Last Updated : 23 Mar, 2018 10:46 AM

 

Published : 23 Mar 2018 10:46 AM
Last Updated : 23 Mar 2018 10:46 AM

இயக்குநரின் குரல்: ரத்தம் தெறிக்காத அன்பின் யுத்தம்! - மாரி செல்வராஜ்

“எ

னது சிறுகதைகளில் வந்த கதாபாத்திரங்களில் பல வெவ்வேறு பெயர்களில் என் படத்தில் இருக்கின்றன. என் வாசகர்கள் நிச்சயம் அவற்றைக் கண்டுபிடித்து விடுவார்கள்” என்று புதிரும் புன்னகையுமாகப் பேசுகிறார் மாரி செல்வராஜ். இயக்குநர் ராமின் பட்டறையிலிருந்து வந்திருப்பவர். மற்றொரு நம்பிக்கைக்குரிய இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கும் அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…

‘பரியேறும் பெருமாள்’ என்ற தலைப்பே ஏதோ சொல்ல வருகிறதே?

பரி என்றால் குதிரை. குதிரை மீது ஏறி வரும் பெருமாள் என்ற அர்த்தத்தில் தலைப்பு வைத்தோம். தலைப்பு வைத்ததற்கான முக்கியக் காரணம் வேறு. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பரியேறும் பெருமாள் பல சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வணங்கும் குலதெய்வம். ஊரில் சேட்டைகள் செய்யும் சுட்டிப் பையன்களுக்கும் சுறுசுறுப்பாகத் திரியும் இளைஞர்களுக்கும் பரியேறும் பெருமாள் என்று பெயர் வைப்பது உண்டு.

கதையில் முதல் தலைமுறை இளைஞன் படிக்க வெளியூர் கிளம்புகிறான். கதாபாத்திரம் உத்வேகமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பெயரையே கதாபாத்திரத்துக்கும் படத்துக்கும் வைத்தோம்.

இது தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தனிமனிதனின் கதையா?

ஒரே கதாபாத்திரத்தைப் பற்றிய கதை இல்லை. படத்தில் நிறைய மனிதர்களின் கதை இருக்கும். அதில் மையக் கதாபாத்திரம் பரியேறும் பெருமாள். தென் மாவட்டத்துக் கதை என்றாலே அதிகாரத்தில் இருப்பவர்கள், எம்.எல்.ஏ, எம்.பி,. அடியாள், ரவுடி என்றே காட்டுவார்கள். ஆனால், இவர்களைத் தாண்டி எளிமையான மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை இயல்பாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள். ஆனால், அவர்களுக்குள் என்ன மாதிரியான வேறுபாடு, பாகுபாடு இருக்கிறது என்பது அவர்களுக்கே தெரியாது. அதில் உள்ள பிரிவினையை நுணுக்கமாகக் கையாண்டிருக்கிறோம். படத்தில் ரத்தம் தெறிக்காது. சாதாரணமாகச் சாலையில் நடந்து போகிற, அழும் குழந்தைக்குப் பால் தருகிற, முகம் தெரியாத மனிதருக்குத் தனது வாகனத்தில் அமர லிப்ட் தருகிற மனிதர்களைப் பரியேறும் பெருமாள் பதிவு செய்கிறது.

கதிர் மீது ஒரு கவனம் குவிந்திருக்கும் நிலையில் இந்தக் கதாபாத்திரத்தைத் தாங்கியிருக்கிறாரா?

பிளஸ் 2 முடித்துவிட்டு சட்டக்கல்லூரியில் சேரும் அப்பாவி இளைஞன் கதாபாத்திரம் கதிருக்கு. கள்ளம் கபடமில்லாமல் அப்பாவித்தனத்துடன்  முதல் வருடத்தில் சேரும் இளைஞன் படிக்கப் படிக்க அடுத்தடுத்த வருடங்களில் கற்றுக்கொள்ளும் அரசியலால், வளர்ந்து வரும் நட்பால், வாழ்வியல் முறைகளால் தன்னை மாற்றிக் கொண்டே வருவான். அதற்கேற்ப அவன் முகம் மாறிக்கொண்டே வரும். அப்படி ஒரு முகத்துக்கும், கதாபாத்திரத்துக்கும் கதிர் பொருத்தமாக இருந்தார்.

கதிர் படத்துக்குள் வந்ததும் படத்தின்  கனத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டார். தன் மேல் எவ்வளவு சுமை இருக்கிறது என்பதைச்  சரியாகத் தெரிந்துகொண்டார்.

'மதயானைக்கூட்டம்', 'கிருமி' படங்களில் கதையை சுமக்க நிறைய பேர் இருந்தார்கள். ஆனால் பரியேறும் பெருமாள் படத்தின் ஒட்டுமொத்த கனத்தையும் கதையையும் கதிர் ஒற்றை ஆளாகத் தாங்கியிருக்கிறார்.

தன் வாழ்க்கையில் முக்கியமான படம் என்பதை கதிர் உணர்ந்ததால் சவாலான கதாபாத்திரத்தை சரியாகச் செய்தார். அவரது ஆர்வத்தைப் புரிந்துகொண்ட நான், அதையே அட்வான்டேஜாக எடுத்துக்கொண்டு இரக்கமே இல்லாமல் நெருக்கி வேலை வாங்கியதாகக் கூடத் தோன்றியது. அசாத்தியமான உழைப்பைக் கொடுத்திருக்கும் கதிருக்கு,  அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.

ஆனந்தி?

அப்பாவித்தனமும் அழகியலும் நிறைந்த முகம் தேவைப்பட்டதால் 'கயல்' பார்த்த நம்பிக்கையில் ஆனந்தியை நடிக்கச் சொன்னோம். என் கதைகளில் வரும் ஜோதி மகாலட்சுமி என்கிற ஜோ கதாபாத்திரம்தான் ஆனந்தி.

சினிமா என்றே முதலில் நடிக்கத் தொடங்கிய ஆனந்தி ஒவ்வொரு ஷாட்டுக்குப் பிறகு நிஜம் என்பதை அவரே கண்டுபிடித்தார். கதிர் மேல் முழு படமும் இருக்கிறது என்பதால் தான் என்னவாக இருக்கிறோம் என்பதில் ஆனந்தியின் மெனக்கெடல் அதிகரித்தது. அடுத்து என்ன? என்று என்னிடம் கேட்டுக்கேட்டு  முழுமையான ஈடுபாடு காட்டினார். அவரின் நடிப்பைப் பார்த்து ஷாட், சீன், வசனம் என நிறைய மெருகேற்றினேன்.

இதில் ஆனந்தியின் பெர்ஃபாமன்ஸ் புதுமாதிரியாக இருக்கும். படம் எப்போ வெளியாகும்? நானும் என் குடும்பமும் ஆர்வமாக இருக்கிறோம்? என்று ஆர்வம் கொப்பளிக்கக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியாகியிருக்கும் ‘கறுப்பி’ பாடல் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. அந்தப் பாடலில் அவ்வளவு கோபமும் ஆவேசமும் வெளிப்பட என்ன காரணம்?

ஒரு நாய்க்கும் ஒரு மனிதனுக்கும் உண்டான அன்பின் பிணைப்புதான் கறுப்பி பாடல். குழந்தைகள் உட்பட நிறைய மரணங்களைத் தொடர்ச்சியாக, கொத்துக்கொத்தாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். ஏன் சாகிறோம் என்ற காரணம் தெரிந்துகொண்டு எந்த உயிர் சாகிறபோதும் அந்த மரணத்தை ஜீரணிக்க முடியாது. ஆனால், எதற்காகச் சாகிறோம் என்ற காரணமே தெரியாமல் மரணத்தைத் தழுவும் உயிர்கள் குறித்த மனநிலை மிகப் பெரிய துயரத்தை என்னுள் வரவழைத்தது. அந்தத் துயரத்தின் வெளிப்பாடுதான் கறுப்பி பாடல். இந்தப் பாடலைக் கேட்ட ஒவ்வொருவரும் குழந்தையாகவும், நாயாகவும், காதலியாகவும் தன்னை தொடர்புப்படுத்திக் கொண்டார்கள். அந்தப் பாடல் எழுதப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதில் மகிழ்ச்சி.

ராமின் மாணவர் உருவாக்கும் படைப்பு, ரஞ்சித் தயாரிக்கும் படம் என்றால் அரசியல் தன்மை அதிகம் இருக்குமே?

ராம் சாரிடம் எப்படி 12 வருடங்கள் எப்படி உதவி இயக்குநராக இருந்தீர்கள் என்று இப்போதும் என்னிடம் பலர் ஆச்சரியமாகக் கேட்கிறார்கள். இதோ நிகழ்ந்து கொண்டிருக்கிற இன்றைய நாளையும் சேர்த்துச் சொல்ல வேண்டுமென்றால் நான் ராம் சாரின் உதவி இயக்குநர்தான்.

வாசிப்புத் தன்மை, சினிமாவை எப்படி அணுகுவது, எது சினிமா, சினிமாவுக்காக எவ்வளவு மெனக்கெடலாம், நம்மிடம் இருக்கும் கதைகளில் எது சினிமா ஆவதற்கான விதை இருக்கிறது என்ற வித்தையைக் கற்றுக்கொடுத்தவர் ராம் சார்.

'உன் வாழ்க்கையை அப்படியே படம்பிடித்துக் காட்டு. அது மக்களுக்கு என்னவாகப் புரிகிறதோம், தெரிகிறதோ அதுதான் அரசியல். நீ படம்பிடித்துக் காட்டுவது உண்மை. அந்த உண்மைதான் உனது அரசியல்' என்பதுதான் ராம் சார் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடம். 

ரஞ்சித் அண்ணன் தயாரிப்பதால் சினிமா எதிர்பார்ப்பையும் தாண்டி அரசியல் எதிர்பார்ப்பு இருப்பது உண்மைதான். சினிமாவில் ஏதோ ஒரு தரப்பு அவமானப்படுத்தப்படும், கோபப்படுத்தப்படும், புறக்கணிக்கப்படும். ஆனால், இந்தப் படத்தில் அப்படி இல்லை.  யாரையும் புறக்கணிப்பதோ, அவமானப்படுத்துவதோ இருக்காது. மனித மாண்புமிக்க அரசியல் படத்தில் மிக உறுதியாக இழையோடும். அரசியல், உளவியல், அழகியல், ஒற்றுமை எல்லாம் சேர்ந்த புள்ளியாக படம் இருக்கும்.

சந்தோஷ் நாராயணன் இசை படத்துக்கு எந்த அளவுக்கு பலம் சேர்த்திருக்கிறது?

என் முதல் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை என்பதில் எனக்கு மிகப் பெரிய பெருமை. ரஞ்சித் அண்ணனால்தான் சந்தோஷ் நாராயணன் அறிமுகம் கிடைத்தது. ஆனால், பாடல், இசை வாங்க அந்த அறிமுகம் பயன்படாது. படத்தின் கதைக்களம்தான் அதை முடிவு செய்யும். நான் விஷுவல் கொடுத்ததும் சாதாரண ரசிகர் போல சந்தோஷ் சார் கொண்டாடினார், உழைத்தார். தென் மாவட்டத்துக் கதையாக இருந்தாலும் எல்லா தரப்பினரும் கொண்டாடும் மியூசிக்கல் ட்ரீட்மென்ட்டாகக் கொடுக்க வேண்டும் என இருவரும் முடிவு செய்தோம். ஒட்டுமொத்த மக்களின் ரசனைக்கேற்ப, எல்லோரையும் ஈர்க்கும் அளவுக்கு, கவன ஈர்ப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இசையால் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார்.

முதல் படத்தில் உங்கள் நோக்கம் நிறைவேறி விட்டதா? நிறைவாக உணர்கிறீர்களா?

இயக்குநராக எனக்கு முழு சுதந்திரம் இருந்தது. முதல் படம் பண்ணுகிறோம் என்ற பதற்றம் இருந்தது. பத்து படமாவது பண்ணால்தான் என் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும். முதல் படத்தை மக்கள் அங்கீகரிக்க வேண்டும் என்பது குறித்த எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், இயக்குநராக நான் என் பணியில் நிறைவடைந்துள்ளேன்.

ராம் படம் பார்த்தாரா? என்ன சொன்னார்?

ராம் சாரிடம் படம் காட்டும்போதுதான் ரொம்ப பயம் இருந்தது. ஒவ்வொரு ஃபிரேம், ஷாட்டுக்கும் பயந்தேன். அவர் பார்த்த முதல் எக்ஸ்பிரஷன், பேசும் விதம், அவருக்குப் பிடித்திருக்கிறது என்பதை அவர் கண்களில் கண்டுகொண்டேன். அவர் எனக்குக் கொடுத்த உற்சாகமும், நம்பிக்கையும் மிகப் பெரியது. அது அடுத்தடுத்த படங்களுக்கு என்னை அழைத்துச் செல்லும்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x