Published : 30 Mar 2018 10:12 AM
Last Updated : 30 Mar 2018 10:12 AM
‘‘அ
து 2003. முத்துசாமி ஐயாவோட கூத்துப்பட்டறையில சேர்ந்திருந்த நேரம். அப்போ சென்னை காந்தி மண்படம் பூங்காவுல ‘படுகளம்’ங்கிற பேர்ல ஒரு நாடகம் போட்டோம். அங்கே பார்வையாளரா வந்திருந்த இயக்குநர் தரணி சாரோட கண்ணுல பட்டேன். அவர் வழியா என் மேல விழுந்த வெளிச்சம்தான் ‘கில்லி’ படத்தில் தொடங்கி, ‘புதுப்பேட்டை’, ‘ஆடுகளம்’, ‘மவுன குரு’, ‘குக்கூ’, ‘விசாரணை’ன்னு படர்ந்து இப்போ ‘அசுரவதம்’, ’96’ - ன்னு பிரகாசமா வாழ்க்கை நகர்ந்திட்டிருக்கு’’ - யதார்த்தம் குறையாமல் பேசத் தொடங்கினார் ‘ஆடுகளம்’ முருகதாஸ்.
குணச்சித்திர, காமெடி நடிகர்களில் ஒருவராக கோலிவுட்டில் அறியப்பட்டிருக்கும் ‘ஆடுகளம்’ முருகதாஸ் தேர்ந்த வாசகரும் கூட. அலுவலக மேஜை முழுக்க ‘ஓநாய் குலச்சின்னம்’, ‘தாய்’, ‘புத்துயிர்ப்பு’, ஷேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ நாடகம் என்று கலவையான ரசனையில் புத்தகங்கள் விரவிக் கிடக்கின்றன. தொடர்ந்து ‘தி இந்து’வுக்காக அவருடன் பேசியதிலிருந்து...
பாண்டிச்சேரி, அரியாங்குப்பம்தான் சொந்த ஊர். தாத்தா ஒரு தெருக்கூத்தாடி. அப்பா மில்லில் வேலை பார்க்கும்போது ஒரு கையை இழந்துட்டாங்க. பெருசா வசதி எதுவும் இல்லாத சாதாரணக் குடும்பம். நாடகம் கத்துக்கிட்டா காசு கிடைக்கும்னு சின்ன வயதிலேயே ஆழி குழந்தைகள் நாடகக்குழுவுல சேர்ந்துட்டேன். அப்புறம்தான் நண்பர்கள் மூலமா கூத்துப்பட்டறை முத்துசாமி ஐயா பழக்கம். அங்கே இருந்து சினிமான்னு வந்தாச்சு. இப்போ மனைவி சாரதா, மகள்கள் பொழில், தென்றல், மகன் சமரன் எல்லோருக்கும் மகிழ்ச்சியையும், அன்பையும் கொடுக்குற இடத்துக்கு வந்திருக்கேன். ரொம்பவே சந்தோஷமா இருக்கு.
நாடகத் துறையில் இருந்து சினிமாவில் நுழைந்தாலே ரொம்ப சீரியசாவும் மிகையாவும் நடிப்பாங்கன்னு ஒரு பார்வை இருக்கே?
சினிமா நடிப்பு வேற, மேடைக்கூத்து வேற. எதிர்ல 100 பேர் உட்கார்ந்திருக்குறப்போ கடைசி வரிசையில இருக்குறவரையும் மேடையில இருந்தே ஈர்க்கணும். அதுதான் மேடை நடிப்பு. அதையே கேமரா முன்னாடி பண்ணினா ‘காசுக்கு மேல நடிக்காதீங்க’ன்னு சொல்லிடுவாங்க. நாம எந்த இயக்குநரோட படத்துல நடிக்கிறோம்கிறதை பொறுத்துதான் சமூகப் படமா, கமர்ஷியல் படமா, சீரியஸான படமான்னு இங்கே பிரிக்க முடியும். அந்த வரிசையில வெற்றிமாறன், மகிழ்திருமேனி, சாந்தகுமார் மாதிரி விதவிதமான இயக்குநர்களோட படங்களில் நானும் நடிச்சிருக்கேன்.
எனக்கு கிடைச்ச கதாபாத்திரங்களை வைச்சுப் பார்க்கும்போது நானும் சீரியஸான ஆக்டர் மாதிரி தெரியலாம். மகத்தான நடிகர் மார்லன் ப்ராண்டோ, “ஒட்டுமொத்த சமூகத்தோட எல்லா முகத்தையும் தனக்குள்ள புதைத்து வைத்திருப்பவன்தான் ஒரு நல்ல நடிகன்” என்று கூறியிருக்கிறார். அந்த மாதிரி நமக்கு கொடுக்குற எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்கணும். அது காமெடி, கமர்ஷியல் எதுவாக இருந்தாலும் தயாராக இருக்க வேணும். ஏன், ஹீரோயின் வேஷம்னாலும்கூட உடனே மீசையை எடுத்துட்டு மேக்கப் போட இறங்கிடணும். எப்பவும் என்னை இயக்குநரின் நடிகராகவே வைத்திருக்கவே விரும்புறேன்.
‘ஆடுகளம்’, ‘விசாரணை’ மாதிரியான படங்கள் உங்கள் பயணத்தில் முக்கியமான படங்கள் இல்லையா?
என்னோட பேர் கூடவே ‘ஆடுகளம்’ ஒட்டிக்கிடுச்சு. கூத்துப்பட்டறையில இருந்த நாட்களில் இருந்தே வெற்றிமாறன் சார் முன்னாடி அடிக்கடி போய் நிப்பேன். ‘ஆடுகளம்’ படத்துல நடித்த பிறகும்கூட அப்படித்தான். ‘விசாரணை’ படத்துக்கு முன்பே ‘வட சென்னை’ படத்தை எடுக்க அப்போ திட்டமிட்டிருந்தார். அந்த நேரத்துலயும் போய் நின்னேன். ‘உனக்கு இந்தப் படத்துல எந்த வேலையும் இல்லயேடா முருகா’ன்னு சொன்னார்.
அப்போ எங்கயோ வெளியில புறப்பட்டுக் கொண்டிருந்தவர் காரை மறித்து ‘எனக்கு கேரக்டர் இருக்குன்னு சொன்னாத்தான் காரை விடுவேன்’ன்னு முன்பக்க டயரை பிடிச்சிக்கிட்டு உட்கார்ந்துட்டேன். அதன்பிறகு இயல்பாகவே ‘வட சென்னை’ படத்துக்கு முன் ‘விசாரணை’ படத்தை எடுக்குற சூழல் உருவாச்சு. வெற்றி சார் எனக்கு அதுல ஒரு கதாபாத்திரமும் கொடுத்தார். அவர் என்னோட சினிமா வாழ்க்கையில ஒரு வரம்.
சினிமாவுக்கு வந்து 14 ஆண்டுகள் ஆனாலும் இரண்டு டஜன் படங்களில் மட்டும்தானே நடித்திருக்கிறீர்கள்?
நான் இதுவரை நடித்த எல்லா படங்களுமே வெற்றிப் படங்களாகவே இருக்கும். அதுவாக அமைந்ததுதான். நாடக அனுபவம் இருந்தாலும் இப்பவும் புதிதாக யார் வந்தாலும் பேசிப் பழகக் கொஞ்ச அவகாசம் தேவைப்படுகிறது. என் சுபாவம் அப்படி. ஆனாலும் என்னைத் தேடி வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் என்னை மனதில் வைத்து எழுதப்பட்ட கதாபாத்திரமாகவே இருக்கும்.
‘குட்டிபுலி’ மாதிரியான படங்களில் எல்லாம் எனக்கு கதாபாத்திரத்துக்கு முழுமை இருக்கும். என்னை மாதிரியான ஒரு குணச்சித்திர, காமெடி நடிகருக்கு கதையில் முழுமையைத் தர இயக்குநர்கள் நினைத்து எழுதுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.
விஜய்சேதுபதி, விமல், விதார்த், அட்டக்கத்தி தினேஷ், குரு சோமசுந்தரம், ஜெயக்குமார், நான்னு எல்லோரும் கூத்துப்பட்டறையில ஒரே செட். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நண்பன் விஜய்சேதுபதியுடன் இணைந்து `96’ படத்தில் நடித்திருக்கிறேன். வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குநர் பிரேம்குமாருக்கு நன்றி. அதேபோல சசிகுமார் சாரோட ‘அசுரவதம்’. இயக்குநர் மருதுபாண்டியன் படத்துல எனக்கு பிரமாதமான ரோல் கொடுத்திருக்கார்.
இதே மாதிரி அடுத்தடுத்து ‘மவுனகுரு’ சாந்தகுமார் சார், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வினோத், இயக்குநர்கள் கார்த்திக் சுப்பராஜ், ராஜூமுருகன், சமுத்திரகனி, கவுதம் மேனன், நடிகர்கள் தனுஷ், கார்த்தி, பிரபுதேவா உள்ளிட்ட பல முன்னணிக் கலைஞர்களோட படங்களில் எல்லாம் முகம் காட்டணும்னு ஆசை. இப்படி இன்னும் ஒரு பெரிய பட்டியலே வைச்சிருகேன். ஆனா பக்கம்தான் பத்தாது. மீதிப் பட்டியலை அடுத்தப் பேட்டியில சொல்றேன்!’’
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT