Published : 16 Mar 2018 11:52 AM
Last Updated : 16 Mar 2018 11:52 AM
தென்னிந்திய சினிமாவின் முக்கியக் கதாநாயகி சமந்தா, ‘கபாலி’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ராதிகா ஆப்தே. இருவரும் நீச்சல் உடை அணிந்ததை சர்ச்சை ஆக்கியிருக்கிறார்கள் வலைவாசிகள். சமீபத்தில், நண்பர்களுடன் கோவாவுக்குச் சென்றிருந்தபோது பிகினி உடையணிந்து கடலில் குளித்த ஒளிப்படங்களைத் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் ராதிகா ஆப்தே.
இதை வெகுவாகக் கலாய்த்து வந்த வலைவாசிகளை நோக்கி “பிகினி அணிந்ததற்காக என்னைக் கிண்டல் செய்பவர்கள், நான் பீச்சில் சேலை அணிந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்களா?” எனக் கேட்டிருந்தார். அதேபோல் பிகினி ட்ரோலில் சமந்தாவும் சிக்கினார். “திருமணத்துக்குப் பின் பிகினி உடையணிவதா?” எனக் கேள்வி எழுப்பிய வலைவாசிகள் மீது “நான் என்ன செய்ய வேண்டுமென்ற விதியை நான் பார்த்துக்கொள்கிறேன். உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்” எனச் சாட்டையைச் சொடுக்கியிருக்கிறார்.
தமிழ்ப் புத்தாண்டில் ‘தடம்’
அருண் விஜய் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் வெளிவந்த ‘தடையறத்தாக்க’ படத்தின் வெற்றி இன்னும் பேசப்படுகிறது. தற்போது இவர்கள் மீண்டும் இணைந்து ‘தடம்’ என்னும் படத்தை ஒரே மூச்சில் முடித்துவிட்டார்கள்.
தி சினிமா பீப்பள் நிறுவனம் சார்பாக இந்தர் குமார் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் அருண் விஜயின் ஜோடிகளாக தான்யா ஹோப், ஸ்முருதி என இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். இறுதிக் கட்டப் பணிகள் நடந்துவரும் நிலையில் தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக வர இருக்கிறது ‘தடம்’.
ஆர் கே. சுரேஷின் ‘டைசன்'
கடந்த ஆண்டு வெளியான 'அட்டு ' படத்தை இயக்கிக் கவனம் பெற்றவர் ரத்தன் லிங்கா. அந்தப் படத்தைத் தயாரித்தவர் ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் தயாரிப்பாளர், நடிகர் ஆர்.கே.சுரேஷ். தற்போது ‘அட்டு’ பட இயக்குநர் கூறிய கதை பிடித்துப்போனதால் அவரது இரண்டாவது படத்தில் கதாநாயகனாக நடித்து, படத்தையும் தயாரிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். 'டைசன்' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். தற்போது 'பில்லாபாண்டி ', 'வேட்டைநாய்’, ‘தனிமுகம்’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார் சுரேஷ்.
‘பிக் பாஸ்’ கணேஷ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசிவரை வந்த கணேஷ் வெங்கட்ராம் தற்போது ‘மை ஸ்டோரி’ என்ற மலையாளப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பிருத்திவிராஜும் இவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் கணேஷுக்கு ஜோடி பார்வதி. ரோஷினி தினகர் இயக்கிவரும் இந்தப் படம் முழுவதும் போர்ச்சுகல், ஜார்ஜியா ஆகிய நாடுகளிலும் மைசூர் நகரிலும் படமாக்கப்பட்டிருக்கிறது. கணேஷ் வெங்கட்ராம் தற்போது தமிழில் செல்வா இயக்கிவரும் ‘வணங்காமுடி’ படத்தில் அரவிந்த்சாமியுடன் இணைந்து நடித்து வருகிறார்.
ஒரு பாடல், ஒரு கோடி
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துவரும் படம் ‘பூமராங்’. மசாலா பிக்ஸ் என்ற பட நிறுவனம் இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு ஒருகோடி ரூபாய் செலவில் அரங்கம் அமைத்திருக்கிறது. அதர்வா படத்துக்கு அதிகம் செலவழிக்கப்படுவது இதுதான் முதல்முறையாம். அதர்வாக ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துவரும் படம் இது.
தற்போது படமாக்கப்படும் பாடல் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது '' முக்கிய சமூகக் கருத்து ஒன்றை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஷன் படம் 'பூமராங்'. இப்படத்தில் தேசப்பற்றுப் பாடல் ஒன்று உள்ளது. இந்தப் பாடலுக்காக மிகப் பிரம்மாண்ட செட்டை அமைத்தோம். இசையமைப்பாளர் ரதன், பாடலாசிரியர் விவேக் ஆகியோர் இந்தப் பாடல் கதையில் இணையும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு நான் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பான இசையையும் வரிகளையும் தந்துள்ளனர்.
கலை இயக்குநர் ஷிவா யாதவின் பிரம்மாண்டமான செட்டும் நடன இயக்குநர் பிருந்தாவின் பணியும் பாடலை மேலும் சிறப்பாக்கிவிட்டது.” என்கிறார்.
'சுந்தரபாண்டியன்’ கூட்டணி
சசிகுமாரை பாக்ஸ் ஆபீஸ் நாயகன் ஆக்கிய படங்களில் ஒன்று கடந்த 2012-ல் வெளியாகி வெற்றிபெற்ற 'சுந்தரபாண்டியன்’. ‘சுப்ரமணியபுரம்’, ‘ஈசன்’ ஆகிய படங்களில் தன்னிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய எஸ்.ஆர்.பிரபாகரனை இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்தினார் சசிகுமார்.
‘சுந்தரபாண்டிய’னைத் தொடர்ந்து 'இது கதிர்வேலன் காதல்’, 'சத்திரியன்' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய பிரபாகரன் மீண்டும் தன் குருவுடன் கூட்டணி அமைத்துவிட்டார். 'சுந்தரபாண்டியன் -2 ’ படத்துக்காக இந்தக் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
சசிகுமார், சமுத்திரக்கனி கூட்டணியின் 'நாடோடிகள் 2' படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடந்துவரும் நிலையில், அது முடிந்த பின்னர் 'சுந்தரபாண்டியன் 2' படம் தொடங்கும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT