Published : 07 Jun 2019 09:46 AM
Last Updated : 07 Jun 2019 09:46 AM

மறக்கமுடியாத திரையிசை: காதல் மன்னனின் தயக்கம்!

பாடல்கள் தமிழ் சினிமாவில் கோலோச்சிய முப்பது முதல் தொண்ணூறுகளின் இறுதிவரை… அப்பப்பா! எத்தனை எத்தனை பாடல்கள்! வெறும் பாடல்களுக்காகவே ஓடி பெரிய வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கையும் அதிகம்தான். சில பாடல்களைப் பற்றிக் கேட்கும்போது மட்டுமல்ல; படிக்கும்போது ‘இது எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டாச்சே!’ என்று உற்சாகத்தில் உள்ளம் துள்ளும்.

அதுபோல் துள்ளவைத்த படங்கள் உள்ளடக்கத்திலும் உயர்ந்த கருத்தைச் சொல்வதிலும் மக்களுக்குப் புத்துணர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் அளித்திருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களைத் தேசிய விருதுக் குழுவும் கொண்டாடி இருக்கிறது.

ஊமை மகனைப் பேசவைக்கப் பாடுபடும் தந்தை. ஒரு கட்டத்தில் வாழ்வில் நம்பிக்கை போய்விட மகனுடன் தற்கொலை செய்துகொள்ளக் கடலை நோக்கி நடக்கும்போது எங்கிருந்தோ மிதந்து வந்து அவர்கள் காதுகளில் மோதுகிறது அந்தப் பாடல். ‘நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு’ ஆம். நான்கு வேதங்களும் சொல்லும் மாற்ற முடியாத உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அல்லவா இது!

‘நல்லவர்க்கும் தீயவர்க்கும் ஆண்டவனே காப்பு

பசிக்கு விருந்தாவான். நோய்க்கு மருந்தாவான்

பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே..’

பசிக்குத் தேவை உணவுதான். அப்படியிருக்கப் பசிக்கு உணவாவான் என்றாலே போதுமே! விருந்தாவான் என்று ஏன் சொல்ல வேண்டும்? காரணம் இருக்கிறது.

கொலைப்பட்டினியோடு தனது பசிக்குக் கஞ்சியோ கூழோ கிடைத்தால்கூடப் பரவாயில்லை என்று இருப்பவனை அழைத்து வந்து தலை வாழை இலை போட்டு அறுசுவை விருந்தைப் பரிமாறிச் சாப்பிடச் சொன்னால் அப்படியே திக்குமுக்காடிப் போய்விட மாட்டானா?

அதுபோலத்தான் ஆண்டவனும்...

எதிர்பார்ப்பதைவிட அதிகமாக அள்ளிக் கொடுத்து திக்குமுக்காட வைப்பவன் என்பதால் ‘பசிக்கு விருந்தாவான்’ என்கிறார் கவியரசு கண்ணதாசன். கண்ணதாசனின் வார்த்தை ஒவ்வொன்றுமே நெஞ்சை ஊடுருவும் வார்த்தை..

‘கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - ஏழை

கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்...’

 - இந்தப் பாடல் செவிகளில் விழுந்ததும் பாடல் வந்த திசை நோக்கி தனது ஊமை மகனுடன் நடக்கிறான் தந்தை.

அது ஒரு கண்ணன் ஆலயம். ஒரு பெரியவர் பாடிக்கொண்டிருக்கிறார். கவியரசரின் வைர வரிகளில் கண்ணனின் பெருமைகள் மலர்களாக விரிந்து மனங்களை நிறைக்கின்றன.

‘தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்

தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்

கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்

கேள்வியிலே பதிலாக கண்ணன் வந்தான்

தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்

தாளாத துயர் தீர்க்க கண்ணன் வந்தான்’

பெரியவர் தொடர்வதற்குள் ‘கண்ணா..’ என்று உள்ளத்து உணர்ச்சிகள் அத்தனையையும் தேக்கிய குரல்... மகனுடன் தற்கொலைக்கு முயன்ற அந்தத் தந்தைதான் பாடலைத் தொடர்கிறான்.

‘கருணை என்னும் கண்திறந்து காட்ட வேண்டும்.

காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்.

கனிமழலை குரல் கொடுத்து பாட வேண்டும்

கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்.’

கேட்டுக்கொண்டே போனவனுக்குத் திடீரென்று ஒரு பரபரப்பு.

ஆலயத்துக்கு வெறும் கையோடு போகக் கூடாது என்பார்களே. எதுவுமே கொண்டுவராமல் அல்லவா வந்திருக்கிறோம்...

இல்லை நாம் வெறும் கையோடு வரவில்லை. கண்ணனுக்குக் கொடுப்பதற்காக அவனிடம் இல்லவே இல்லாத ஒரு அபூர்வமான பொருளை அல்லவா கொண்டு வந்திருக்கிறோம்!

ஆண்டவனுக்குக் கவலைகள் என்று ஒன்றும் கிடையாதே. அவற்றைத்தான் மடிநிறையக் கட்டிச் சுமந்துகொண்டு வந்திருக்கிறோமே.

அவற்றையே காணிக்கையாகச் சமர்ப்பித்துவிடுவோம்..

'கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா.

கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா. “

மீண்டும் பெரியவரும் சேர்ந்துகொள்ள பல்லவியை மறுபடியும் தொட்டுக்கொண்டு பாடல் முடிகிறது.

marakka-2jpg

‘ராமு’ படத்தின் முகம்

சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதைப் பெற்ற ஏவி.எம் நிறுவனத்தின் மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்று 1966 ஜூன் 7 அன்று வெளிவந்த ‘ராமு’. அந்தப் படத்தின் உள்ளடக்கக் கருத்தாக்கத்தின் முகமாக அமைந்தது இந்த மறக்க முடியாத திரையிசை. ‘யமன்’ என்ற ஹிந்துஸ்தானி ராகத்தின் அடிப்படையில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வடிவமைத்து சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலும் டி.எம். சௌந்தரராஜனின் கந்தர்வக்குரலும் சங்கமிக்கும் இந்தப் பாடலைப் பாடலைச் சற்றுக் கவனியுங்கள்.

பல்லவியிலும், தொடரும் முதல் சரணத்திலும் ‘கண்ணன் வந்தான்’ என்ற சொற்றொடரும், தொடரும் சரணங்களில் முறையே பிருந்தாவனம், சன்னிதானம் என்ற வார்த்தைகளும் அடி முடியும் போது முத்தாய்ப்பாக வருகின்றன..

இப்படி ஒரு வார்த்தையோ சொற்றொடரோ அதே பொருளில் மீண்டும் மீண்டும் வருவதை ‘சொற்பொருட் பின்வரு நிலை அணி’ என்று குறிப்பிடுவார்கள். இந்த அணியை வெகு லாவகமாக கவியரசு கண்ணதாசன் கையாண்டு பாடலை வடிவமைத்திருக்கிறார்.

காதல் மன்னனின் சந்தேகம்

பாடல் காட்சி படமாக்கப்பட்ட வேளையில் காட்சியில் நடிக்க கதாநாயகன் ஜெமினி கணேசன் சற்றுத் தயங்கினார்.

“இதுவரைக்கும் எனக்குப் பொருத்தமான குரலே பி.பி. ஸ்ரீனிவாஸுடையதுதான். அப்படி இருக்கும்போது டி.எம்.எஸ். பாடி நான் வாயசைச்சு நடிச்சா அது எடுபடுமா?" என்ற சந்தேகத்தைக் கிளைப்பினார் அவர்.

“அப்படி எல்லாம் பயப்படாதீங்க. இந்தக் காட்சியில் உங்க கூட நாகையா நடிக்கிறார். அவரே அற்புதமா பாடக்கூடிய ஒரு பாடகர். அவருக்கே சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருக்கார்." என்றெல்லாம் ஏ.வி.எம். சகோதரர்களும் படத்தின் இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தரும் தைரியமூட்டி சம்மதிக்க வைத்தனர். பாடல் அமைந்த இமாலய வெற்றி நாம் அனைவரும் அறிந்தது தானே. இன்றுவரையும் மறக்க முடியாத திரையிசைப் பட்டியலில் இடம்பெற்றுவிட்டதே இந்தக் கண்ணன் பாடல்!

தொடர்புக்கு: pgs.melody@gmail.com | படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x