Published : 07 Jun 2019 10:17 AM
Last Updated : 07 Jun 2019 10:17 AM
பானுமதி அம்மையார் மெல்லச் சிரித்து, “என் காதல் விவகாரத்தை கண்ணாமணி அம்மா எப்படியோ கண்டுபிடித்துவிட்டார்!” என்றார். நான் “கண்ணாமணியா?” என்று வியப்பைக் கூட்டினேன்! “ஆமாம் ‘கிருஷ்ண பிரேமா’ பாடல் பதிவுக்கான ஒத்திகைக்குப் போயிருந்தபோது அங்கும் ராமகிருஷ்ணாவை என் கண்கள் தேடின.
இதெல்லாம் எதில் போய் முடியுமோ என்ற கவலையும் என்னைப் பிடித்துக் கொண்டது. யாரோடும் பேசாமல் தலையைக் குனிந்துகொண்டு யோசனையில் மூழ்கியிருந்தேன். அப்போது ஒரு பெண்ணின் கை மிகவும் பிரியத்தோடு என் தோளைத் தொட்டதை உணர்ந்தேன். திரும்பிப் பார்த்தேன் அவர்தான் கண்ணாமணி.
கண்ணாமணி கண்டுகொண்டார்
படத் தயாரிப்பாளர் ராமையா அவர்களின் மனைவி அவர். ஒரு காலத்தில் தமிழ்ப் படங்களில் நடித்தவர்தான். தம்பதியர் இருவரும் திரைப்பட வர்த்தகசபை அலுவலகத்தின் மாடியில்தான் தங்கியிருந்தார்கள். அப்போது அந்த அலுவலகம் வுட்ஸ் சாலையில் ஒரு பழைய பங்களாவில் இயங்கிவந்தது. ‘என்ன பானுமதி.. யோசனை எல்லாம் பலமா இருக்கு?’ என்று தமிழில் அவர் கேட்டபோது (அப்போது நான் தமிழில் நன்றாகப் பேசக் கற்றுக் கொண்டிருந்தேன்) என்னைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டது போன்ற குற்ற உணர்வுதான் ஏற்பட்டது. அதேநேரம் ராமகிருஷ்ணா மேலே ஏறி வந்தார். என் இதயத் துடிப்பு அதிகமாயிற்று.
வாங்க பிரதர் வாங்க என்ன சாப்பிடுறீங்க? என்று கண்ணாமணி அவரை சினிமா தோரணையில் வரவேற்றார். அவரோ எங்களைப் பார்த்துத் தலையைக் குனிந்துகொண்டுவிட்டார். ‘தாங்ஸ் ஒன்றும் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். ‘இவருக்குப் பெண்களைக் கண்டாலே எங்கிருந்தோ ஒரு கூச்சம் வந்துவிடும். நல்ல பிள்ளையாண்டான்தான் போ’ என்று கிண்டல் தொனியில் பேசினார்.
அந்த நேரம் என் தந்தையும் இசையமைப்பாளர் பெஞ்சாலையாவும் வந்தார்கள். ‘நீ பாடிய இரண்டு பாட்டுக்களும் மிகவும் பிரமாதமாக வந்திருக்கிறது அம்மா’ என்றார் இசையமைப்பாளர்.
இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு கிண்டியிலும் பூந்தமல்லிப் பக்கமும் நடந்தது. அப்போதெல்லாம் ராமகிருஷ்ணா என்னிடம் நடந்து கொள்ளும் விதத்தில் ஒரு வித்தியாசம் தெரிந்தது. முன்பு அவரிடம் இருந்த தயக்கமும் சங்கடமும் போய்விட்டது. ஆனால், அப்பாவைப் பார்த்துவிட்டால் அந்தண்டை போய்விடுவார்.
ஒருநாள் படப்பிடிப்பின்போது கேமரா வழியாக என்னைக் கவனித்த ராமகிருஷ்ணா மராத்தியில் ஹெச்.வி.பாபுவிடம் ‘இந்தப் பெண்ணை கேமரா வியூவில் பாருங்களேன் கொள்ளை அழகு’ என்றார்.
‘ஏனப்பா அம்மாயி பதினாறு வயசு பருவப்பெண். அழகாகப் பாடவேறு செய்கிறது. அழகாகத் தோன்றுவதில் என்ன ஆச்சரியம்?’ என்று ஹெச்.வி.பாபு ராமகிருஷ்ணாவிடம் பதிலுரைத்தபோது அவர் முகத்தில் புன்னகை அரும்பியது.
டேக்கில் சொதப்பினேன்
அவர்கள் இருவரும் இப்படி என்னைப் பார்ப்பதும் பேசிக்கொள்வதுமாக இருந்ததைப் பார்த்து எனக்கு ‘மூட் அவுட்’ ஆகிவிட்டது. அந்த டேக்கில் நான் நன்றாகச் செய்யவில்லை. ‘ஏனம்மா பானு… ஒத்திகைக் கூடத்தில் நன்றாகப் பண்ணினாயே. இப்போது டேக்கில் சரியாகப் பண்ண மாட்டேன் என்கிறாயே’ என்றார் ஹெச்.வி.பாபு. நான் பதில் சொல்லவில்லை.
‘இந்தமுறை நன்றாகச் செய்யுங்கள்’ என்றார் ராமகிருஷ்ணா. நான் அவரைப் பார்த்து முறைத்தேன். ஒன்றும் புரியாமல் திகைத்துவிட்டார் ராமகிருஷ்ணா. ‘தலை வலிக்கிறது நான் வீட்டுக்குப் போறேன்’ என்று நேராக காரில் போய் உட்கார்ந்துகொண்டுவிட்டேன். ஏன் திடீரென்று என் மூட் அவுட் ஆகியது என்று யாருக்கும் தெரியவில்லை.
இயக்குநர், என் மூடு மாறியதன் காரணத்தை அறிந்துவர ராமகிருஷ்ணாவை அனுப்பினார். காரில் உட்கார்ந்திருந்த என்னருகில் தலைகுனிந்தபடி வந்த ராமகிருஷ்ணா, ‘இன்னிக்கு ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிவிட வேண்டியதுதானா?’ என்று கேட்டார்.
‘ஆமாம்’ என்றேன். ‘நாளைக்கு வைத்துக்கொள்ளலாமா?’ என்று மறுபடி கேட்டார். நான் நிமிர்ந்து அவரைப் பார்த்தேன். அவர் சிரித்துவிட்டார். ஏனென்று தெரியவில்லை. என் கோபம் மறைந்தது. அவரது சிரித்த முகத்தை விழுங்குவதுபோல் பார்த்தேன். ‘நீங்கள் சரியான மூடி டைப்பாக இருப்பீர்கள் போலிருக்கே?’ என்றார். நான் பேசவே இல்லை.
‘நாளைக்கு ஷூட்டிங் வைத்துக்கொள்ளலாமா?’ என்று மறுபடி கேட்டார். ‘எனக்குத் தெரியாது. அப்பாவிடம் கேளுங்கள்’ என்றேன். ஒருவேளை என்னால் படப்பிடிப்புக்கு இடைஞ்சல் வந்துவிட்டதோ என்ற குற்ற உணர்வோடு நான் போயிட்டால் உங்களுக்குச் சிரமம் இல்லையா? என்றேன். இதைக் கேட்டதும் சிரித்தார். இன்றைக்கு நாங்கள் வேறு காட்சிகளை எடுத்துக் கொள்கிறோம். உங்களுக்குரியதை நாளைக்கு வைத்துக்கொள்ளலாம். இதைச் சொல்லிவிட்டு அவர் விறுவிறு என்று போய்விட்டார்.
போர் மேகம் தந்த பிரிவு
‘கிருஷ்ண பிரேமா’ ஏறத்தாழ மூன்றில் இரண்டு மடங்கு முடிந்துவிட்டது. அந்த நேரம் பார்த்து யுத்தம் வந்தது. சென்னை மீது குண்டு போடப்படுமோ என மக்கள் மத்தியில் பீதி நிலவியது. பெரும்பாலான மக்கள் வீட்டைக் காலிசெய்துவிட்டு வெளியூர்களுக்குப் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தார்கள். இருட்டடிப்பு அமல்படுத்தப்பட்டது.
கொஞ்ச காலத்துக்குப் படப்பிடிப்பை நிறுத்தி வைப்பதென்று முடிவெடுத்தோம். என் மனசில் ஒரு தவிப்பு. படப்பிடிப்பு இல்லை என்றால் அவரைப் பார்க்க முடியாதே மறுபடி எப்போது பார்ப்பேனோ? அவர் எங்கே தங்கியிருக்கிறார்? சாப்பாட்டுக்கு என்ன செய்வார்? எதுவுமே தெரியவில்லையே. என் தவிப்பு யாருக்கும் தெரியவில்லை. என் ராமகிருஷ்ணாவுக்கே இதைப் பற்றிக் கிஞ்சித்தும் தெரியவில்லை.
நான் வெளியே செல்லாவிட்டாலும் என் தங்கைக்கு மட்டும் என் மனநிலைக்கான காரணம் அரசல் புரசலாகத் தெரியும். அப்பாவை நினைத்துப் பயமாக இருந்தது. அவருக்குத் தெரிந்தால் என்ன ஆகும் என்பதை நினைத்து எனக்குள் கலவரம் மூண்டது. ஏனென்றால், தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டுமென்று அடிக்கடி சொல்லுவார். உயரமாக, லட்சணமாக, நன்கு படித்தவராக, சங்கீத ரசனை மிக்கவராக, உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இப்படி ஒரு மாப்பிள்ளையைத்தான் அவர் எனக்குத் தேடிக்கொண்டிருந்தார்.
அவரது எதிர்பார்ப்பை நினைக்கும்போதெல்லாம் எனக்குப் பகீரென்று இருக்கும். என் கனவு எல்லாம் பகல் கனவாகவே போய்விடுமோ என்று மனதுள் கொஞ்சமாய் இருள் சூழும். என் மனதைப் போல் பட்டணத்திலும் இருட்டடிப்பு. அந்த நேரம் மக்கள் விளக்குகளை அணைத்துவிட்டு லாந்தர்கள் கொளுத்தி வைத்துக்கொள்வார்கள்.
பிரச்சினைகள் வந்தால் கூட்டமாகத்தான் வரும். சின்ன அத்தை திடீரெனக் காலமாகிவிட்டார். அப்பாவும் நானும் அவசரமாக ஊருக்குப் புறப்பட்டோம். ரயில் புறப்பட சில நிமிடங்களே இருந்தன. அப்பா எனக்காக சஞ்சிசைகள் வாங்கிவரப் போனார். திடீரென்று ராமகிருஷ்ணா வருவதைப் பார்த்தேன். யாரையோ வழியனுப்ப வந்திருப்பார்போல.
அவரைப் பார்த்ததுமே என் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. அவரோடு பேச வேண்டும்போல் என்னுள் ஒரு இன்பமான இம்சை. அவராக வந்து பேசமாட்டாரா என்றிருந்தது. அவர் எங்களைப் பார்த்துவிட்டார். மரியாதை நிமித்தம் சம்பிரதாயமாக எங்களிடம் ‘ஊருக்குத் திரும்பிப் போறீங்களா?’ என்று இரண்டு வார்த்தை பேசினார்.
‘நீங்க போகலையா?’ என நான் கேட்டேன்- ‘நாளைக்கு பம்பாய் போறேன். ஹெச்.எம்.ரெட்டி படத்துக்குக் கொஞ்சம் எடிட்டிங் வேலை பாக்கியிருக்கு. அதை முடிச்சிட்டு மெட்ராஸ் வந்திடுவேன்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அவர் அங்கே நின்றதில், பேசியதில் பரம திருப்தி. பம்பாய் போகிறார். நல்லவேளை மெட்ராஸில் இல்லை என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன். அவருக்காக நான் இங்கே ஒருத்தி கவலைப்படுவதை அவர் அறிவாரா? அறிந்திருந்தால் இப்படி ரொம்ப சாதாரணமாகப் பேசிவிட்டுப் போவாரா? இல்லை. போகத்தான் முடியுமா? ரயில் நகர ஆரம்பித்தது. ‘இப்போது பிரிகிறோம். மீண்டும் சந்திப்போம்?’ என்று அவர் போன திசைநோக்கி மானசீகமாகச் சொல்லிக்கொண்டேன். என் கண் கலங்கியது ரயிலின் கரிப்புகையால் என்று அப்பா நினைத்திருப்பார்.
(தாரகை ஒளிரும்)
தொடர்புக்கு:- thanjavurkavirayar@gmail.com
படங்கள்: உதவி ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT