Published : 28 Sep 2018 11:37 AM
Last Updated : 28 Sep 2018 11:37 AM
உடலுக்குத் தலையும் காலும் இருப்பதைப் போலத்தான் திரைக்கதைக்குத் தொடக்கமும் முடிவும் (Beginning and Ending). தொடக்கம், முடிவு இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் அதன் உடலாக மட்டுமல்ல; உயிராகவும் இருப்பவை பிளாட் பாய்ண்ட்ஸ் (Plot points). உடலில் இந்த மூன்று பகுதிகளையும் இடம் மாற்றி வைக்க முடியாது. ஆனால், திரைக்கதையில் அது சாத்தியம். சுவாரசியம் கருதி, திரைக்கதையின் முடிவையே தொடக்கமாகக் காட்டி, பார்வையாளரைக் கதைக்குள் சட்டென்று இழுத்து நிறுத்திவிடுவது ஒருவகை.
‘முதல் மரியாதை’ படத்தின் தொடக்கக் காட்சியைப் பாருங்கள். ஆற்றோரத்தில் ஒரு கீற்றுக் குடிசை. அதில் முதியவர் ஒருவர் கயிற்றுக் கட்டிலில் மரணப் படுக்கையில் இருக்கிறார். அந்த முதியவர் ‘நடிகர் திலகம்’ சிவாஜி என்பது பார்வையாளர்களுக்குத் தெரிந்ததும் பகீர் என்று இருக்கிறது. பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி எப்படி நிறம் மாறியிருக்கிறார் எனப் பார்க்கலாம் என்று வந்தால், தொண்டையில் உயிர் இழுத்துக்கொண்டிருக்கிற மாதிரி நம்மவரை இப்படிப் போட்டு வைத்திருக்கிறாரே, ஏன் அவருக்கு இந்த நிலை, என்ன நடந்தது, யார் வரவையோ எதிர்நோக்கிக் காத்திருக்கிறாரே... யார் அவர்?
இப்படிப் பல கேள்விகளை எழுப்பிவிடும் தொடக்கம், சிவாஜி எனும் நடிகரும் ராதா எனும் நடிகையும் மறைந்துபோய், மலைச்சாமியாகவும் குயிலாகவும் வாழும் அவர்களுக்கு இடையிலான களங்கமற்ற காதல் வாழ்க்கையை நமக்கு விரித்துச் சொல்லத் தொடங்குகிறது திரைக்கதை. இதை (Stunning Beginning), எதிர்பாராத, அல்லது உலுக்கும் தொடக்கம் என்று கூறலாம்.
சாதனை படைக்கும் திரைப்படம்
சரியாக 24 வருடங்களுக்கு முன் 1994-ல், ஃப்ராங்க் டராபோண்ட் இயக்கத்தில் வெளியான படம் 'த ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்'. அமெரிக்காவின் தலைசிறந்த சஸ்பென்ஸ் எழுத்தாளர்களில் ஒருவரான ஸ்டீபன் கிங் எழுதிய குறுநாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநரே திரைக்கதையை எழுதியிருந்தார். படம் வெளியானபோது நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் பெரிய வசூல் இல்லை. ஆனால், விமர்சகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
இந்தப் படத்தின் அபாரமான திரைக்கதை, படத்தில் நடித்த நடிகர்களின் திறமை, இயக்குநரின் படமாக்கம் ஆகிய காரணங்களால் உலகின் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் தமிழ் உட்பட சுமார் 200 மொழிகளில் திரும்பத் திரும்ப ஒளிப்பரப்பாகிவருகிறது. அது மட்டுமல்ல; ப்ளூ-ரே டிவிடி விற்பனையிலும் இணையம் வழியே பணம் செலுத்திப் பார்க்கப்படுவதிலும் இன்றுவரை வசூலை வாரிக்குவித்துவரும் படங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
அப்படி என்னப்பா இந்தப் படத்தில் இருக்கிறது என்கிறீர்களா? திரைக்கதை எனும் கலையைக் கற்றுக்கொள்ள விரும்பும் யாரும் இந்தப் படத்தை பலமுறை பார்த்தாலே சித் ஃபீல்டின் பயிற்சிப் பட்டறைக்குப் போய்வந்த அனுபவத்தைப் பெறமுடியும். இது உயர்வு நவிற்சி அல்ல; படத்தைக் காணும்போது நீங்கள் உணர்வீர்கள்.
யார் கொலையாளி?
உலுக்கும் விதமாக அமைக்கப்பட்ட திரைக்கதையின் தொடக்கத்துக்கு இந்தப் படம் மற்றொரு துல்லிய உதாரணம். அது இரவு நேரம். இரவின் மர்மத்துக்குள் படிந்திருக்கும் அழுக்குகளைக் கேலிசெய்வதுபோல, காதலின் துரோகத்தைச் சித்தரிக்கும் ஒரு சோகப் பாடல் ஒலிக்கிறது.
நுழைவாயிலில் விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும் ஒரு வீட்டின் முகப்பைக் காட்டியபடி, கேமரா மெல்ல.. பின்னோக்கி ஸும் அவுட் (Zoom out) ஆகிறது. இப்போது காட்சியின் சட்டகத்துக்குள் ஒரு கார் நிற்பது தெரிகிறது. அதற்குள் இருந்துதான் அந்தச் சோகப் பாடல் ஒலிக்கிறது. அதன் உள்ளே கோட் சூட்டுடன் அமர்ந்திருக்கும் உருவம் பேனட்டின் டிராயரைத் திறந்து, அதிலிருந்து துணிக் கைப்பை ஒன்றை வெளியே எடுத்து தனது மடியில் வைத்து விரிக்கிறது. அதற்குள் ஒரு துப்பாக்கியும் சில தோட்டாக்களும் இருக்கின்றன.
அடுத்து தனது கோட் பாக்கெட்டிலிருந்து மது பாட்டிலை எடுத்துத் திறந்து சில மிடறுகள் குடிக்கிறது. அப்போது 30 வயது மதிக்கத்தக்க அந்த உருவம் ஒரு இளைஞர் என்பதை குளோஸ் அப் காட்சியால் கேமரா புலப்படுத்துகிறது. அந்த ஷாட் அத்துடன் வெட்டப்பட்டு, காட்சி நீதி மன்றத்தில் விரிகிறது. மது அருந்தியபடி துப்பாக்கி வைத்திருந்த அந்த இளைஞர் பெயர் ஆன்டி. குற்றவாளிக் கூண்டில் நின்றுகொண்டிருக்கிறார். அரசு வழக்கறிஞர் அவரைக் கேள்விகளால் துளைக்கத் தொடங்குகிறார்.
அ.வழக்கறிஞர்: மிஸ்டர் ஆன்டி! உங்க மனைவி கொலைசெய்யப்பட்ட அந்த ராத்திரி, நீங்க அவங்ககிட்ட என்ன பேசிகிட்டு இருந்தீங்கன்னு சொல்லமுடியுமா?
ஆன்டி: பெருசா ஒண்ணும் பேசல… உங்ககூட வாழ்ந்த வாழ்க்க போதும்.. இதுக்குமேலே உங்ககூட வாழ முடியாது. அதனால எனக்கு விவாகரத்து கொடுத்துடுங்கன்னு அவ சொன்னா..
அ.வழக்கறிஞர்: அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?
ஆன்டி: எனக்கு இஷ்டம் இல்லேன்னு சொன்னேன்.
அ.வழக்கறிஞர்: விவாகரத்து கேட்டா.. உன்னக் கொன்னுடுவேன்னு நீங்க மிரட்டியிருக்கீங்க.. அதக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரங்க சாட்சி சொல்லியிருக்காங்க.
ஆன்டி: சொல்லியிருக்கலாம். நான் கோபத்துல இருந்தேன். எனக்குச் சரியா ஞாபகம் இல்ல.
அ.வழக்கறிஞர்: அதுக்கப்புறம் உங்க மனைவி என்ன செஞ்சாங்க?
ஆன்டி: என்னப் பத்தி கவலைப்படாம,
அவ யார்கூட வாழனும்னு நினைச்சாளோ அங்க கிளம்பி போயிட்டா…
அ.வழக்கறிஞர்: உங்க மனைவியோட காதலன் யாருன்றது உங்களுக்குத் தெரிஞ்சுபோச்சு. அவர்கூடதான் அவங்க வாழப்போறாங்கன்றதும் உங்களுக்குத் தெரிஞ்சுபோச்சு. அதுக்கு அப்பறம் என்ன செஞ்சீங்க; அவங்கள ஃபாலோ பண்ணீங்களா?
ஆன்டி: முதல்ல பாருக்குப் போய் குடிச்சேன். அதுக்கப்பறமும் அவள மறக்க முடியல. அதனால் அவ போன வீட்டுக்கே போயிட்டு, கீழ என்னோட கார்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.
அ.வழக்கறிஞர்: எதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தீங்கன்னு சொல்ல முடியுமா?
ஆன்டி: எனக்கே தெரியல, நான் ரொம்ப குழப்பத்துல இருந்தேன், போதையில இருந்தேன். அவங்கள மிரட்டனும்னு நினைச்சேன் அவ்வளவுதான்.
அ.வழக்கறிஞர்: வீட்டுக்குள்ள போயி அவங்கள நீங்க கொன்னுருக்கீங்க.
ஆன்டி: இல்ல…! வெயிட் பண்ணி.. வெயிட் பண்ணி.. என்னோட கோவம் கொறைஞ்ச பிறகு நானே கிளம்பி என்னோட வீட்டுக்குப் போயிட்டேன். அவங்கள மிரட்டக் கொண்டுவந்த துப்பாக்கிய போற வழியில இருந்த ஆத்துல தூக்கிப்போட்டேன். அதுவும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.
அ.வழக்கறிஞர்: ஆனா அந்த வீட்டுல வேலை செய்றவங்க… மறுநாள் காலையில வேலைக்கு வந்தப்போ.. உங்க மனைவியும் அவங்களோட காதலனும் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கிறதையும் ரத்த வெள்ளத்துல அவங்க மிதந்துகிட்டு இருந்ததையும் பார்த்துட்டு போலீஸ்ல வந்து சொல்லியிருக்காங்க. உண்மைய ஒளிக்காமச் சொல்லுங்க..
ஆன்டி: எனக்குத் தெரியாது.
அ.வழக்கறிஞர்: அப்போ, கொலை நடக்கிறதுக்கு முன்னாடியே நீங்க துப்பாகிய ஆத்துல தூக்கிப்போட்டது மட்டும்தான் உண்மைன்னு சொல்றீங்களா?
ஆன்டி: அதான் உண்மை.
அ.வழக்கறிஞர்: நீங்க வீசினதா சொல்ற உங்க துப்பாக்கிய போலீஸ் மூன்று நாட்கள் தேடியும் கிடைக்கல. உங்க துப்பாக்கி கிடைக்காததால் கொலை செய்ய பயன்படுத்தின புல்லட்களையும் உங்கள் துப்பாக்கியையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியல. உங்க செய்கை ரொம்ப பிரமாதம்…! செம புத்திசாலித்தனம்!
ஆன்டி: அந்தக் கொலைய நான் செய்யலன்னு எனக்கு நல்லத் தெரியும். அதேபோல நான் தூக்கிப்போட்ட துப்பாக்கி எப்படிக் காணாமல்போச்சுன்னு எனக்குத் தெரியல…
இந்த விசாரணையின் முடிவில் சாட்சிகள் அனைத்தும் ஆண்டிக்கு எதிராக இருப்பதாகக் கூறி இரட்டை ஆயுள் தண்டனையை நீதிமன்றம் அவருக்கு வழங்குகிறது. இப்போது பார்வையாளர்கள் திகைத்துப் போகிறார்கள். நீதிமன்றத்தில் நடத்த விசாரணையை வைத்துப் பார்க்கும்போது ஆன்டி குற்றவாளியா என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்துவிடுகிறது.
சிறைக்குச் செல்லும் ஆன்டி குற்றவாளியா, நிரபராதியா, ஏன் அவனுடைய மனைவி அவனை வெறுக்க வேண்டும், ஒரு சிறைப் பறவையாக வாழப்போகும் அவனுக்கு அங்கே என்ன நடக்கப்போகிறது என்பதைக் காண, இருக்கையின் நுனிக்கு வந்துவிடுகிறார்கள்.
சட்டென்று பார்வையாளரின் மனத்தை ஈர்த்து, கவனத்தைத் திரையில் குவிக்கச் செய்வதே ஒரு நல்ல தொடக்கம் என்பதை இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள். எனவே, கதையை எங்கிருந்தும் நீங்கள் தொடங்கலாம்…
தொடர்புக்கு:jesudoss.c@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT