Published : 19 Jan 2018 10:44 AM
Last Updated : 19 Jan 2018 10:44 AM
ச
ரியாக 68 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. வரலாறும் ஆன்மிகமும் செழித்தோங்கும் காஞ்சிபுரத்தில் ஒரு காலை. நகரின் மிக அகலமான திருக்கச்சி நம்பி தெருவில், வரதராஜப் பெருமாள் கோயில் யானை ஒய்யாரமாக நடைபோட்டபடி ஒரு வீட்டின் முன்பாகப்போய் நின்றது. புத்தாடை அணிந்திருந்த 18 வயது இளைஞன் யானையின் மீது ஏற்றப்பட்டான். நாதஸ்வரமும் தவிலும் இசைக்க, அவனைச் சுமந்துகொண்டு நகரின் முக்கிய வீதிகளை வலம் வந்தது யானை.
ஐந்தாம் வகுப்பிலிருந்து இணைபிரியாமல் தொடர்ந்த தன் உயிர் நண்பன் ஸ்ரீதரை விட்டுப் பிரிந்து வந்துவிட்டோமே என்ற ஏக்கமும் தனக்கு மிகவும் பிரியமான ஊராகிய செங்கல்பட்டையும் பிரிய நேர்ந்துவிட்டதே என்ற வருத்தமும் அவனது முகத்தில் தெரிந்தன. காஞ்சிபுரத்தில் வசித்துவந்த அத்தைக்கு அவனைத் தத்து கொடுத்திருந்தனர் அவனுடைய பெற்றோர். அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகத்தான் மங்கள வாத்தியம் இசைக்க அந்த யானை ஊர்வலம்.
யார் அந்த இளைஞன்?
இயற்பெயர் சடகோபன். வீட்டில் சிறுவயதில் அழைத்த பெயர் ‘குட்டி சட’. இவர் பணிபுரிந்த திரைப்படத்தின் முதல் கதாநாயகியான கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் உச்சரிப்பில் ‘ஜடை கோபால்’, வீனஸ் திரைப்பட நிறுவனத்தில் உதவியாளராகப் பணியாற்றிய கே.எஸ் கோபாலகிருஷ்ணன், ‘ஆச்சாரி’ என்று அழைப்பார். இந்தப் பெயரே திரைப்பட யூனிட் முழுவதும் பரவி நிலைத்தது.
‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முதன்முதலாக இயக்குநர் ஸ்ரீதர் தனது பால்ய நண்பனான இந்த இளைஞனை கோபு என்ற பெயருடன் வசனகர்த்தாவாக அறிமுகப்படுத்தினார். தனது பெயருக்கு இணையாக ஸ்ரீதர்-கோபு என்று அறிமுகப்படுத்த அன்றிலிருந்து கோபுவாக மாறினார். ஸ்ரீதரின் சித்ராலயாவுக்கு இவரே எல்லாம் என்பதால், பலருக்கும் இவர்தான் ஸ்ரீதரின் வலது கை. பின்னாளில் இவரே இயக்குநராக மாறியதும், திரைப்பட உலகம் இவருக்கு ‘சித்ராலயா’ கோபு என்னும் அங்கீகாரத்தை அளித்துவிட்டது.
சித்ராலயா நிறுவனத்தை ஸ்ரீதர், கோபு, வின்சென்ட், அருணாசலம், சி. வி. ராஜேந்திரன் ஆகியோர் சேர்ந்து தொடங்கினார்கள். ஆனால் , சித்ராலயா என்ற அடைமொழி கோபுவை மட்டும் தொற்றிக்கொண்டது. நகைச்சுவை சரளமாக இவர் வாயிலிருந்து தெறித்து விழும். எனவே, பலருக்கு இவர் ‘சிரித்ராலயா’ கோபு.
கோபு பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே செங்கல்பட்டில்தான். 1932- ல் பிறந்தவர் நான்கு வயதிலேயே செயின்ட் ஜோசப் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். கோபு புத்தகத்தைக் கையில் எடுத்துப் பொறுப்பாகப் படிக்கத் தொடங்கினால், அவரது அப்பா தர்ப்பை கட்டு தேடுவாராம் தர்ப்பணம் செய்வதற்கு. ஏனென்றால், கோபு படிக்க உட்கார்ந்தால், அன்று ஆடி அமாவாசையாக இருக்கும் என்று நக்கலடிக்கும் அளவுக்குப் படிப்பில் அவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டு பெற்றோர் நொந்து நூலாகிப் போனார்கள்.
எது நகைச்சுவை?
ஒன்பதாவது வகுப்பு வரை குடுமிதான் கோபுவின் ஹேர் ஸ்டைல். அதை எடுத்துவிட்டு கிராப் வைத்துக் கொள்கிறேன் என்று வீட்டில் விண்ணப்பித்தபோது அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், கிராப் வைத்துக்கொண்டு, திரையுலகில் சாதனைகள் பல படைத்த பிறகு, திடீரென்று மீண்டும் குடுமி வைத்துக்கொள்ள கோபுவுக்கு ஒரு வாய்ப்பு. தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக சாவி எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ கதையை இயக்கி, தானே அதில் அம்மாஞ்சி சாஸ்திரியாக நடிக்க வேண்டியிருந்தது. ஒயிட் ஹவுஸ் முன்பாகக் குடுமியுடன் அப்போது நிற்க, வெள்ளைக்காரப் பெண்மணிகள் அவரது குடுமியைத் தொட்டுப் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.
“ஓய் ஆர் யூ வேரிங் திஸ்?” என்று குடுமியைக் காட்டி ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி கோபுவைக் கேட்க “ இட் இஸ் அவர் நாச்சுரல் ஹெல்மெட்” என்று பதில் நொடிக்குள் பதில் தந்தார் கோபு. அந்தப் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த சச்சு உள்பட அனைவரும் சிரிக்கத் தொடங்கிவிட்டனர்.
நகைச்சுவையாகப் பேசுவது என்பது ஒரு கலை. ஜோக் என்ற பெயரில் தானே ஒன்றைப் பேசிவிட்டு, தானே சிரித்துக்கொண்டிருக்க, மற்றவர்கள் ஒருவருக்கொருவர் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருப்பது நகைச்சுவை அல்ல. தான் சிரிக்காமல் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு பேச, சுற்றியிருப்பவர்கள் குலுங்கிச் சிரித்துக்கொண்டிருந்தால், அங்கே உதிர்க்கப்பட்டதுதான் உண்மையான நகைச்சுவை.
வீட்டில் பொங்கிய உணர்வு
கோபுவின் குடும்பத்திலேயே நகைச்சுவை உணர்வு அன்றாடம் பொங்கிக்கொண்டிருக்கும். அவரது வீட்டை ஒரு நகைச்சுவை நிலையம் எனலாம். அவருடைய தந்தை எம். இ. துரைசாமி பி ஏ. லிட் ஆசிரியர். அம்மா செல்லம்மாதான் வீட்டின் சர்வாதிகாரி. சங்கீதமும் நகைச்சுவையுணர்வும் ஊட்டப்பட்டுதான் வளர்ந்தார் கோபு. கோபுவுக்குள் தாக்கத்தை ஏற்படுத்திவர்கள் என்று சொன்னால் இருவர். ஒருவர் அவருடைய தாய் செல்லம்மா. மற்றொருவர். ‘கலைவாணர்’ என்.எஸ் கிருஷ்ணன். சின்ன வயதிலேயே, ஜி. என் பாலசுப்ரமணியம், எம்.எஸ் சுப்புலக்ஷ்மி, என்.எஸ் கிருஷ்ணன் நடித்த ‘சகுந்தலை’ படத்தைப் பார்த்து, அதில் மீனவராக நடித்த என்.எஸ் கிருஷ்ணன்- துரைராஜ் ஜோடியின் புகழ்பெற்ற நகைச்சுவை வசனங்களை அப்படியே ஒப்பிப்பார் கோபு.
தாய் செல்லம்மா ஓரிடத்தில் இருந்தால் அங்கே சிரிப்பு வெடிகள் கேட்டுக்கொண்டே இருக்கும். மிகவும் நகைச்சுவையாகப் பேசுவார். இவர் பேசியதும் எல்லோரும் குபீரென்று சிரிக்கத் தொடங்குவார்கள். வேடிக்கை என்னவென்றால், சிரித்துக்கொண்டிருப்பவர்களில் ஒருவரைப் பற்றித்தான் இவர் கிண்டலாக எதையாவது கூறியிருப்பார். சம்பந்தப்பட்ட மனிதரோ தன்னைப் பற்றித்தான் செல்லம்மா கூறியிருக்கிறார் என்பதை அறியாமல் மற்றவர்களோடு சிரித்துக்கொண்டிருப்பார்.
செல்லம்மாவின் அதிரடி ஜோக்ஸ் செங்கல்பட்டில் மிகவும் பிரபலம். உதாரணத்துக்கு ஒன்று. தசரா சீசனில் அவர்கள் வசித்த தெருவில் எழுந்தருளியிருக்கும் அம்மன் கோயிலில் வாத்திய இசைவிழா களை கட்டும். பிரபல நாதஸ்வர வித்துவான்களின் கச்சேரிகளை வைத்து அமர்க்களப்படுத்துவார்களாம். 1945 -ல் நாதஸ்வர வித்துவான் டி.என். ராஜரத்தினம் பிள்ளை மிகப் பிரபலம். தோடி ராக எக்ஸ்பெர்ட். அப்பா துரைசாமியும் சங்கீதத்தில் கைதேர்ந்தவர். நாதஸ்வரச் சங்கதிகளை விசில் மூலமே வாசித்துக் காட்டுவார்.
ராஜரத்தினம் பிள்ளை கச்சேரிக்கு செல்லம்மா சென்றுவிட்டு வந்தார். அப்போது துரைசாமி மனைவியிடம், “செல்லம்மா! நேத்து ராஜரத்தினம் நாதஸ்வரம் கேட்டியோ?” என்று கேட்டார். உடனே செல்லம்மா, “நாதஸ்வரத்தைக் கேட்கலை. அதில் பிள்ளைவாள் வரிசையா தொங்கவிட்டிருந்த தங்க டாலர்ல ஒண்ணைக் கேட்டேன். ‘அதெல்லாம் தருவதில்லை’னு சொல்லிட்டார்,!” என்று கூலாகச் சொல்ல, கோபுவின் அப்பா கிளீன் போல்ட் ஆகிவிட்டார்.
இந்தச் சம்பவத்தை வைத்துத்தான் ‘சாந்தி நிலையம்’ படத்தில் நாகேஷ் சம்பந்தப்பட்ட நகைச்சுவை காட்சி ஒன்றை உருவாக்கினார் கோபு. அதில் நாகேஷிடம் அவருடைய நண்பர் சங்கீதம் பற்றிப் பேசுவார்.
நண்பர்: நேத்து ரேடியோவுல மாலி ப்ளூட் (புல்லாங்குழல்) கேட்டியோ?
நாகேஷ் : கேட்டேன்! தரமாட்டேனு சொல்லிட்டார்.
இந்தக் காட்சியின்போது அரங்கமே அதிர்ந்தது. இப்படி கோபு திரையுலகுக்கு நகைச்சுவையை வாழ்க்கையின் தெறிப்புகளிலிருந்து கொட்டிக்கொடுத்தது ஏராளம்…
- சிரிப்பு தொடரும்
தொடர்புக்கு tanthehindu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT