Published : 07 Jun 2019 10:17 AM
Last Updated : 07 Jun 2019 10:17 AM

இயக்குநரின் குரல்: கடைக்கோடி மனிதனுக்கான போராட்டம்! - ஆதியன் ஆதிரை

தற்காலத் தமிழ்க் கவிதை உலகில் நன்கு அறியப்பட்டவர் அதியன் ஆதிரை. இயக்குநர் பா.இரஞ்சித்தின் இணை இயக்குநர்.

‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தொடர்ந்து, தனது நீலம் புரடெக்‌ஷன் சார்பாக இரஞ்சித் தயாரித்திருக்கும் இரண்டாவது படம்,  ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. அதை எழுதி, இயக்கியிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து…

இயக்குநர் இரஞ்சித்தின் சினிமா பட்டறைக்குள் எப்படி வந்தீர்கள்?

விழுப்புரம் அருகில் உள்ள திருவாலை கிராமம்தான் எனது சொந்த ஊர். சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்துடன் சென்னை வந்து உதவி இயக்குநராகப் பத்து நாட்கள் பணியாற்றிய பின் சினிமா பிடிக்காமல்போய்விட்டது. அதனால் அனிமேஷன் துறையில் சேர்ந்து பணிபுரியத் தொடங்கினேன். அங்கே ‘ஸ்டோரி போர்ட்’ ஆர்டிஸ்டாக எனக்கு அறிமுகமானார் கலை இயக்குநர் ராமலிங்கம்.

அவரும் இயக்குநர் இரஞ்சித்தும் கவின்கலைக் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள். அந்த நேரத்தில் ‘அப்பனின் கைகளால் அடிப்போம்’ என்ற எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. அந்தக் கவிதைப் புத்தகத்துக்கான ஓவியங்களை வரைந்து தந்தவர் ராமலிங்கம்தான். ‘அட்டகத்தி’ திரைப்படம் முன் தயாரிப்பிலிருந்த அந்தத் தருணத்தில் எனது கவிதைகளை வாசித்த தோழர் இரஞ்சித், “திரைப்படத்தில் என்னோடு பணிபுரிய வாருங்கள்” என்று  கேட்க நான் தோழமையுடன் மறுத்துவிட்டேன்.

எழுத்து, கவிதை, களப்போராட்டம் என்று ஒரு இடதுசாரியின் வாழ்க்கை என்னுடையது. 24 வயதிலேயே காதல் திருமணம் செய்துகொண்டேன். இரண்டு பிள்ளைகள் பிறந்து குடும்பம் பெரிதானதும் அன்றாடப் பாட்டுக்காக ஓடத் தொடங்கினேன். நான் பணியாற்றிய அணிமேஷன் நிறுவனத்தை மூடிவிட்டார்கள். அதனால் மிகப் பெரிய காயலாங்கடை ஒன்றில் மேலாளராக வேலைக்குச் சேர்ந்தேன்.

இரும்புக் கழிவுகள், அங்கே பணிபுரியும் தொழிலாளர்கள், அவர்களது வாழ்க்கை என, உழைப்பின் வீச்சம் அடிக்கும் இரும்புக்கடை நாட்கள் எனக்குள் பல கேள்விகளோடு நகர்ந்துகொண்டிருந்தன. இந்த நேரத்தில் தோழர் இரஞ்சித்தின் அரசியல் தெளிவும் கலையை அணுகும்விதமும் எனக்குப் பிடித்திருந்தன. ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ஆகிய படங்களில் அவருடன் இணைந்து பணிபுரிந்தேன். தோழர், இரஞ்சித் ஒரு இயக்குநர்போல் என்னிடம் நடந்துகொண்டதில்லை.

இரஞ்சித்தின் அலுவலகம் என்பது வழக்கமான சினிமா அலுவலகம்போல் இல்லாமல் ஒரு அரசியல் பயிரலங்கம்போல இருக்கும். இரஞ்சித்தைச் சந்திக்க வரும் உதவி இயக்குநர்களிடம் எந்தெந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என அவர் ஆலோசனை தருவார். அவருக்கு நேரம் கிடைக்காத தருணங்களில் என்னிடம் அனுப்புவார். நான் அவர்களுடன் உரையாடி, ‘திரையில் அடையாளம் பெற மட்டுமல்ல; சக மனிதனைப் புரிந்துகொண்டு வாழ்வதற்கும் வாசிப்பு அவசியம்’ என வலியுறுத்தி  ஐம்பதுக்கும் அதிகமான புத்தகங்களின் பட்டியலைக் கொடுத்து அனுப்புவேன்.

இப்போது சென்னையில் எங்கே சென்றாலும் “தோழர் எப்படி இருக்கீங்க?” என்று என்னை நிறுத்திப் பேசுவார்கள். ‘மெட்ராஸ்’ பட அலுவலகத்தில் உங்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன்’ என்பார்கள். அந்த நேரத்தில் மனம் சிலிர்த்துக்கொள்ளும். வாசகப் பரப்பில் நான் அறியப்பட்டிருக்கிறேன் என்றாலும் நூற்றுக்கணக்கான இளம் உதவி இயக்குநர்களுக்கு என்னைத் தெரிகிறது என்றால் அதற்குத் தோழர் இரஞ்சித்தான் காரணம்.

‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் கதையில் மறைந்திருப்பது கடந்தகாலமா, நிகழ்காலமா?

கடந்த காலத்தின் நிகழ்கால நீட்சி எனலாம். நான் காயலாங்கடையில் பணிபுரிந்தபோது இந்தக் கதையை யோசித்தேன். ‘ஒரு மனிதனின் இயல்பு என்பது உழைப்பே. அது படைப்புத் தன்மையும்; சமூகத் தன்மையும் கொண்டது’ என்கிறார் மார்க்ஸ். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், ஒரு மனிதனின் அடிப்படை இயல்பாக இருக்கக்கூடிய உழைப்பை இன்னொருவன் சுரண்டும்போது, உழைப்பைக் கொடுக்கும் மனிதர்கள் இயல்பு நிலையை இழந்துவிடுகிறார்கள்.

இயல்பை இழக்கும்போது பண்பை இழந்துவிடுகிறான். பண்பை இழப்பவன், தனது மன அமைதிக்காகவும் ஆற்றாமையைப் போக்கிக்கொள்ளவும் மதுவுக்கோ மதத்துக்கோ தற்காலிக விடுபடல்களுக்கோ தன்னை ஒப்புக்கொடுத்து விடுகிறான். இதனால் அவர்களது போராடும் குணம் மழுங்கிவிடுகிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ளும் அதிகார வர்க்கம், அவர்களை அதே நிலையில் தக்கவைத்து அவர்களது உழைப்பைச் சுரண்டிக் கொள்கிறது.

இந்த அவல வாழ்க்கையை காயலாங்கடையில் வேலைசெய்யும் தொழிலாளத் தோழர்களிடம் கண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் விபத்துகளைச் சந்திப்பார்கள். கையையும் காலையும் இழந்தவர்கள் அதிகம். ஒரு நாளைக்கு சுமார் ஏழரை டன் சுமை தூக்கி முதுகெலும்பு வளைந்து போனவர்கள் அதிகம். நான் வேலை செய்த இடத்தில் என்றில்லை, நாடு முழுவதும் இதற்குள் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அவர்களுக்கென்று பணிமுறை கிடையாது. காப்பீடு கிடையாது. அவர்கள் முறைசாராத் தொழிலாளர்கள் கிடையாது. இப்படிப் பல கிடையாதுகள் அவர்களது வாழ்க்கையை முறித்துப் போட்டிருக்கின்றன. இவர்களது வாழ்க்கை எந்தவிதத்திலும் முன்னேறவில்லை.

ஒரு நேரடி சாட்சியாக இவர்களது வாழ்க்கையைப் பின்னணியாக வைத்து ஒரு நாவலை எழுத வேண்டும் என்று நினைத்து எழுதத் தொடங்கினேன். அதைத் திரைப்படமாக மாற்றுவதற்கு ஒரு சின்ன விஷயத்தை மட்டும் இந்தப் பின்னணியுடன்  இணைத்துக்கொண்டேன். ’மெட்ராஸ்’ படம் முடிந்ததும் இந்தக் கதையை தோழர் ரஞ்சித்திடம் கூறினேன்.

‘ரொம்பவும் புதிதாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. இந்தப் படத்தின் பிளாக் ஹுமர் பெரிய அளவில் பேசப்படும். உடனே திரைக்கதையை எழுதத் தொடங்கிவிடுங்கள்’ என்றார். ‘கபாலி’ படம் முடிந்ததும் நீலம் புரடெக்‌ஷன் மூலம் அவரே தயாரிக்க முன்வந்தார். தற்போது படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

irandam-3jpg

இது உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான படமா?

உழைப்புச் சுரண்டல் காரணமாக உழைப்பை இழக்கிற ஒரு மனிதனுடைய இயல்பு பாதிக்கப்படும்போது அவன் எதை நாடிப்போகிறான் என்பதும், உலகத்தில் எந்த நாடாக

இருந்தாலும் ஊழல் நடந்தால் அது, அந்த நாட்டின் கடைநிலை மக்களின் தலையில்தான் விடியும் என்பதுதான் இந்தப் படக் கதையின் மையம். ஒரு நாட்டில் புயல் அடித்தாலோ, வெள்ளம் வந்தாலோ ஏன் போரைச் சந்தித்தால்கூட அதன் பாதிப்புகள் அத்தனையும் கடைகோடி விளிம்புநிலை மனிதர்கள் தலையில்தான் வந்து விழுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் அனைவருக்குமான போராட்டம் என்பது விளிம்புநிலை மனிதர்களுக்கான போராட்டமாக இருக்க வேண்டும் என்பதையும் அப்படிப்பட்ட போராட்டங்கள் வழியாக எந்த அளவுக்குச் சமூக மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதையும்  கதாபாத்திரங்கள் வழியாகச் சொல்லியிருக்கிறோம்.

தினேஷ் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் பற்றியும் மற்ற நடிகர்களின் பங்களிப்பு பற்றியும் கூறுங்கள்?

இந்தக் கதையை தினேஷ் தனது தோள்களில் சுமந்திருக்கிறார் என்று சொல்வேன். அவருக்கு மிக முக்கியமான படமாக இது இருக்கும். அரசியல் அறிவு கொண்ட சிறந்த நடிகர். மிகச் சிறந்த மனிதர். ஒவ்வொரு காட்சியும் எடுக்கும்போது தனது நடிப்பால் ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருப்பார். ஒரு லாரி ஓட்டுநராக நடித்திருக்கிறார். லாரி ஓட்டுநர் என்றாலே தமிழ் சினிமா ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களுக்கு எதிரான கதாபாத்திரம்.

அதேபோல் கதாநாயகி ஆனந்தியின் பலம் எளிமை. அதன் காரணமாகவே அவர் சிறந்த நடிப்புக் கலைஞராக இருக்கிறார். இந்தப் படத்துக்குப் பின் பெண் மையக் கதைகளில் அவர் நடிக்கத் தொடங்குவர். இவர்களுக்கு அடுத்து முனீஸ்காந்தும் ரித்விகாவும் மிக முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிறார்கள்.

படத்தின் இசை பற்றி?

நீலம் பண்பாட்டு மையம் கண்டறிந்த ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக் கலைஞர்களில் ஒருவரான தென்மா இசையமைத்திருக்கிறார். என் நண்பர். இதுவொரு ட்ராவல் மூவி என்பதால் சுமார் 40 இடங்களில் படம் பிடித்திருக்கிறோம். முதன்மைக் கதாபாத்திரங்களின் பயணத்தில் வெவ்வேறு விதமான மனிதர்களைச் சந்திக்கிறார்கள்.

அதனால் அந்தந்தப் பகுதிக்குரிய சத்தமும் பேச்சுமொழியும் இசையும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. படத்தில் இடம்பெறும் ஆறு பாடல்களும் அந்தந்த நிலப்பரப்பின் பாடல்களாக, அங்குள்ள மனிதர்களின் முகமாகவும் அகமாகவும் அமைந்துவிட்டன.இயக்குநரின் குரல்: அதியன் ஆதிரை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x