Last Updated : 09 Mar, 2018 10:54 AM

 

Published : 09 Mar 2018 10:54 AM
Last Updated : 09 Mar 2018 10:54 AM

தரணி ஆளும் கணினி இசை 22: மாண்டேஜ் பாடல் எனும் மாற்றம்!

லகமயமாக்கத்துக்குப் பிறகு வாழ்க்கையின் எல்லா அம்சங்களுமே வேகவேகமாக மாறிவிட்டன. தொலைக்காட்சிப் பெட்டி வருவதற்கு முன் வானொலிப் பெட்டி குடும்பத்தின் தோழனைப் போல இருந்தது. செய்திகள் கேட்கவும் இசையை ஆற அமரக் கேட்டுக்கொண்டே வேலை செய்யவும் இரவில் தலைமாட்டில் வைத்துக்கொண்டு படுத்தபடியே இசை எனும் காதலியைத் தழுவியபடி உறங்கிப்போகவும் உதவியது. எளிதில் பழுதடையாத வானொலிப்பெட்டி பழுதடைந்தாலும் அதன் உரிமையாளரே அதைச் சரிசெய்துவிடுவார்.

இன்று வானொலி, கையடக்கக் கருவிகளில் ஒரு செயலியாகிவிட்டது. தொலைக்காட்சிப்பெட்டிகளில் 4கே காட்சித்தரம் வரை வந்துவிட்டன. அடுத்த சில ஆண்டுகளில் 8கே அறிமுகமாகும்போது 4கே தொலைக்காட்சிபெட்டியை 8கே தரத்துக்கு அப்கிரேட் பண்ண முடியாது. அதுதான் இன்றைய உலகமய ‘யூஸ் அண்ட் த்ரோ’ வாழ்வியல். இன்றைய திரையிசையும் நாளைய திரையிசையும் இப்படித்தான் தற்காலிக ரசனையாகவே இருக்கும். இதன் காரணம் இன்றைய அவசர உலகம். பாடல்களில் முன்பு இருந்த வகைமையும் அவற்றைக் கொண்டாடும் ரசனையும் மாறிக்கொண்டே வந்துவிட்டதற்கு இந்த அவசரம் காரணம்.

கண்ணதாசன் காலத்து தீம் பாடல்

கண்ணதாசன் காலத்தில் மொத்தக் கதையையும் கவித்துமாக விவரிக்கும் தீம் பாடல் இருக்கும். முதன்மைக் கதாபாத்திரம் எதிர்கொள்ளும் மிகச் சவாலான சூழ்நிலையைக் கூறுவதுபோல், கதையின் திருப்பங்களை வெளிப்படுத்துவதே ‘தீம்’ பாடல். உதாரணத்துக்கு 1979-ல் வெளியான ‘ திசைமாறிய பறவைகள்’ படத்தில் எம்.எஸ்.வி. இசையில் கண்ணதாசன் எழுதி, டி.எம்.எஸ் பாடிய,

கிழக்குப் பறவை மேற்கில்

பறக்குது –அது

கிழக்கு வானை மறக்கப் பார்க்குது

தனக்கென ஒரு மார்க்கம்

உள்ளது –அது

சமயம் பார்த்து மாறி விட்டது...

காரிருள் தேடுது நிலவை – அது

திசை மாறிய பறவை...

என்ற பாடலை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். படத்தின் தலைப்பே கதையைக் கூறினாலும் படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலையையும் கதை எந்தத் திசையில் பயணிக்கிறது என்பதையும் பார்வையாளருக்கு உணர்வுபூர்வமாக எடுத்துக்கூறி, கதாபாத்திரங்களுடன் ஒன்றவைக்கவும் இதுபோன்ற தீம் பாடல்கள் உதவின. ஆனால், இன்று தீம் பாடல் தீம் இசையாக மாறிவிட்டது.

பின்னணி இசை அமைக்கும்போது அல்லது பாடல் கம்போஸிங் நேரத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு தீம் இசையை உருவாக்குவது இன்றைய போக்கு. கதாபாத்திரத்தின் குணாதிசயத்துக்கு ஏற்ப தீம் இசையை வடிவமைத்துவிடுகிறோம். குறிப்பிட்ட கதாபாத்திரம் வரும் காட்சிகளில் அந்தக் கதாபாத்திரத்துக்காக உருவாக்கப்பட்ட தீம் இசை, பின்னணி இசையுடன் கைகோத்து இழைவதை நீங்கள் கேட்க முடியும். பாடல் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறதோ அதே அளவுக்கு தீம் இசைக்கான பணி, பின்னணி இசையின் முக்கிய அங்கமாக இன்று மாறிவிட்டது.

டூயட் கொண்டாட்டம்

எந்த வகைக் கதைக்களம் என்றாலும் அதில் நாயகனும் நாயகியும் காதலித்தே தீர வேண்டும், கண்டிப்பாக டூயட் பாடல் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பதாகவே திரையுலகில் பலரும் நம்புகிறார்கள். 2000-வது ஆண்டு வரையிலுமே கூட காதல் பிறக்கும்போது ஒரு டூயட், பின்னர் காதலிக்கும் காலத்தில் கனவுப்பாடலாக ஒரு டூயட் , நாயகனும் நாயகியும் ஒரு பிரிவை சந்தித்தபின் அதே டுயட் டுயூனில் சோகப் பாடலாக இசைப்பது முன்பு வழக்கமாக இருந்தது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. நாயகன், நாயகி, இவர்களை இணைக்கும் மற்ற துணைக் கதாபாத்திரங்கள் ஆகிவற்றின் உணர்வு நிலைகள் இன்றைய படங்களில் துண்டு துண்டாக நிற்கின்றன. கதாபாத்திரங்களுக்கு இடையிலான உணர்வுகள் குறிப்பிட்ட புள்ளிகளில் இணைய வேண்டும். அப்போதுதான் அந்தக் கதாபாத்திரங்களுக்காக உருவாகும் இசையும் கேட்பவர்களின் உணர்வுகளுடன் இணையும். ஆனால், இன்று டூயட் பாடலுக்கே சிக்கல் வந்துவிட்டது. நாயகியைத் திட்டும், வெறுக்கும் பாடல்கள் டூயட் தன்மையுடன் இடம்பெறுகின்றன.உதாரணம் ‘எவண்டி உன்னைப்பெத்தான்’ பாடல். இது ஒருவிதத்தில் புதுமை என்றாலும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை இணைக்க வேண்டியதே இசையின் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

முன்பு டூயட் பாடல்கள் மெலடிகளாக இருந்தன. இன்று மென்மையாக இருக்கும் எந்தப் பாடலையும் கேட்கும் மனநிலை மாறிவிட்டது. இந்தப் புதுயுகத்தின் மனப்பான்மையைத் தாண்டி, ஒரு டூயட் பாடல் இன்று வெற்றிபெற வேண்டுமானால், அது நாயகன், நாயகி ஆகிய இருவரின் உணர்வுநிலை ஒன்றிணையும் புள்ளியில் இடம்பெற வேண்டும். அதை இயக்குநர் எவ்வாறு காட்சிப்படுத்தியிருக்கிறார், அதில் நடிக்கும் நடிகர்களின் நட்சத்திர மதிப்பு ஆகிய காரணங்களும் அதைத் தீர்மானிக்கின்றன. இன்றைய வேகமான இசை ரசனை சுழற்சி முறையில் நாளை மாறலாம்.

மாண்டேஜ் பாடல் எனும் சமாளிப்பு

திரைப்படத்தில் பாடல்களை வைப்பது என்பதே யதார்த்ததுக்கு முரணானது, எனவே பாடல்கள் இல்லாமல் திரைப்படங்கள் வர வேண்டும் என்ற விவாதம் இன்னும் இருக்கவே செய்கிறது. கையாளப்படும் கதை, பாடல்களுக்கு இடந்தராத திரைக்கதையின் தீவிரத் தன்மை, இயக்குநரின் தன்னம்பிக்கை ஆகியவற்றைப் பொறுத்தே பாடல்கள் தேவையா இல்லையா என்பதை விவாதிக்க முடியும். என்னைப் பொறுத்தவரை இந்திய சினிமாவின் கதையாடலில் இருக்கும் இன்றைய வடிவம், நமது கூத்துமரபின் தொடர்ச்சியை இழக்கவிரும்பாத ஒன்று. முன்பைப் போல் கதாபாத்திரங்கள் வாயசைப்பதைக் குறைத்துக்கொண்டதை ஒரு இசையமைப்பாளராக நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், பாடலின் முக்கியத்துவத்தை இந்திய சினிமா இழக்க விரும்பவில்லை. அது ‘மாண்டேஜ் பாடல்’ என்ற வடிவத்தில் கதையை நகர்த்தவும், கதாபாத்திரங்களை நிறுவவும் பயன்படுத்தும் பாடல் உத்தியாகத் திரையிசையில் தன்னைத் தீவிரமாகத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது என்பேன். அதேநேரம் ‘மாண்டாஜ் பாடல்’ தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் சமாளிப்பாகவும் இருக்கிறது. பாடலுக்கு பட்ஜெட் இல்லை என்பது போன்ற காரணங்களைக் கூறி, ஏதோ ஒன்றை எடுத்துவந்து, ‘ இது பாடல் காட்சிகானது’ என்று கூறி நிர்பந்திப்பதும் அதிகமாகிவிட்டது.

ஆனால் மாண்டேஜ் பாடல், திரைக்கதையின் ஒரு அரைமணிநேர சீக்வென்ஸை ஐந்தே நிமிடங்களுக்குள் விவரிக்க கைகொடுக்கிறது. காட்சிகள் வழியே கடத்தப்படும் உணர்வைவிட மாண்டேஜ் காட்சிகளின் வழியே பாடலின் வடிவத்தில் வெளிப்படுத்தும்போது பார்வையாளர்கள் இன்னும் நெருக்கமாகக் கதையுடனும் கதாபாத்திரத்துடன் ஒன்றிட இவ்வகைப்பாடல் உதவுகிறது. பாடல் வரிகளுக்குக் கதாபாத்திரங்கள் வாயசைப்பது நடிகர்களின் முக்கிய திறமையாக இருந்தது. ஆனால் , இன்றைய நடிகர்களில் பெரும்பாலானவர்கள் வரிகளைச் சரியாக உள்வாங்கி அதற்குப் பொருத்தமாக உதடுகளை அசைக்க முடிவதில்லை. மொழிதெரியாத பிறமொழி கதாநாயகிகளும் இதற்கு ஒரு காரணம். யதார்த்தமான கதையம்சமும் சித்தரிப்பும் கொண்ட படங்களுக்கு அர்த்தபூர்வமான மாண்டேஜ் பாடல்கள் அற்புதமான உணர்வைக் கொடுக்கக் கூடியவை. மாண்டேஜ் பாடல்போலா திரையிசை இன்று பல மாற்றம் கண்டிருந்தாலும் அதற்கான தேவை அப்படியேதான் இருக்கிறது. ஆனால், இன்னொரு பக்கம் திரையிசைக்கு மாற்றாக வளர்ந்து வந்திருக்கும் பாப் உள்ளிட்ட தனியிசைச் சந்தை, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள்ளைப்போல ஏன் இங்கே பிரபலமாக வில்லை. அடுத்த வாரம் அலசுவோம்.

தொடர்புக்கு: tajnoormd@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x