Published : 14 Jun 2019 11:07 AM
Last Updated : 14 Jun 2019 11:07 AM
ஊர் எதுவானாலும் மண்ணின் மணத்துடனான பாரம்பரிய சுவையைச் சொல்லும் தெருவோர உணவகங்கள் என்றென்றும் மக்களின் ஆதரவுக்கு உரியவை.
நடைபாதைகளில் தள்ளுவண்டியில் என எளிய உணவகங்களாக அவை தென்பட்டாலும் நட்சத்திர உணவகங்களில் கிடைக்காத வித்தியாசமான சுவை அந்தக் கையேந்தி பவன்களில் கமழும். நாவூறலை அடக்கிக்கொண்டு ஆவி பறக்கும் உணவை அள்ளிச் சுவைக்க மக்கள் ஈக்களாக மொய்ப்பார்கள்.
அங்கே வயிறும் மனதும் நிறைந்தவர்கள், வெளியே சென்று வாயாற புகழ்வது அதுபோன்ற உணவகங்களை மேலும் பிரபலமாக்கும். அப்படிச் சுவைத்த நாக்குகளால் உலக அளவில் புகழ் பெற்ற, ஆசிய நாடுகளின் பிரபலமான தெருவோர உணவகங்களைப் பற்றி சுவையுடன் விவரிக்கிறது ‘ஸ்ட்ரீட் ஃபுட் ஆசியா’ என்னும் உணவு ஆவணத் தொடர்.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தின் ஒரிஜினல் வரிசையில் அண்மையில் வெளியாகியிருக்கும் இத்தொடர், இந்தியா, தாய்லாந்து, தைவான், இந்தோனேசியா, வியட்நாம், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் என உணவின் ரகத்திலும் ரசனையிலும் அதிகம் அந்நியப்படாத நாடுகளின் தெருவோர உணவு ‘ஸ்ட்ரீட் ஃபுட் ஆசியா’வில் வருகிறது. ‘அக்லி டெலிசியஸ்’, ‘சால்ட், ஃபேட், மற்றும் ‘செஃப்ஸ் டேபிள்’ போன்ற நெட்ஃபிளிக்ஸின் பிரபலமான உணவுத் தொடர்களின் வரிசையில் இதுவும் சேர்ந்திருக்கிறது.
நாடுதோறும் முக்கிய நகரங்கள், அவற்றின் தலா நான்கு பிரபல உணவகங்கள் ஆகியவை ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம்பெறுகின்றன. இந்த ‘பிரபல’ உணவகங்கள் பெரும்பாலானவற்றில் வாடிக்கையாளர் அமர்வதற்குக்கூட இடமில்லை. சிலவற்றில் பெயர்ப் பலகைகூட இல்லாததுடன் கூரையும் கிடையாது.
ஆனாலும், வாடிக்கையாளர் ஆரோக்கியத்துக்கும் சுவைக்கும் ஏக மரியாதையுடன் மெனக்கெடுகிறார்கள். உலகப் புகழ் வாய்த்திருந்தாலும் எளிய மக்களுக்கான அந்த உணவுப் பண்டங்களின் விலையில் சகாயத்தையும் கடைப்பிடிக்கிறார்கள்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் சாதாரணத் தூறலுக்கே சகதியாகிவிடும் ஒரு சாலையோர உணவகம். அதில் மூதாட்டி ஜெய் ஃபாய் சமைக்கும் பிரத்யேக சூப்புக்கும் ஆம்லெட்டுக்கும் வாடிக்கையாளர்கள் வரிசை கட்டுகிறார்கள்.
இந்தோனேசியாவின் யோக்யாகர்தாவில் வயதில் சதமடித்த பொக்கை வாய்ப் பாட்டி, பிரசித்தியான ‘ஜஜான் பஸார்’ உணவைத் தயாரிக்க அர்த்த சாமத்தில் சமையலைத் தொடங்குகிறார். நாட்டின் அப்போதைய அதிபர் சுகார்தோ ஆளனுப்பி ஆசையாய்ச் சுவைத்த அந்த உணவு, நடைபாதையோரம் விற்கப்படுவது.
ஜப்பானின் ஒசாகாவில் உள்ளூர்க்காரார் முதல் வெளிநாட்டினர்வரை மொய்க்கும் சாலையோர அசைவ உணவகத்தை நடத்தும் முதியவர், அடுப்பில் மூளும் நெருப்பில் அநாயச சாகசமாய்ச் சமையலைத் தொடர்கிறார்.
அதைப் படம்பிடிக்க வெளிநாட்டுப் பயணிகள் சூழ, மொழியறியா வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியையும் உணவையும் ஒருசேர அவர் பரிமாறுகிறார். பிறகு அவர் கடந்துவந்த சோதனைகளும் படிப்பினைகளும் கலந்த சொந்தக் கதை நமக்குச் சொல்லப்படுகிறது. இப்படி உணவின் கதையுடன் சமைப்பவரின் சாதனைக் கதையும் தொடருக்குத் தனிச்சுவை தருகிறது.
இந்தியாவில் முகலாய அரசுகள் சரிந்ததும் வீதிக்கு வந்த அரண்மனைச் சமையலர்கள், நாடு சுதந்திரமடைந்தபோது பாகிஸ்தானிலிருந்து இங்கே இடம்பெயர்ந்தவர்கள் எனத் தங்கள் வழித்தோன்றல்களுக்குப் பயிற்றுவித்த பாரம்பரிய சமையலின் சுவை, பழைய டெல்லியின் வீதிகளில் இப்போதும் கிடைக்கின்றன.
சாதாரண சைவ ‘சாட்’ ரகங்களில் தொடங்கி, அசைவ ‘நிஹாரி’ வகைகள் வரை அவற்றைப் படையலிடுகிறது இந்திய அத்தியாயம். உணவுக்கும் அதனைச் சமைத்துப் பரிமாறும் மனிதர்களுக்கும் இடையிலான தொடர்பு, அதன் ஆழத்திலிருக்கும் பாரம்பரியம், பண்பாடு, வரலாறு எனப் பலவும் ஆவணத் தொடரில் சுவையாகப் பந்தி வைக்கப்படுகின்றன.
படமாக்கலில் துல்லியம், ஆழமான விவரணைகள், கூர்மையான தொகுப்பு, சுவாரசிய பேட்டிகள் போன்ற கலை அம்சங்கள் இதிலும் உண்டு. உணவு ரசிகர்களுக்கான இந்தத் தொடரைப் பார்க்க விரும்புவோர் கைவசம் விருப்பமான சிற்றுணவு ரகங்களுடன் தொடங்குவது நலம். இல்லையெனில் நா நரம்புகளைத் தூண்டும் காட்சிகளால் பாதியில் நாவுக்கு ருசியானதைத் தேடித் தவிக்க நேரிடலாம்.
ஸ்ட்ரீட் ஃபுட் ஆசியா ஆவணத் தொடரின் முன்னோட்டத்தைக் காண:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT