Published : 21 Sep 2018 11:36 AM
Last Updated : 21 Sep 2018 11:36 AM
‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன். தற்போது இறுதிகட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வரும் அவரிடம் உரையாடியதிலிருந்து…
இந்தப் படம் ஏன் இவ்வளவு தாமதம்?
தனுஷிடம் கதையைச் சொல்லும்போது, ‘வடசென்னை’, ‘விஐபி 2’ ஆகிய படங்களை ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருந்தார். வேறொரு படத்திலும் நடித்துக்கொண்டு இருந்தார். “இல்ல ப்ரோ.. அப்புறமா பண்ணலாம்” என்றுதான் முதலில் சொன்னார். ‘கதையைக் கேட்டுட்டு பிடிச்சுருக்குனு சொன்னீங்கன்னா.. முழுமையாக முடிச்சுருவேன். உங்களுக்காகவே பண்ணது’ என்று சொல்லிட்டுத்தான் கதையை அவருக்கு மெயில் பண்ணினேன்.
படித்துவிட்டு “சூப்பரா இருக்குப் ப்ரோ.. எப்போ பண்ணலாம்?” என்று ஆர்வமாகக் கேட்டார். ‘நாளைக்கே கூடத் தொடங்கலாம்’ என்றேன். “இப்போ என்னால் இவ்ளோதான் தேதிகள் கொடுக்க முடியும்” என்று கொடுத்தார். அப்படித் தொடங்கிய படம்தான் இது. அவர் தேதிகள் கொடுக்க கொடுக்க படத்தை எடுத்து முடிச்சுட்டேன்.
எவ்வளவு தாமதம் ஆகிறது என்பது முக்கியமல்ல, படம் என்ன சொல்ல வருகிறது என்பதுதான் முக்கியம். அந்த வகையில் இந்தப் படம் புதுப் படம்தான்.
படத்தின் கதையைப் பற்றிக் கொஞ்சம்…
அது சுவாரசியமானது. ஒரு நாள் கதை எழுதலாம் என்று அமர்ந்தேன். எதுவுமே தோன்றவில்லை. ‘என் அண்ணன் என் கையில கிடைச்சா அவனைச் சாகடிப்பேன்’ என்று எழுதினேன். ஏன், எதற்கு என்று எதுவுமே தெரியாது. ‘இப்பிரச்சினைக்கே அவன்தான் காரணம். அவன் மட்டும் இல்லன்னா. இந்த புல்லட் எனை நோக்கி வந்துட்டு இருக்காது. இதுக்காகத் தான் அவனைச் சாகடிப்பேன்.
காலையில் அம்மா ஒரு ஜோசியக்காரனை கூட்டிட்டு வந்தாங்க. எனக்கு ஜோசியமே பிடிக்காது. அவன் 100 வயசு வரைக்கும் வாழ்வேன் என்று சொன்னான். அவன் கையில கிடைச்சாலும் சாகடிப்பேன்’ என்று எழுதினேன். அப்படியே கல்லூரி, அங்கு ஷூட்டிங், அதில் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவளோடு பேசுறான் என இழுத்திட்டுப் போச்சு. 70 சதவீதக் கதையை எழுதிவிட்டு, ஷூட்டிங் போனேன்.
தனுஷ் எப்படிப் பண்றார், எந்த மாதிரிக் கோபப்படுறார் என்பதைப் பார்த்து மீதிக் கதையை எழுதினேன். எனக்கு ஒரு வரிக்கதையாகவே எழுதத் தோன்றாது. ஒரு படம் பார்க்கும்போது, என்ன நினைப்போமோ, அந்த எண்ணத்துடன் கதையே எழுதுவேன். அதனால்தான் நான் கதை எழுத நேரமாகிறது.
இந்தப் படத்தின் பாடல் இணையத்தில் வெளியாகி ஒன்றரை வருடம் ஆகிறது. ‘இது பழைய படம்பா?’ என்ற விமர்சனம் வராதா?
சிலருடைய படங்களுக்கு மக்கள் மத்தியில் அப்படியொரு பார்வை வராது என நினைக்கிறேன். என்னுடைய படம் இன்னும் ஒரு வருடம் கழிச்சு வெளிவந்தாலும், படத்தில் ஏதோ ஒன்று புதுசா பண்ணியிருப்பாங்கன்னு ரசிகர்களுக்குத் தெரியும்.
இன்னொன்று அந்தப் படத்தின் பாடலை வெளியிடும்போது, பட வெளியீடு இவ்வளவு காலமாகும் என்று நாங்கள் நினைக்கவேயில்லை. ‘புது இசையமைப்பாளரோடு முதன் முறையாகப் பணிபுரிந்திருக்கிறோம். பாடல்களும் சூப்பரா வந்திருக்கிறது. இது மக்களிடம் போய்ச் சேர வேண்டும்’ என்று நினைத்துத்தான் வெளியிட்டோம்.
தனுஷின் தயாரிப்பு நிறுவனத்துக்கு வெப் சீரிஸ் இயக்குவதாக இருந்தீர்களே.. என்னவானது?
முதலில் பேசினோம். இப்போது எனது ‘ஒன்றாக’ நிறுவனம் சார்பில் நிறைய விஷயங்கள் பண்ணிட்டு இருக்கோம். சுமார் 10 வெப் சீரிஸ் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு. வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கவுள்ளார்கள். நான் ஒரு வெப் சீரிஸ் இயக்கவுள்ளேன். அதெல்லாமே இந்த வருடத்தில் நடக்கும்.
‘பெல்லிசூப்புலு’ தெலுங்குப் படத்தின் தமிழ் மறு ஆக்கத்தை அறிவித்து ‘பொன் ஒன்று கண்டேன்’ எனத் தலைப்பும் வைத்தீர்களே..
நிறையப் படங்கள் நல்லாப் போகும் என்று பண்ணுவோம். அப்படித் தயாரித்த ‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படம் 1 கோடி ரூபாய் கூட வசூல் பண்ணவில்லை. ஆனால், அதுக்காக 7 கோடி ரூபாய் வரை செலவு பண்ணோம். ‘பெல்லிசூப்புலு’ ரீமேக் தொடங்க நடிகர்கள் எல்லாம் ஒப்பந்தம் செய்து பட்ஜெட் போட்டுப் பார்த்தப்போ எதிர்பார்க்காத ஒரு தொகையில் போய் நின்றது. அந்த பட்ஜெட்டில் படம் பண்ணியிருந்தால் கண்டிப்பாக நஷ்டம் வரும் என்று அப்பட்டமாகத் தெரிந்தது. எனவே அதை அப்படியே விட்டுவிட்டோம். வேறு நடிகர்களை வைத்துப் பண்ணலாம் என்ற யோசனை இருக்கிறது.
பங்கு மார்க்கெட்டில் உங்கள் தயாரிப்பு நிறுவனத்தைப் பட்டியலிட்டீர்களே.. இப்போது என்னவானது?
சம்பந்தமே இல்லாத ஆட்களிடம், எங்களுடைய படத்தின் கதைகளைச் சொல்லிப் பணம் பெற்றோம். இதற்கு மட்டும் 3 மாதங்களானது. ஷேர் மார்க்கெட்டில் என்னுடையது லிஸ்டட் கம்பெனி. ‘தங்கமீன்கள்’, ‘நடுநிசி நாய்கள்’, ‘வெப்பம்’, ‘ஏக் தீவானா தா’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ உள்ளிட்ட படங்களில் முதலீடு செய்து எதிலுமே பெரிதாகப் பணம் திரும்பவரவில்லை. மறுபடியும் ஷேர் மார்க்கெட்டிலிருந்து பணம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளோம். ஆனால் அதற்கு நேரமாகும்.
வெளிப்படையாகப் பேசுவதால் வரும் பிரச்சினைகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது பண்ணிக்கொண்டு இருந்தாலே, பிரச்சினைகள் வரும். இவன் நம்ம கூட இருக்க மாட்டானா, ஏன் இவனை வைச்சு படம் பண்றான் என்றெல்லாம் நினைப்பார்கள். எனக்குப் பிரச்சினைகள் இதனால் மட்டுமே வருகிறது. இதற்கு பொஸஸிவ்னஸ் ஒரு காரணம். சிறுவயதிலிருந்தே எனக்கு இப்பிரச்சினை இருக்கிறது.
ஆனால் பிரச்சினைகளுக்கு என்னைப் பிடிக்காது! ஏன்னா, நான் பிரச்சினைகள் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. அதெல்லாம் தாண்டி போயிட்டே இருப்பேன். பிரச்சினையால் ஒரு நாள் கூடச் சோர்ந்து போனதே இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT