Published : 28 Sep 2018 11:37 AM
Last Updated : 28 Sep 2018 11:37 AM
“இங்க சாவகாசமாக என் கல்யாணம் நடக்கிறது. டெல்லியில ஒரு விவாகரத்தே நடக்கிறது. உலகின் மிகப்பெரிய அரசியல் விவாகரத்து” – ‘ஹே ராம்’ படத்தில் சாகேத் ராம் குறிப்பிட்ட அந்த அரசியல் நிகழ்வு, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை. தென்னிந்தியாவில், இந்தப் பிரிவினையைப் பற்றிய தாக்கமோ அல்லது அது சம்பந்தமான புனைவுகளோ நம்மிடம் குறைவு.
அன்றைய வேதாரண்யம் சத்யாகிரகம் முதல் இன்றைய விவசாயிகள் போராட்டம் வரை, அந்தந்த காலகட்டத்தில், பிரதேசத்தில் நடந்த போராட்டங்கள், அது சார்ந்த நெருக்கடிகள் இன்றைய தலைமுறைக்கு வெறும் காகித வரலாறு. ஆனால், அந்த வரலாற்று நிகழ்வுகளின் நேரடிப் பங்கேற்பு மற்றும் சமகாலப் பாதிப்பில் இருந்தவர்களின் பார்வையும் அனுபவமும் நிச்சயம் வேறு.
அப்படி, தேசப்பிரிவினையில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உயிர்களில், உருது எழுத்தாளர், சாதத் ஹசன் மன்ட்டோவும் ஒருவர். 1946 முதல் 1950 வரையான நான்கு ஆண்டுகளில், அவர் வாழ்வின் ஒரு பகுதியை, ரத்தமும் சதையுமான அவரின் எழுத்து, போதை, கூடவே அவரின் சிறுகதைகளையும் கோத்து தன்னுடைய இயக்கத்தில் இரண்டாவது படமாகத் தந்திருக்கிறார் நடிகரும் இயக்குநருமான நந்திதா தாஸ்.
மும்பையும் லாகூரும்
அவை 1946 முதல் 50 வரையிலான ஆண்டுகள். புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான மன்ட்டோ, இந்திய சுதந்திரத்துக்கு முன்பாக, அப்போதைய பம்பாயில் வசிப்பதில் தொடங்குகிறது கதை. பின்னர் அவரது மணவாழ்வு, முற்போக்கான எழுத்து வாழ்க்கை என நன்றாகவே செல்கிறது. இதற்கிடையே இந்தியா விடுதலை பெறுகிறது.
அச்சமயத்தில் அவருடைய மனைவி சாஃபியா தன் தங்கையின் திருமணத்துக்காக லாகூர் செல்கிறார். பம்பாயை விட்டுச்செல்ல மனமில்லாத மன்ட்டோ, நாட்டின் நிலைமையும் தன் மத அடையாளமும் தன்னை அங்கு இருக்கவிடாது என்பதைப் புரிந்துகொண்டு லாகூர் செல்கிறார். மனத்தில் பம்பாயும் உடலளவில் லாகூருமாக வாழும் மன்ட்டோ எதிர்கொள்ளும் சிக்கல்களும் அவர் வாழ்வுமே படம்.
வாழ்க்கையும் படைப்பும் இணைந்தால்
சிறுகதைகள், நாவல்கள் திரைப்படமாக வெளிவந்திருக்கின்றன; ஆனால் எழுத்தாளர்களின் வாழ்வைத் திரைப்படமாக பதிவுசெய்வது இங்கே மிகவும் குறைவாகவே நிகழ்ந்திருக்கிறது. 2008-ல் குஜராத் கலவரங்களைப் பின்புலமாகக் கொண்ட ‘ஃபிராக்’ என்ற மிக அழுத்தமான படத்தைத் தந்து பத்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் ‘மன்ட்டோ’ படத்தை இழைத்து உருவாக்கியிருக்கிறார் நந்திதா தாஸ்.
சம்பிரதாயமாகப் பிறப்பு முதல் இறப்பு வரையிலான ஆவணப்பட சாயலுடன் கூடிய வடிவத்துக்குள் அவர் செல்லவில்லை. அதேபோல் நிறைகளை மட்டுமே தூக்கிப் பிடிக்காமல், நுட்பமான மனப்போராட்டங்களையும் அவரைச் சுற்றியிருந்தவர்களையும், மன்ட்டோவின் முக்கியமான ஐந்து சிறுகதைகளையும் கோத்தே திரைப்படமாக்கியிருப்பது சிறப்பு.
மன்ட்டோ போன்ற ஒரு படைப்பாளி, தன் புறவுலகைவிட அதிக நேரம் செலவிடுவது அகவுலகில்தான் – இதைப் போகிற போக்கில், ஒரு சிகரெட்டுக்கு நெருப்பு தேடும்போது, அவரின் கதாபாத்திரம் ஒன்று அவருக்கு நெருப்பு கொடுத்து, சிறுகதைக்குள் அழைத்துப் போகிறது.
முதல் பார்வையில், சற்றுக் குழப்பமாகத் தெரிந்தாலும் அவரின் சிறுகதைகள், பிரதான கதையின் ஊடாக வருவதும், ‘தண்டா கோஷ்’ (குளிர்ந்த இறைச்சி) கதையின் முற்போக்கான மொழியால், லாகூரில் தனக்கு வரும் வழக்கில் மன்ட்டோவே வாதிடுவதும் ‘டேக் சிங்’ என்னும் எல்லைக்கோட்டில் மனம் பிறழ்ந்தவர்களைப் பரிமாறிக்கொள்ளும் கொடூரம் சார்ந்த கதையும் 116 நிமிடங்களில் இயக்குநரால் வெகு நேர்த்தியாகக் கோக்கப்பட்டிருக்கிறது. முதன்முறை திரையில் அறிமுகமாகும் பிரபல கவிஞர், கதாசிரியர் ஜாவேத் அக்தர் உட்பட, நாடக உலகைச் சேர்ந்த அத்தனை பெரிய நடிகர்களும் இதில் நடித்துப் பங்களித்திருப்பதை வரவேற்கலாம்.
மாயப் படத்தொகுப்பு
பம்பாய் வாழ்க்கைக்கு ஏங்கும் குடும்பத்தைச் சரியாகக் கவனிக்காமல் வருந்தி, எழுத்து சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்து, தன் காலத்தை மீறிய கதைகளை உருவாக்கி, குழந்தைகளைக் கொஞ்சி, புகையும் மதுவும் பென்சிலும் பேப்பருமாகத் தன்னை சுற்றிய வாழ்வை அவதானித்தபடியே வாழும் மன்ட்டோவை, கச்சிதமாக உடல்மொழியில் கொண்டு வருகிறார் நாயகன் நவாஸுதின் சித்திக்.
ஏற்கெனவே, ‘ஃபிராக்’ படத்துக்காக தேசிய விருது வாங்கிய ஸ்ரீகர் பிரசாத், இந்தத் திரைப்படத்திலும் அது மாதிரியான ஒரு மாயப் படத்தொகுப்பைச் செய்திருக்கிறார். 40 மற்றும் 50-களின் இந்தியா, பாகிஸ்தானைக் கொண்டுவருவதில் கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு இரண்டும் வெற்றிபெற்றிருக்கின்றன. ஜாகிர் உசேனின் மிதமான பின்னணி இசையிலும் படம் மிளிர்கிறது.
வாழும் காலத்தில் அங்கீகாரம் கிடைக்காமல், தன் காலத்தை மீறிய படைப்புகளைத் தந்து, பேச்சில், நேர்மையில் எவ்வித சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து மறைந்த எழுத்தாளர் மன்ட்டோவின் இடத்தில் எந்த ஒரு இந்திய எழுத்தாளரையும் பொருத்தி இந்தப் படத்தை ரசித்துக் கொண்டாடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT