Published : 23 Mar 2018 10:44 AM
Last Updated : 23 Mar 2018 10:44 AM
உழைக்கும் எளிய மக்களிடம் இருந்த நாட்டார் இசையே கிளைத்துப் பரவி மேட்டுக்குடி மக்களிடம் வந்து சேர்ந்திருக்க வேண்டும். சாஸ்திரிய இசையில் நாட்டார் இசையின் தாக்கம் இல்லை என்று கூற முடியாது. அப்படிப்பட்ட நாட்டார் இசையை 50 ஆண்டுகளுக்கு முன்புவரை கோயில் திருவிழாக்களைத் தவிர பொதுமன்றங்களில் நிகழ்த்திடக் களம் அமையவில்லை. லாவணிக்கும் வில்லிசைக்கும் இன்று கோயில் திருவிழாக்களிலும் இடமில்லாமல்போய்விட்டது.
இசையை ஒலிப்பதிவு செய்து திரும்பத் திரும்ப ஒலிக்கவிட்டுக் கேட்கலாம் என்ற அதிசயத் தொழில்நுட்பம் அறிமுகமானபோது அங்கே சாஸ்திரிய சங்கீதமே முன்னால் வந்துநின்றது. நாட்டார் இசையை ஒலித்தட்டு நிறுவனங்கள் புறக்கணித்தன. மக்களின் இசையை எவ்வளவு நாட்கள்தாம் புறக்கணிக்க முடியும்! பின்னாளில் நகைச்சுவை நடிகையாகத் திரையில் பாடி நடித்துப் புகழ்பெற்ற பரமக்குடியைச் சேர்ந்த பி.எஸ்.சிவபாக்கியம் அம்மாள் சினிமாவில் நடிகையாகப் பெயர்பெறும் முன்பு, கிராமப்புறக் கோயில் திருவிழாக்களில் பாடி பிரபலமான ஒரு நாட்டார் பாடல்
‘வண்ணான் வந்தானே!
வண்ணாரச் சின்னான் வந்தானே..’
இந்தப் பாடல்தான் வினையல் ரெக்கார்டில் முதன்முதலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட மக்கள் இசைப்பாடல். இதுபோன்ற பாடலுக்கு ரெக்கார்டில் எப்படி இடமளிக்கலாம் என்று அந்தக்காலத்தில் சாஸ்திரிய சங்கீத உலகிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியதை மூத்த கலைஞர்கள் பலர் பதிவுசெய்திருக்கிறார்கள். அந்தக் கிராமியப் பாடலின் வெற்றி, திரையிசையிலும் கிராமிய இசை நுழைய இடம் அமைத்துக்கொடுக்கக் காரணமாக இருந்தது தொழில்நுட்பம்.
தீவிலிருந்து ஒரு துள்ளல்
தாலாட்டு, ஊஞ்சல், நலங்கு, ஆரத்தி, மசக்கை, நோன்பு, சடங்கு, ஒப்பாரி, காவடிச் சிந்து, கும்மி, கோலாட்டம், எசப்பாட்டு, லாவணி, எதிரணி, புதிரணி, தெம்மாங்கு, கட்டியக்காரன் பாட்டு, பூசாரிப்பாட்டு, உழவுப்பாட்டு, நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, சுண்ணாம்பு இடிப்பார் பாட்டு, கொல்லன் பாட்டு என நமது நாட்டார் இசையில் எத்துனை வகையான பாடல்கள்! இவை அனைத்துமே திரையிசையில் எடுத்தாளப்பட்டனவா என்றால் இல்லை என்பதே உண்மை. பெரும் வெற்றிபெறும் சில நாட்டார் பாடல்களின் வடிவங்களை ஒட்டியும் தழுவியும் திரையிசை தனது வணிக வெற்றிக்காக அவற்றை வெளிப்படுத்திச் சென்றிருக்கிறது.
அதேபோல தமிழகத்துக்கு வெளியே கவனம்பெற்ற மக்கள் இசையையும் தமிழ் திரையிசை மோந்து பார்த்திருக்கிறது. அவற்றில் ஒன்று சிலோன் பைலா என்ற நாட்டார் இசை. உழைக்கும் மக்களால் பாடப்பட்டுவந்த அந்த இசை பின்னர் மேட்டுக்குடி மக்களின் திருமணம் உள்ளிட்ட சுப வைபவ நிகழ்வுகளில் நடனமாடப் பாடப்படும் இசையாக ஏற்றம்பெற்றது. சமீபத்தில் மறைந்த இலங்கையின் பாப்பிசைக் கலைஞர் சிலோன் மனோகர் வழியே தமிழகத்திலும் பிரபலமான சிலோன் பைலா பாடல்..
‘சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா
மாலு மாலு சுராங்கனிகா மாலு கெனவா…’
அந்தப் பாடல் தமிழ் சினிமாவில் எடுத்தாளப்பட்டபின் பல படங்களில் சிலோன் பைலா இடம்பெற்றாலும் அதனால் நீடிக்க முடியவில்லை.
‘ராப்’பும் கானாவும்
ஆனால், ஆப்பிரிக்க கறுப்பினச் சகோதரர்களால் இசைக்கப்பட்டு அமெரிக்க கறுப்பினச் சகோதரர்களால் வளர்க்கப்பட்ட ராப் இசையும் எளிய மக்களின் இசை வடிவமே! கண்டங்கள் கடந்து காலம் கடந்து இன்று உலகம் முழுவதும் பல்வேறு மொழிபேசும் மக்களால் பல்வேறு மொழிகளில் இசைக்கப்படுகிறது ராப். திரையிலும் தனியிசைச் சந்தையிலும் ராப் தன்னைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. ராப் இசையை உலகமே
கொண்டாடிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் நம்மிடம் ராப் இசையை விஞ்சக்கூடிய ஒரு மக்களின் இசை இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அதுதான் கானா. வடசென்னையில் வாழும் உழைக்கும் மக்களால், ஒடுக்கப்பட்ட மக்களின் வட்டார வாழ்வியல் வழியே பிறந்ததுதான் கானா. மரணம் வருந்துவதற்கு மட்டுமே அன்று, வாழ்ந்து முடிந்து மரணத்தை ருசித்துவிட்ட மனிதனின் சாதனைகளைப் பெருமையுடன் எண்ணிப்பார்க்கும் ஒன்று என மரணத்தை ஒரு கொண்டாட்டமாகப் பார்க்கும் இசையாக விளங்கிவந்த கானா இன்று தன் எல்லைகளை விரித்துக்கொண்டிருக்கிறது.
இன்று மரணத்துக்கு மட்டுமே இசைக்கப்படுவதில்லை கானா. காதல், கலவி, கடல் வாழ்க்கை, அரசியல் தொடங்கி விழிப்புணர்வுக் கருத்துகள்வரை கானாவில் துள்ளும் கருத்துகள் ஏராளம்.
மொழியுடன் மல்லுக்கட்டாமல் எளிய எதுகையும் மோனையும் வால்பிடிக்க வரிகளின் இறுதிச்சொற்களில் ஒலி ஒத்திசைவைக்கொண்டுவரும் இயைபுத் தொடையும் கானா பாடல்களின் தாள நயத்தைத் தாங்கிப்பிடிக்கும் அம்சங்கள். வாழும் வட்டாரத்தில் புழங்கும் எளிய சொற்களைக் கொண்டே இந்தப் பாடல்களை இட்டுக்கட்டி எழுதிவிட ஒரு கானா பாடகனால் இயலும். கானா பாடகன் வெறும் பாடகன் மட்டுமே அல்ல, அவன் ஒரு வகையில் கம்போஸர், இன்னொரு வகையில் கவிஞன். கானா பாடல்களில் இருக்கும் இந்த எளிய மொழி விளையாட்டு இன்று உருவானது அல்ல…
நந்தவனத்திலோர் ஆண்டி - அவன்
நாலாறுமாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி
- போன்ற பழந்தமிழ் பாடல்களிலேயே மக்கள் கவிஞர்களால் எழுதப்பட்டு இசைக்கப்பட்டிருக்கிறது. கானாவின் இந்த எளிய வெகுஜனத் தன்மையைத் திரையிசை வழியே தமிழ் மக்களிடம் பரவலாக்கிய பெருமை இசையமைப்பாளர் தேவாவைச் சேரும். ஆனால் கானா உலக நாதன் பாடி, மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் இடம்பெற்ற..
‘வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்..
சென்னாக்குன்னி கூட்டமெல்லாம் ஊர்வோலம்’
- என்ற பாடல் கானாவுக்கு இன்றுவரை தமிழ் சினிமாவில் தனியிடத்தைப் பெற்றுத் தந்துவிட்டது. இந்தப் பாடலை உலகநாதன் இசைக்காத நாடே இல்லை என்று கூறலாம்.
-அவருக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்த பல கானா கலைஞர்கள் இன்று திரையில் செல்வாக்குடன் வலம் வருகிறார்கள். ராப் இசையைவிட மேலான சொல்லிசை கானா என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனால், ராப் இசையைப் போல் உலகின் காதுகளில் அதை நம்மால் ஒலிக்கச்செய்ய முடியவில்லையே! ராப் இசையைப் போல அது சர்வதேசப்படுத்தப்படவில்லை என்பதுதான் முதன்மையான காரணம்.
உலகப் பொதுமொழி
பாப் என்றாலும் ராப் என்றாலும் அது கண்டங்கள் கடந்து வந்துசேர்ந்திருப்பதற்கு அதன் இசை வடிவமும் அதிலிருக்கும் துள்ளல் தன்மையும் மட்டுமே காரணமல்ல. பாப்பிலும் ராப்பிலும் இசைக்கப்படும் மொழி இன்று உலகமே பேசும் பொதுமொழியாக அசுர வளர்ச்சியைக் கண்டிருக்கும் ஆங்கிலம். மொழியைச் சார்ந்து வாழும் கலை இசையல்ல என்று நாம் வாதிடலாம். அது வாத்திய இசைக்குப் பொருந்தும். ஆனால், வெகுமக்களின் ஆதரவைப் பெறும் புகழ்பெற்ற இசையொன்றில் இசைக்கப்படும் மொழி ஒரு வட்டார மொழியாக மட்டுமே இருந்தால் அது சர்வதேசத்தைச் சென்று அடைய முடியாது என்று அழுத்தமாக நம்புகிறேன்.
அதனால்தான் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ’பிரே ஃபார் மை பிரதர்’ போன்ற தனியிசை ஆல்பங்களுக்கு ஆங்கிலத்தை ஊடக மொழியாகத் தேர்ந்தெடுத்தார். நம் மொழியைப் பெருமைப்படுத்த அதே பாடலைத் தமிழில் இசைப்பதும் அவசியம். ஆனால் வெகுமக்களை எளிதில் சென்றடையும் கானா போன்ற வட்டார இசையை ஆங்கிலத்திலும் முயலும்போது அதன் பரவல் நமக்குப் பெருமையைக் கொண்டுவந்து சேர்க்கும். நம் கலைஞர்கள் பலருக்கு உலக அரங்கில் வாழ்வளிக்கும் என்கிறேன்.
திரையிசைப் பணிகள், விளம்பர ஜிங்கிள் இசையமைப்பது ஆகியவற்றுக்கு அப்பால் தனியிசையில் நான் கடந்து வந்திருக்கும் பயணம் எனக்கே மலைப்பைத் தருகிறது. ‘உயிர்விடும் மூச்சு’ என்ற தலைப்பில் கவிஞர் அறிவுமதி எழுதி நான் இசையமைத்தேன். அந்த ஆல்பம் வெளியான சில மாதங்களில் காஞ்சிபுரத்திலிருந்து எனக்கொரு தொலைபேசி அழைப்பு… அந்த அழைப்பின் மூலம் இசைத்துறைக்கு வந்த பயனையும் நிறைவையும் பெற்றதாக உணர்ந்தேன். அவர் அப்படி என்ன பேசினார்.. அடுத்துவாரம் பகிர்கிறேன்...
தொடர்புக்கு tajnoormd@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT