Published : 14 Jun 2019 11:15 AM
Last Updated : 14 Jun 2019 11:15 AM
அமெரிக்கா - சீனா என மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் உணர்வுப் பெருக்கிலான கதையாகத் திரைக்கு வருகிறது ‘தி ஃபேர்வெல்’ திரைப்படம்.
சீனாவில் பிறந்து அமெரிக்காவில் வளரும் இளம்பெண்ணுக்குப் பிறந்த வீட்டிலிருந்து அழைப்பு வருகிறது. சீனா செல்லும் அப்பெண் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் மர்மத்தைக் கண்டுபிடிக்கிறாள்.
குடும்ப ஆலமரத்தின் ஆணி வேரான பாட்டிக்குப் புற்றுநோய் முற்றிய நிலையில், அவருக்கான இறுதி நாட்கள் எண்ணப்படுகின்றன. மூத்த வயதினரைச் சங்கடமின்றி வழியனுப்பும் சீனத்துச் சமூக வழக்கப்படி, மூதாட்டிக்கு நோய் குறித்த தகவல்களைக் குடும்பத்தினர் முழுவதுமாக மறைக்கின்றனர்.
அதேநேரம் வெவ்வேறு திசைகளில் சிதறியிருக்கும் குடும்ப விழுதுகளை அழைத்து பாட்டிக்கு விடைகொடுக்கும் விழா நடத்த முடிவு செய்கின்றனர். இதற்காகப் பேரன்களில் ஒருவருக்குப் போலியான திருமண ஏற்பாடு ஒன்றையும் நடத்துகின்றனர். இவை எதுவுமே அறியாது அந்த மூதாட்டி வழக்கம்போல் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வளைய வருகிறார்.
பாட்டி மீதான தீவிரப் பரிவு மற்றும் தனது சொந்த சுபாவம் காரணமாக இந்த நாடகத்துக்கு உடன்பட முடியாது அமெரிக்கப் பேத்தி தவிக்கிறார். உள்ளுக்குள் சோகத்தைப் புதைத்துக்கொண்டு மூதாட்டி முன்பாக மகிழ்ச்சியாக இருப்பதுபோல் ஒப்பேற்றும் குடும்பத்தினருக்கு எதிராக அவர் அடியெடுக்கிறார். அதைத் தொடர்ந்து நடக்கும் நகைச்சுவையும் உருக்கமும் கலந்த காட்சிகளே ‘தி ஃபேர்வல்’ திரைப்படம்.
சீனத்து பெண் இயக்குநரான லுலு வாங், அமெரிக்க வானொலித் தொடர் ஒன்றிலிருந்து பெற்றுக்கொண்ட தாக்கத்தையும் தனது சொந்தப் பாட்டிக்கு இறுதி வழியனுப்பல் நடத்தியதையும் இணைத்துத் திரைக்கதையைப் பின்னியிருக்கிறார்.
இருவேறு கலாச்சாரப் பின்னணிகளில் உருவான திரைப்படம் என்பதால் திரைவிழாக்கள் பலவற்றில் பங்கேற்றதுடன், சீன மற்றும் அமெரிக்க ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது. ஆக்வாஃபினா, டயனா லின், லு ஹாங் உள்ளிட்ட பலர் நடித்த ‘தி ஃபேர்வல்’ திரைப்படம், ஜூலை 12 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.ஹாலிவுட் ஜன்னல்‘தி ஃபேர்வெல்’ முன்னோட்டத்தைக் காண
இணையச் சுட்டி:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT