. இந்தியாவின் பொதுப் பிரச்சினைகள் மற்றும் மாறிவரும் வாழ்வியல் குறித்துக் கூர்மையான கட்டுரைகளை எழுதிவரும் பத்தி எழுத்தாளர் ஷோபா டே, இந்த விவகாரத்தில் தனது கருத்தைத் தெரிவித் திருக்கிறார். “இன்றைய உலகில் இது ஒரு சாதாரண விஷயம். இன்று உள்ள கேமராக்களுக்கு எல்லாம் இவை மட்டும் தெரிகிறது. இதனை ஏன் தீபிகா புரிந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை. அவருக்கு நல்ல உடல் உள்ளது. அதனை அவரது ரசிகர்கள் பல்வேறு விதமாகப் பார்த்து ரசித்துக் கொள்கிறார்கள். திரைப்படங்களில் மட்டும் தனது உடலைக் கவர்ச்சியாகக் காட்டும் தீபிகா இதனை மட்டும் ஏன் எதிர்க்கிறார்? மேலும் இது ஒரு முக்கியமான செய்தியா என்று தீபிகா கேட்டுள்ளார். ஆமாம் ஷாருக் கானின் எயிட் பேக்கைப் போல இதுவும் முக்கிய மானதுதான்” என்று கூறியுள்ளார்.
வணிக சினிமாவில் கதாநாயகியாக நடிப்பது அதிலும் கவர்ச்சி காட்டி நடிப்பது என்று வந்து விட்டபிறகு தீபிகா படுகோன் தனது கிளிவேஜ் புகைப்படங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது சரியா என்ற கேள்வியைக் குஷ்பூவிடம் கேட்டதும் அவர் கொதித்துப்போய்விட்டார். “இந்தக் கேள்வியிலேயே ஆணாதிக்கம் ஒளிந்திருக்கிறது. இங்கு பார்வைதான் வேறுபடுகிறது. ‘கிளிவேஜ் ஷோ’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது அப்பட்டமான பத்திரிகை வியாபாரத் தந்திரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தீபிகா படுகோனே அழகான ஹீரோயின், நான்கு சூப்பர் ஹிட் வெற்றிகளை வரிசையாகக் கொடுத்தவர்.
பாலிவுட்டில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். அவர் எப்போதுமே நான் கவர்ச்சியாக நடிக்கவில்லை என்று கூறியதில்லை. கதாபாத்திரம் கோருவதை, காட்சிக்கு நேர்மையாகத் தேவைப்படும் கிளாமரை வெளிப்படுத்தியிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் பல படங்களில் அவரை அறியாமல் இயல்பாக அவரது கிளாமர் வெளிப்பட்டுள்ளது. அவர் வலிந்து கிளாமர் காட்டியவரில்லை.
ஆனால் போன வருடம் ஒரு நிகழ்ச்சியில் தவறான, தந்திரமான கோணத்தில், தீபிகாவுக்கே தெரியாமல் எடுத்த படங்களை இப்போது வெளியிடுகிறார்கள் என்றால், அதில் சென்சேஷனல் வியாபாரம் என்ற ஒரே நோக்கம் மட்டும்தான் வெளிப்படுகிறது. தீபிகாவுக்குத் தெரியாமல் இந்தப் படங்களை எடுத்த புகைப்படக்காரருக்கும், அதை வெளியிட்ட பத்திரிகைக்கும் முதுகெலும்பு இருக்கிறதோ இல்லையோ, வெளிப்படையான கருத்து மூலம் தனக்கு முதுகெலும்பு இருக்கிறது என்பதை துணிச்சலாக வெளிப்படுத்தியிருக்கிறார் தீபிகா” என்கிறார் குஷ்பு.
குஷ்புவின் கருத்து இவ்வாறு இருக்க, இதற்கு முன்பும் தீபிகாவின் இதுபோன்ற புகைபடங்கள் வெளியாகியுள்ளன என்றும் இப்போது அவர் இதைப் பொருட்படுத்தக் காரணம், தற்போது வெளியாகியிருக்கும் அவரது படத்தின் விளம்பரத்திற்காகத்தான் என்றும் ஒரு சாரார் விமர்சிக்கிறார்கள். தீபிகா படுகோன் நடித்திருக்கும் ‘ஃபைன்டிங் ஃபேனி’ கடந்த 12-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஷாருக் கான் ஜோடியாக தீபிகா நடித்துள்ள ‘ஹேப்பி நியூ இயர்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. ஆனால் கிளிவேஜ் சர்ச்சையில் அதற்கு முன்பே வெடி கொளுத்தி விட்டார் தீபிகா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment