Published : 07 Sep 2018 10:38 AM
Last Updated : 07 Sep 2018 10:38 AM

நான் அவர்களுடைய அண்ணன்! - சிவகார்த்திகேயன் நேர்காணல்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பொன்ராம் உடன் ஹாட்ரிக் வெற்றிக்காக ‘சீமராஜா’ மூலம் களமிறங்குகிறார் சிவகார்த்திகேயன். முதல்முறை முறுக்கு மீசையுடன் தோன்றும் சிவகார்த்திகேயன், படத்தின் பிளாஷ்-பேக் காட்சியில் ‘பாகுபலி’ ஸ்டைலில் அரசனாக வருகிறார். அவருடனான பிரத்யேகப் பேட்டியிலிருந்து... 

சிவகார்த்திகேயன், இயக்குநர் பொன்ராம், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம், இசையமைப்பாளர் இமான் – இந்தக் கூட்டணியின் வெற்றி ரகசியம் என்ன?

சூரி அண்ணன், யுகபாரதி அண்ணனையும் இந்தக் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளுங்கள். எங்களின் தொடர் வெற்றிக்குக் காரணம் ‘நான்தான்’ என்று எங்களில் யாரும் நினைப்பதில்லை. ‘நாம்தான்’ என்ற டீம் ஸ்பிரிட்தான் எங்கள் வெற்றியின் பின்னணி. பொன்ராம் சார் கொடுக்கிற களம்தான் என்னை இந்த அளவுக்கு ஹ்யூமர் செய்ய வைக்கிறது. ஒவ்வொருவருமே அவரவர்க்குக் கொடுக்கப்பட்ட ஸ்பேஸை எந்த அளவுக்கு அழகாகப் பண்ணமுடியும் என்று போட்டிபோட்டு செய்துவிடுகிறோம்.

‘இவங்களோட போன படத்துல அப்படி இருந்தது, இந்தப் படத்துல அது போதலையே’ என்று யாரும் நினைக்க முடியாத அளவுக்கு, எங்களது ஒவ்வொரு படமும் முதல் படத்தைவிட ஒரு ஸ்டெப் மேலே இருக்க வேண்டும் என்று நினைத்து வேலை செய்கிறோம். ஒளிப்பதிவாளர் பாலு அதிக அனுபவம் உள்ளவர், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் தொடங்கியபோது இமான் சார் 75 படங்களைத் தாண்டியிருந்தார்.

ஆனால் நானும் பொன்ராம் சாரும் புதியவர்கள். ஆனால் இந்த வித்தியாசம் பற்றி யோசிக்காமல் எங்களை ஏற்றுக்கொண்டு, எல்லோரும் சேர்த்து படத்தை எவ்வளவு நிறைவாகக் கொடுக்கலாம் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். அதுதான் வெற்றி ரகசியம்.

‘சீமராஜா’வில் குதிரையில் வருகிறீர்களே! சீமாராஜா யாரை நினைவூட்டுவார்?

ஒரு தமிழ் மன்னரின் பரம்பரையில் தற்போது வாரிசாக இருக்கும் இளவரசன்தான் சீமராஜா. காலம் மாறிவிட்டாலும் பாரம்பரியத்தை விட்டுவிடாமல் குதிரை வண்டியைப் பூட்டிக்கொண்டு, தனக்கொரு கணக்குப்பிள்ளையை வைத்துக்கொண்டு வலம் வருபவன். சூரி அண்ணன்தான் கணக்குப்பிள்ளை. அவர் ட்ரெண்டியாக சஃபாரி சூட் போட்டுக்கொண்டு கையில் ஐபேட் உடன் வருவார்.

ஐபேடில்தான் சீமராஜா தனது டெய்லி புரோகிராம்களைப் பார்ப்பார். இப்படி விளையாட்டாக இருக்கும் சீமராஜா, தன்னை உணரும் ஒரு கட்டம் வரும்போது படம் அடுத்த கட்டத்தில் பயணிக்கும். நம் அனைவருக்கும் மண் எவ்வளவு முக்கியம் என்பதை இப்போது கொஞ்சம் அதிகமாகவே உணர்ந்திருக்கிறோம். அந்தப் பிரதிபலிப்பை இந்த கேரக்டர் வழியாகப் பார்க்க முடியும்.

ட்ரைலரின் கடைசி ஷாட்டில் மன்னர் தோற்றத்தில் வருகிறீர்களே?

படத்தின் பிளாஷ்-பேக் அது. அதில் 13-ம் நூற்றாண்டு தமிழ் மன்னனாக வருகிறேன். அந்த பிளாஷ்-பேக் திரைக்கதையில் எப்படிப் பொருந்துகிறது என்பதுதான் படத்தில் முக்கியமான அம்சமாக இருக்கும். எங்களது ஒவ்வொரு படமும் ஒரு ஸ்டெப் மேலே இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம் என்று சொன்னேன் இல்லையா, அதற்கு இந்தப் படத்தில் இந்த பிளாஷ்-பேக் பதிலாக இருக்கும்.

எல்லா வயதினரையும் கவரும் ஹ்யூமரும், செண்டிமெண்டும் பொன்ராமின் ஸ்பெஷல். அது இந்தப் படத்தில் ரொம்ப இயல்பா அமைந்திருந்தாலும் அவர் ஏரியாவில் இப்படியொரு விஷயமா என்று ஆச்சரியப்படும்விதமாவும் இந்தப் படம் இருக்கும்.

சுதந்திரச்செல்வி என்ற சமந்தாவின் கதாபாத்திரப் பெயரே வித்தியாசமாக இருக்கிறது. அவரோடு காதல் மட்டும்தானா, சிலம்பச் சண்டையும் உண்டா?

எங்க ரெண்டுபேருக்கும் இடையில் வாய்த் தகராறு மட்டும்தான். ஆனால் ஆக்‌ஷனில் அவருக்குக் கொஞ்சம் பிரித்துக்கொடுத்துவிட்டோம். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எனக்கு டூப் வேண்டாம் என்று பிடிவாதத்துடன் சிலம்பம் கற்றுக்கொண்டு சுழற்றியிருக்கிறார். காதலைத் தாண்டி, ஹ்யூமர், சீரியஸ் ஏரியா இரண்டிலுமே சமந்தாவின் சிலம்பத்துக்கு இயக்குநர் வேலை கொடுத்திருக்கிறார்.

சமந்தா எந்த அளவுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பாரோ அதே அளவுக்கு அவுட் அண்ட் அவுட் வில்லியாகக் களத்தில் இறங்கி அதிரடி கிளப்பியிருக்கிறார் சிம்ரன். மிக முக்கியமான கட்டத்தில் கெஸ்ட் ரோலில் வந்துசெல்லும் கீர்த்தி சுரேஷும் சர்ப்ரைஸ் கொடுப்பார்.

ஹீரோக்களின் சினிமாதான் இங்கு எல்லாம் என்ற நிலையைக் கதாநாயகிகளின் சினிமா மாற்றிக்கொண்டுவருவதைக் கவனிக்கிறீர்களா?

வரவேற்கப்பட வேண்டிய ஆரோக்கியமான ட்ரெண்ட். இதை நாம் வளர்க்க வேண்டும். ‘கனா’ என்ற கதாநாயகி சினிமாவை நானும் தயாரித்துக்கொண்டிருக்கிறேன். நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் மட்டுமல்ல, இனிமே வரப்போற எல்லாக் கதாநாயகிகளுமே இந்த மாதிரி சினிமாவில் நடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

நல்ல விஷயம் என்னவென்றால் ஹீரோயினாவும் நடிப்பேன், லீடாகவும் நடிப்பேன் என்று இரண்டுவிதமாகவும் தங்களைத் தக்கவைத்துக்கொள்கிறார்கள். இந்தப்போக்கு, கதை எழுதுகிறவர்களுக்கும் புத்துணர்வைக் கொடுக்கிறது. நல்ல விஷயங்களை ஆடியன்ஸுக்குப் பிடிக்கிறமாதிரி கொடுத்துவிட்டால் அவர்கள் நம்பிக்கை கொடுத்துவிடுவார்கள்.

ரவிகுமார் இயக்கத்தில் அறிவியல் புனைவுக் கதையில் நடிப்பதைப் பற்றி?

இதுவொரு நகைச்சுவை ஆக்‌ஷன் படம். எமோஷனும் அதிகமாக இருக்கிறது. அறிவியல் புனைவுக்கதை என்று வரும்போது அதன் திரைக்கதை, மேக்கிங் இரண்டிலுமே அதிக கவனமும் திட்டமிடலும் தேவை. இந்தப் படத்தின் திரைக்கதை, ப்ரி புரொடக்‌ஷன் பணிகளுக்கு மட்டுமே ரவிகுமார் சார் இரண்டு வருடம் செலவழித்திருக்கிறார். இந்தப் படத்தை 110 நாட்கள் படம்பிடிக்க இருக்கிறோம். இந்த மாதிரி ஒரு பிரம்மாண்ட அறிவியல் புனைவுக் கதைக்கு இது மிகவும் குறைவான நாட்கள்.

ஆனால், திட்டமிடுதலில் துல்லியமாக இருப்பதால் இது சாத்தியம். இந்தப் படத்துக்காக ஒரேயொரு கிராஃபிக்ஸ் சூப்ரவைஸ்சர் மட்டும்தான் லண்டனில் இருந்து வருகிறார். வி.எஃப்.எக்ஸ் பணிகளுக்கு நம்மிடமே சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இருக்கிறார்கள். முழுவதும் அவர்களைப் பயன்படுத்து கிறோம். நம்மாலும் உலகத் தரத்தில் கிராஃபிக்ஸ் கொடுக்க முடியும். அந்த இடத்துக்கு வந்துவிட்டோம்.

உங்கள் ரசிகர்களை எப்படி வழிநடத்தப்போகிறீர்கள்?

நான் சிவகார்த்திகேயனாக எப்படி இருக்கிறேன் என்பதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், என்னை ‘அண்ணே’ என்று அழைக்கிறார்கள். என்னை ஒரு நடிகனாகப் பார்க்காமல் அவர்களது குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதால்தான் இப்படிக் கூப்பிடுகிறார்கள்.

எனவே, எனக்குப் பொறுப்பு பலமடங்கு கூடிவிட்டது. ஒரு அண்ணன் வீட்டில் சரியாக இருந்தால்தான் தம்பி, தங்கைகள் சரியாக இருப்பார்கள். ஒரு அண்ணனாக நான் செய்யும் ஒவ்வொரு செயலும் அவர்களது வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும். எனது சொந்த வாழ்க்கையோ சினிமாவோ நான் அவர்களுக்கு நேர்மையான முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன். அண்ணன், தம்பி, அக்காள், தங்கையாகத்தான் என் ரசிகர்களைப் பார்க்கிறேன். இந்த உறவு இப்படியே தொடரும். ஏனென்றால் நான் அவர்களிடமிருந்து வந்தவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x