Published : 02 Mar 2018 11:13 AM
Last Updated : 02 Mar 2018 11:13 AM

பாலாவைக் கண்டு எனக்கு பயமில்லை ! - நடிகை இவானா பேட்டி

டிக்கடி ட்ரெண்டாகிவிடும் கேரள ஹீரோயின்களின் வரிசையில் வந்திருக்கிறார் ‘நாச்சியார்’ படத்தில் அரசி கதாபாத்திரத்தை ஏற்றுநடித்திருக்கும் இவானா. அவருடன் சிறு உரையாடல்

உங்கள் ஊர், குடும்பப் பின்னணி பற்றி...

கேரளத்தின் கோட்டயம், செங்கனாச்சேரி பக்கத்தில் இருக்கும் நாலுகோடிதான் சொந்த ஊர். நடுத்தரக் குடும்பம். அப்பா ஷாஜி ஒரு பிஸ்னெஸ்மேன். அம்மா டின்ஸி குடும்பத் தலைவி. எனக்கு லயா என்றொரு அக்கா, லியோ என்றொரு தம்பி. அக்கா இப்போ பிகாம் ஃபைனல் இயர் படிக்கிறாங்க. நானும் தம்பியும் +2 படித்துக்கொண்டிருக்கிறோம்.

உங்க இயற்பெயரே இவானாதானா?

இல்லை. அலீனா. சினிமால இந்தப் பெயரை உச்சரிக்கிறது பலருக்குக் கஷ்டமா இருக்கும் என்று அப்பா, அம்மா ரெண்டுபேரும் தேர்ந்தெடுத்த பேர்தான் இவானா. ஆனா பாலா சார் என்னை செட்ல ‘மாலூ’ என்று பெட் நேம் வச்சுக் கூப்பிட்டார்.

சினிமாவுக்கு எப்படி வந்தீர்கள்?

என் தம்பி லியோதான் காரணம். எங்க வீட்டில் அவனுக்குத்தான் முதல் சினிமா வாய்ப்பு கிடைத்தது. கடந்த வருடம் வெளிவந்த ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தில் பகத் பாசிலின் சின்ன வயது கேரக்டரில் நடித்திருப்பது அவன்தான். நானும் அவனும் டுவின்ஸ். சினிமாவில் நடிக்கலாம் என்று அவனைப் பார்த்துதான் எனக்கு ஆசை வந்தது. மலையாளத்தில் இதுவரை மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். அதில் ஒரு படம் ’அனுராக கரிக்கின் வெள்ளம்’. அந்தப் படம் 2016-ல் ரிலீஸ் ஆச்சு. அந்தப் படம் பற்றிய செய்தி இணையதளங்களில் வெளியானபோது, என்னோட போட்டோவும் வெளியாகியிருந்தது. அதைப் பார்த்துட்டுதான் பாலா சார் ஆபீஸிலிருந்து அழைப்பு வந்தது.

ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருக்கும்போது உங்கள் பள்ளியில் நடிக்க அனுமதித்தார்களா?

எனது பள்ளியின் முதல்வர் தாமஸ் பார்த்தானம் சாருக்குத்தான் நன்றி சொல்லணும். பாலா சார் படத்துல நடிக்க வாய்ப்பு வருது, நீங்க அனுமதி கொடுத்தா போகலாம்ன்னு இருக்கேன்னு அவர்கிட்ட சொன்னேன். அவர் “ ஜஸ்ட் கோ அண்ட் என் ஜாய் யுவர் லக்” என்று சொல்லி அனுமதி கொடுத்தார். படத்தை முடிச்சுட்டு வந்ததும் எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் நடத்தி பாடத்தில் எல்லா போர்ஸனையும் நான் கவர் பண்ண உதவி செய்திருக்கார். அவருக்கும், பள்ளிக்கும் நல்ல பெயர் வாங்கிக்கொடுக்க, விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருக்கிறேன். நல்ல மார்க் வாங்கிக் காட்டணும். இனி போர்ட் எக்ஸாம் முடிஞ்ச பிறகுதான் அடுத்த படம் பற்றி யோசிப்பேன்.

நிறைய முகபாவங்கள் காட்டி நடித்திருக்கிறீர்களே, ஜோதிகா சொல்லிக்கொடுத்தாரா?

இல்லை, பாலா சார்தான் சொல்லிக்கொடுத்தார். அசோசியேட் டைரக்டர் தொடங்கி டீம்ல இருந்த பலர் ஒழுங்கா பண்ணிடும்மா, இல்லன்னா அண்ணே கைவச்சுடுவார்ன்னு பயமுறுத்தினாங்க. எனக்கும் ஆரம்பத்தில் ரொம்ப பயம்தான். ஆனால் பாலா சார், ‘இதுதான் சீன், இப்படித்தான் டயலாக் பேசணும், இவ்வளவு நடிச்சாபோதும்’ என்று எனக்குப் பேசி நடித்துக் காட்டிவிடுவார். அதை அப்படியே செய்தேன் அவ்வளவுதான். ஒரு வாரத்துக்கு அப்புறம் பயம் போயே போச்சு. அவ்வளவு கேர் எடுத்துக்குவார். இப்படி கேர் எடுக்குறவங்க எப்படி நம்மை அடிப்பாங்க?

அப்புறம் ‘குஷி’ படத்தில் இருந்தே நான் ஜோதிகா மேடத்தோட ரசிகை. பாலா சார் மேல முதல்ல எப்படிப் பயம் இருந்ததோ அப்படித்தான் ஜோதிகா மேடத்தைப் பார்க்கும்போதும் இருந்தது. அவரோட நடிச்ச எல்லாக் காட்சியுமே ரொம்ப சீரியஸ். ஆனால் ரொம்ப கூலா நடிச்சேன். அதுக்குக் காரணம் அவங்கதான். கடைசி நாள் படப்பிடிப்பில என்னைக் கொஞ்சி முத்தம் கொடுத்து அனுப்பி வெச்சாங்க.

இளவயதில் கர்ப்பமாகும் கதாபாத்திரம் என்று முதலிலேயே சொன்னார்களா?

இல்லை. பத்துநாள் படப்பிடிப்புக்குப் பிறகு நானே புரிந்துகொண்டேன். கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அப்பா, அம்மாவிடமும் இதுபற்றிக் கேட்டேன். சோஸியல் மெசேஜ் சொல்ற படம். பாலா டைரக்‌ஷன். எல்லாம் நல்லா நடக்கும் அமைதியாக இருன்னு சொன்னாங்க. அப்புறம் மனசு சமாதானம் ஆகிவிட்டது. படம் வெளியான பிறகு கிடைக்கும் பாராட்டுகளைப் பார்த்தால் நான் அப்போது தேவையில்லாமல் பயப்பட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

சினிமா உலகிலிருந்து யார் பாராட்டினாங்க?

‘தாரை தப்பட்டை’ படத்தில் பாலாவின் அசோசியேட் டைரக்டராக வேலை செஞ்ச சிவகுமார் சார் எனக்கு போன் செய்து “அனுபவம் கொண்ட ஆர்டிஸ்ட் மாதிரி நடிச்சிருக்கே. அவசரப்படாம கதைகளைத் தேர்வுசெய்து நடி.” என்று பாராட்டும், அட்வைஸும் நிறையக் கொடுத்தார். அதை கண்டிப்பா ஃபாலோ பண்ணுவேன்.

படங்கள்:

எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x