Last Updated : 30 Mar, 2018 10:12 AM

 

Published : 30 Mar 2018 10:12 AM
Last Updated : 30 Mar 2018 10:12 AM

தரணி ஆளும் கணினி இசை 25: காஞ்சியிலிருந்து கேட்ட குரல்!

தனியிசை முயற்சிகளில் பாப், ராப் என எதுவாக இருந்தாலும் ஆல்பத்தில் இடம்பெறும் பாடல்களில் ஒன்றையாவது மியூசிக் வீடியோவாக வெளியிடும்போது அது எளிதாக வெற்றிபெற்றுவிடுகிறது. ஏ.ஆர்.ரஹ்மானையே எடுத்துக்கொள்ளுங்கள். அவர் வெளியிட்ட ‘வந்தே மாதரம்’ ஆல்பத்துக்கு இயக்குநர் பரத் பாலா காட்சி வடிவம் தந்ததும் அது சர்வதேச அளவில் வெற்றிபெற்ற இசைத்தொகுப்பாக மாறியதும் உங்களுக்குத் தெரியும்.

“ இனி உலகை ஆளப்போவது வீடியோக்கள்தான்” என்று 15 வருடங்களுக்கு முன்பே ரஹ்மான் என்னிடம் சொன்னார். இன்று அதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையாகவே தற்போது உலகை ஆளும் வீடியோக்களில் மியூசிக் வீடியோக்களின் ஆதிக்கம் முன்னால் நிற்கிறது.

அர்ப்பணிக்கப்பட்ட தொலைக்காட்சிகள்

இந்தியத் திறமையான அலிஷா 1995-ல் தனது ‘மேட் இன் இந்தியா’ மியூசிக் வீடியோ மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். அதேபோல் இந்தியத் தனியிசை உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, விற்பனையிலும் சாதனை படைத்த நஸ்யா ஹஸேனின் ‘டிஸ்கோ தீவானே’, ‘யங் தராங்’ ஆகிய இந்திய பாப் பாடல்களை மியூசிக் வீடியோவாகப் பார்த்த தலைமுறை இன்னும் இசை வடிவிலும் காட்சி வடிவிலும் அவற்றை நினைவில் வைத்திருக்கிறது. தமிழில் மியூசிக் வீடியோக்கள் பிரபலமாகும் முன் முதன்முதலில் காட்சி வடிவம் தரப்பட்டு புகழ்பெற்ற ஒரு தமிழ் பாப் பாடல் மால்குடி சுபா பாடிய ‘வால்பாற வட்டப்பாற’.

ஒரு குறும்பட வடிவில் கதை கூறும் உத்தியைக் கையாண்டு படமாக்கப்பட்டிருந்த அந்த ஆல்பத்தின் மியூசிக் வீடியோவுக்கு தனியார் தொலைக்காட்சி ஒன்று முதன்முதலில் இடம் தந்தது. அதன்பிறகு அந்தப் பாடலை மற்றத் தொலைக்காட்சிகளும் கொண்டாட ஆரம்பித்தன. அதேபோலதனியார் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருந்த சமயத்தில் இசைக்கென்றே தொடங்கப்பட்ட எஸ்.எஸ்.மியூசிக் சேனல் தமிழ் பாப் இசை வீடியோக்களுக்கு இடங்கொடுத்தது. அதே காலகட்டத்தில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தனியிசைக்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட எம்.டி.வி, ‘வி’ சேனல் உட்பட 50-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் இயங்கத் தொடங்கிவிட்டன.

திறமைகளுக்கான மேடை

தனியிசையைக் கொண்டாட அமெரிக்க, ஐரோப்பியர்கள் இசைத் தொலைக்காட்சிகளுடன் நிற்கவில்லை. அதை ஆராதிக்கவும் அத்துறையில் துளிர்விடும் புதிய திறமைகளை வளர்த்தெடுக்கவும் ஆண்டு முழுவதும் பிரம்மாண்ட சர்வதேச இசைத் திருவிழாக்களை (International music festivals) நடத்துகிறார்கள். உதாரணத்துக்கு அமெரிக்காவை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே பதினைந்துக்கும் அதிகமான தனியிசைத் திருவிழாக்கள் பிரபலமாக இருக்கின்றன. ஒவ்வொரு இசைத் திருவிழாவிலும் 50 ஆயிரம் முதல் இரண்டு லட்சம் ரசிகர்கள் வரை திரண்டு வந்து லைவ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் புகழ்பெற்று விளங்கும் குவாசெல்லா (Coachella) பாப்பிசைத் திருவிழாவில் ஆண்டுதோறும் 2.5 லட்சம் ரசிகர்கள் ஒரேநேரத்தில் திரண்டு வந்து தனியிசையை ரசித்துச் செல்கிறார்கள். ஓவியம், சிற்பம், நடனம் என மற்ற கலைகளும் அதில் இடம்பெற்றாலும் வளர்ந்துவரும் தனியிசைக் கலைஞர்கள், பிரபலமான பாப்பிசை மற்றும் வாத்திய இசைக் கலைஞர்கள் என அனைவருக்கும் இடமளிக்கும் குவாசெல்லா இசைவிழாவில் நமது பெருமைமிகு இசைக் கலைஞர்களில் ஒருவரான சிதார் ரவிஷங்கர் தொடர்ந்து தன் விரல்களின் வித்தகத்தை அங்கே காட்டி வியக்க வைத்திருக்கிறார். குவாசெல்லா போன்ற ஒரே ஒரு சர்வதேச தனியிசைத் திருவிழா கூட நம் வசம் இல்லை.

நமக்குத் தெரிந்ததெல்லாம் சர்வதேசப் படவிழாக்கள் மட்டும்தான். இப்படிப்பட்டதொரு தமிழ்த் தனியிசைத் திருவிழாவை தமிழகத்தில் நடத்தவேண்டும் என்பது என் கனவு. அதில் புதியவர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த அதிக இடமளிக்க வேண்டும் என்பது கொள்கை. தற்போது அதற்கான திட்டமிடலிலும் இருந்துவருகிறேன். அதில் தமிழ் நாட்டார் இசை, தமிழ் வாத்திய இசைச் சங்கமம், தமிழிசை, தமிழ் பக்கீர்கள் நம்மத்தியில் எடுத்து வந்திருக்கும் சூஃபி இசை, தமிழ் ஓதுவார்களை மேடையேற்றி தேவாரம், திருவாசக இசைப்பொழிவு, தமிழ் பாப்பிசை, தமிழ் ராப், நமது பெருமைமிகு கானா, மற்ற இந்திய நாட்டார் இசைகள் ஆகியவற்றுக்கு மேடை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்த இசைவிழாவின் உத்தேசமான உள்ளடக்கம்.

காஞ்சியிலிருந்து கண்ணீருடன்…

இந்த இடத்தில் தனியிசை மீதான எனது ஈடுபாட்டைப் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். திரைப்படங்களுக்கும் விளம்பர ஜிங்கிள்களுக்கும் நான் இசையமைத்துக் கொண்டிருந்தாலும் தனியிசை மீது தொடக்கம் முதலே எனக்கு ஈடுபாடு உண்டு. முதன்முதலில் நான் இசையமைத்த தனியிசை ஆல்பம் வழியாக எனக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பு, இசைத்துறைக்கு வந்த முழுப் பயனையும் நிறைவையும் பெற்றதாக என்னை உணர வைத்தது.. கருவிலிருக்கும் ஒரு பெண் குழந்தை தனது தந்தையிடமும் தாயிடமும் பேசுவதுபோன்ற அறிவுமதியின் உயிரை உருக்கும் கவிதை வரிகள் அவை.

நான் அமைத்த பின்னணி இசையுடன் ஒலித்த அந்தக் கவிதை ஒரு பெண் குழந்தையின் குரலிலேயே ஒலிக்கும். ‘உயிர்விடும் மூச்சு’ என்ற அந்த ஆல்பத்தை கேட்கும் யாரும் அழாமல் இருக்க முடியாது. இந்த ஆல்பத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட சில தனியார் தொண்டு நிறுவனங்கள், அதை ஆயிரக்கணக்கான பிரதிகள் எடுத்து காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், ராமநாதபுரம், உசிலம்பட்டி உட்பட பெண்சிசுக்கொலை மறைமுகமாக நடந்துவந்த மாவட்டங்களில் விநியோகித்தார்கள்.

அந்த ஆல்பம் விநியோகிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கழித்து காஞ்சிபுரத்திலிருந்து ஒரு போன். அழைப்பின் மறுமுனையில் ஒரு ஆண்குரல். “ சார்… வணக்கம் நீங்க நல்லா இருக்கனும்..” என்று கூறிவிட்டுப் பேசினார். “ மூணாவதாவும் எனக்குப் பெண் குழந்தை பொறந்து ரெண்டுநாள் ஆகுது சார். அத ஐந்தாம் நாள் கொன்னுடனும்ன்னு முடிவு பண்ணிட்டேன். அப்போதான் டீக்கடையில ‘உயிர் விடும் மூச்சு’ கேட்டேன். அதைக் கேட்டு முடிச்சதுமே இனி எத்தனை பெண்குழந்த பொறந்தாலும் வளர்க்கணும்ன்னு முடிவு பண்ணிட்டேன். இப்போ என் மக முகத்தைப் பார்த்தாலே பசி மறந்துபோயிடுது.

உங்கள நேராப் பார்த்து நன்றி சொல்லனும் சார் ” என்று அந்த தந்தை சொல்லிக்கொண்டிருந்தபோது என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. அவர் அதைக் கேட்ட டீக்கடையில் அந்த ஆல்பத்தின் சிடி கவரை வாங்கிப் பார்த்து அதிலிருந்த எனது போன் நம்பரைக் கண்டுபிடித்து ஒரு சாமானிய கிராமத்து மனிதர் பேசியது தனியிசையின் சக்தியை எனக்கு உணர்த்தியது.

இந்த அனுபவத்துக்குப்பின் தனியிசையில் இன்னும் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று முடிவு செய்தேன். தற்போது அறிவுமதி வரிகளில் எனது இசையில் ’தாய்பால்’ என்ற ஆல்பமும் விரைவில் வெளிவர இருக்கிறது. கவிதையுலகில் சாதனைகள் பல படைத்த கவிக்கோ அப்துல் ரகுமான் “அம்மி கொத்த சிற்பி தேவையில்லை” என்று கூறி திரைப்படங்களுக்குப் பாடல் எழுத மறுத்துவிட்டவர்.

அவர் என்னை அழைத்தார், “என்னை வந்துபார். இசைக்காகவே சில பாடல்கள் எழுதியிருக்கிறேன்” என்றார். அவருக்கு எப்படித் தனியிசை மீது ஆர்வம்? அடுத்த வாரம் பகிர்கிறேன்.

தொடர்புக்கு: tajnoormd@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x