Published : 07 Sep 2018 10:38 AM
Last Updated : 07 Sep 2018 10:38 AM
சென்றவாரக் கேள்விக்கான விடை ‘குணா’ (1991) படத்தில் இடம்பெற்ற ‘பார்த்தவிழி பார்த்தபடி’ என்ற பாடல். பாவனி எனும் 41-வது மேளகர்த்தா ராகம். விவாதி ராகம் எனப்படும் ராகம் இது. அதாவது ‘ரி’ யே க வாக வரும் ஸ ரி1 ரி2 ம2 ப த2 நி2 ஸ என வரும். அப்படி ஒரு ராகத்தில் தகதகிட என ஒலிக்கும் செண்டை மேளத்துடன் தெய்வீகமான ஒரு பாடல். சரியாகப் பதிலளித்த நெய்வேலி முரளி, கொடுங்கையூர் பூபேஷ்குமார் ஆகியோருக்குப் பாராட்டுகள்.
அடுத்து நாம் பார்க்கப் போகும் மோகனம் எளிமையாக ஸ ரி2 க2 ப த2 ஸ என அமைந்த ஐந்து ஸ்வர ராகம். மோகனத்தில் ஒரு ராஜாங்கமே நடத்தியிருக்கிறார் ராஜா. எத்தனை வகையில், எத்தனை முறையில்!
‘ஏ பி சி நீ வாசி’ (ஒரு கைதியின் டைரி), ‘கண்மணியே காதல் என்பது’ (ஆறிலிருந்து அறுபதுவரை), ‘மீன் கொடி தேரில்’ (கரும்புவில்), ‘நிலவு தூங்கும் நேரம்’ (குங்குமச் சிமிழ்) என மெல்லிசையாக பல பாடல்கள், ‘இதயம் ஒரு கோவில்’ (இதயக் கோவில்), ‘கீதம் சங்கீதம்’ (கொக்கரக்கோ), ‘இரு பறவைகள் மலை முழுவதும்’ ( நிறம் மாறாத பூக்கள்), ‘வந்ததே குங்குமம்’ (கிழக்கு வாசல்) போன்ற கிளாசிக் பாடல்கள் என அள்ளி இறைத்திருப்பார். என்னளவில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், ‘அக்னி நட்சத்திரம்’ (1988) படத்தில் வரும் ‘நின்னுகோரி வர்ணம்’, ‘காதல் ஓவியம்’ (1982) படத்தில் வரும் ‘பூவில் வண்டு கூடும்’, ‘சலங்கை ஒலி’ (1983) படத்தில் வரும் ‘வான் போலே வண்ணம் கொண்டு’ ஆகிய மூன்று பாடல்களைச் சொல்லலாம்.
தங்கமாய் மின்னும் இசை
மோகனம்போல் ராகக் கடலில் மூழ்கி இசைஞானி ஏராளமான முத்துக்களை எடுத்த முக்கியமான இரண்டு ராகங்கள், கீரவாணி மற்றும் நட பைரவி. நல்ல சமையல்காரர், மசால் தோசை, ஊத்தப்பம், நெய்ரோஸ்ட் என ஒரே மாவைக் கொண்டு வெளுத்துக் கட்டுவதைப் போல் இரண்டு ராகங்களையும் கொண்டு, மேற்கத்திய பாணி, லேசான மெல்லிசை, நாட்டுப்புறப் பாணி என விதவிதமாகத் தந்திருக்கிறார்.
கீரவாணியில் ‘சின்ன மணிக் குயிலே’ (அம்மன் கோவில் கிழக்காலே), ‘என்னைத் தாலாட்ட வருவாளா’ (காதலுக்கு மரியாதை), ‘மலையோரம் வீசும் காத்து’ (பாடு நிலாவே), ‘மண்ணில் இந்தக் காதலன்றி’ (கேளடி கண்மணி) போன்றவை மெல்லிசை விருந்துகள். அதே கீரவாணியில் ‘நிலா அது வானத்து மேலே’ (நாயகன்), ‘போவோமா ஊர்கோலம்’ (சின்ன தம்பி), ‘இந்த மாமனோட மனசு’ (உத்தம ராசா), ‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு’ (பொன்னுமணி) போன்றவை துள்ளலான மெட்டுக்கள்.
மறக்கவே முடியாத கீரவாணி என்றால் ‘ஜானி’ (1980) திரைப்படத்தில் ஜானகி பாடும் ‘காற்றில் எந்தன் கீதம்’ எனும் பாடல். ஆலாபனை, பின்னணி இசை, பேய்மழை, பெருங்காற்று என மனத்தில் அடிக்கும் சூறாவளியை இசையில் கொண்டு வந்திருப்பார் இசைஞானி.
இன்னொரு மாணிக்கம் ‘தூறல் நின்னு போச்சு’ (1982) படத்தில் மலேசியா, ஜானகி குரல்களில் ஒலிக்கும் ‘தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி’ என்னும் பாடல். இழை இழையாக கீரவாணியை உருக்கி சங்கதிகளெல்லாம் நுணுக்கமாக வைத்துச் செய்த தங்கச் சங்கிலி. கீரவாணி என்றே ராகத்தின் பெயராலேயே ஆரம்பிக்கும் ‘பாடும் பறவைகள்’ (1985) என்னும் படப் பாடலும் பிரமாதமானது.
பாய்ந்து செல்லும் பாடல்
நடபைரவி மட்டுமென்ன குறைச்சலா? குறிப்பாக, இரவு நேரப் பாடல்களுக்கு ராஜா இந்த ராகத்தை நிறையப் பயன்படுத்தியுள்ளார். ‘என் இனிய பொன் நிலாவே’ (மூடுபனி), ‘பனி விழும் இரவு’ (மௌன ராகம்), ‘புது ரூட்டுல தான்’ (மீரா), ‘ஆசைய காத்துல’ (ஜானி), ‘தென்பாண்டிச் சீமையிலே’ (நாயகன்) என மென்மையான மெட்டுகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். ‘இளைய நிலா பொழிகிறதே’ (பயணங்கள் முடிவதில்லை), ‘மடை திறந்து’
(நிழல்கள்), ‘சங்கீத மேகம்’ (உதயகீதம்), ‘கண்ணன் வந்து பாடுகிறான்’ (ரெட்டைவால் குருவி) என மேற்கத்திய இசையில் மைனர் ஸ்கேல் என அழைக்கப்படும் நடபைரவியின் வேறொரு பரிமாணத்தைக் காட்டியிருப்பார். ‘நேரமிது நேரமிது’ (ரிஷி மூலம்), ‘விழியிலே மலர்ந்தது’ (புவனா ஒரு கேள்விக்குறி) போன்ற தொடக்க கால மெல்லிசை மெட்டுகளும் இந்த ராகத்தில் அமைந்த இனிமையான பாடல்கள்தாம்.
மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ‘நாடோடித் தென்றல்’ (1992) படத்தில் வரும் ‘மணியே மணிக்குயிலே’ என்னும் பாடல். பிரமாதமான இசைக்கோவையுடன் தொய்வே இல்லாத காட்டாறு போல் பாய்ந்து செல்லும் நடபைரவிப் பாடல் அது.
கீரவாணியின் அக்கா சிம்மேந்திர மத்தியமம் என்னும் ராகம். கீரவாணியிலிருந்த ம வை மட்டும் மாற்றினால் வரும் ராகம். பேருக்கு ஏற்றாற்போல் கம்பீரமான இந்த ராகத்திலும் பல அருமையான பாடல்களைத் தந்திருக்கிறார் இசைஞானி. ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் (1981) வரும் ‘ஆனந்த ராகம் கேட்கும் காலம்‘ உமா ரமணன் பாடிய பாடல்களில் முதலிடம் பிடிக்கக்கூடியது. உச்சஸ்தாயியில் தொடங்கி வயலின், ஷெனாய் இசையுடன் கலந்து ஆனந்தமாக ஒலிக்கும் ராகமாகும்.
‘ஒருவர் வாழும் ஆலயம்’ (1988) படத்தில் தாஸேட்டனின் கம்பீரக்குரலில் ஒலிக்கும் ‘நீ பௌர்ணமி’ என்னும் பாடலும் சிம்மம்போல் கம்பீரமான சிம்மேந்திர மத்தியமம்தான். இந்த ராகத்தில் இன்னொரு சேதாரமில்லாத செய்நேர்த்தி நிறைந்த பாடல் ‘கோபுர வாசலிலே’ (1991) திரைப்படத்தில் வரும் ‘தாலாட்டும் பூங்காற்று நானல்லவா’ என்னும் ஜானகி குரலில் ஒலிக்கும் பாடல் . பின்னணியில் ஒலிக்கும் இசையமைப்பில் உச்சம்தொட்ட பாடல்களில் ஒன்று .
பாலுமகேந்திராவின் மலையாளப் படம் ஒன்றில் அசத்தலான ஒரு பாடல் போட்டிருப்பார் பாருங்கள். அதே மெட்டில் வேறு பாடல்கள் வந்தாலும் காப்பி அடிக்க முடியாத ராகம் அது. அது எது?
தொடர்புக்கு:ramsych2@gmail.com
படங்கள் உதவி:ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT