Published : 09 Mar 2018 10:56 AM
Last Updated : 09 Mar 2018 10:56 AM
ஆ
ண் சிந்தனையின் வழியாக சினிமா காலங்காலமாக உருவாக்கப்பட்டுவருவதைப் போலவே திரை விமர்சனமும் ஆண் பார்வையில்தான் நெடுங்காலமாக எழுதப்பட்டுவருகிறது. பெண் திரைப்பார்வை என்று ஒன்று உள்ளதா, அப்படியே இருந்தாலும் அவசியமா என்ற கேள்விகள் எழலாம். பெண் பார்வைக்கும் பெண்ணியத்துக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்றால், பெண் பார்வை என்று ஒன்று உள்ளது, அது அவசியம் என்பதை முன்னிறுத்தியதே பெண்ணியம்தான். 1960-களிலும் 70-களிலும் மகளிரியல் என்ற கல்விப் புலமும் இரண்டாம் பெண்ணிய அலையும் தோன்றியபோதே பெண்ணியத் திரைக் கருத்தியலும் உருவானது.
நிச்சயம் வித்தியாசமானது
பெண் குறித்த திரைப்படைப்புகளை, பெண் இயக்குநர்களின் சினிமாக்களைப் பற்றி பெண் பார்வையில் விமர்சிப்பது மட்டுமல்லாமல் அனைத்து விதமான சினிமாக்களிலும் பெண் பார்வைக்கான இடம் அவசியமே என்று அது வலியுறுத்துகிறது. இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய நிலை கோடம்பாக்கத்தில் மட்டுமல்ல; ஹாலிவுட்டிலும் இன்றுவரை நீடிக்கிறது.
“ஆண்களைவிடப் பெண்களிடம் வித்தியாசமான பார்வை உண்டு. அது ஆண் பார்வையைவிட உயர்ந்ததும் அல்ல, தாழ்ந்ததும் அல்ல. வித்தியாசமானது அவ்வளவே. எங்களுக்கே உரிய லென்ஸால் நாங்கள் உலகைக் காண்கிறோம். அதுவே, எங்களுடைய பார்வையை அத்தியாவசியமாக்குகிறது” என்கிறார் ஹாலிவுட் திரையுலகில் பாலினச் சமத்துவம் கோரி, ‘பெண்கள் மற்றும் ஹாலிவுட்’ இணையதளத்தை நடத்திவரும் அமெரிக்க எழுத்தாளர் மெலிசா சில்வர்ஸ்டைன்.
இந்தப் புரிதலோடு பெண்களும் திரைப்படங்களும் என்ற தளத்தில் பெண் பார்வையில் வெகுஜனத் திரைப்படங்களை விமர்சிப்பது ஒரு வகை. பெண்களைப் பற்றிய திரைப்படங்களை விமர்சனப் பார்வையில் அலசுவது வேறொரு வகை.
அதன் முதல் கட்டமாக, கதாநாயகனோடு மரத்தைச் சுற்றிவரும், பெயரளவில் திரையில் தோன்றி மறையும், அநேகக் காட்சிகளில் இடம்பெற்றாலும் செயலற்ற நிலையில் இருக்கும், பனி மலையில் ஜெர்க்கின் அணிந்த கதாநாயகனோடு குட்டைப் பாவாடை போட்டு டூயட் ஆடும் பொம்மையாக உலாவரும் பெண் சித்தரிப்புகள் மட்டுமல்லாமல் அவற்றைக் குறித்த விமர்சனமும் கெட்டித்தட்டிபோனதால் இரண்டையும் மூட்டைகட்டிவைத்துவிடுவோம்.
மஞ்சுவின் சாயல்
மரபுகளை உடைக்கும் பெண் கதாபாத்திரங்களை அவ்வப்போது தமிழ் சினிமா உருவாக்கத் தவறியதில்லை. தமிழ் சினிமாவின் நவீனப் பெண் (தோற்றத்தில் மட்டுமல்ல சிந்தனையிலும்) பாத்திரத்துக்கான முன்னோடியாக இயக்குநர் ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்’ (1978) மஞ்சு நிற்கிறார். போலித்தனங்களைத் துச்சமாகக் கருதும் மஞ்சு போன்ற பெண்களைப் பொதுச் சமூகம் கண்ணியமாக நடத்த மறுக்கிறது.
அதேவேளையில் மஞ்சுகளைக் கொண்டாட அவ்வப்போது கலை மனம் துடிக்கிறது. வேண்டாவெறுப்போடு தன்னைச் சுற்றி நிகழ்பவற்றைக் கேலியும் கிண்டலுமாக அணுகும் மஞ்சுவின் சாயலை ‘இறைவி’ மலர் (பூஜா), ‘தரமணி’ அல்தியா (ஆண்ட்ரியா), ‘ஓகே கண்மணி’ தாரா (நித்யாமேனன்) ஆகியோரிடம் காண முடிகிறது.
காதலித்த கணவர் திடீரென இறந்துபோன பிறகு திருமணத்தின் மீது நம்பிக்கை இழக்கும் மலர் மைக்கேல்மீது (விஜய்சேதுபதி) தனக்குத் தற்போது இருப்பது காமம் மட்டுமே, காதல் அல்ல என வெளிப்படையாகப் பேசும் பெண். காதலையும் கல்யாணத்தையும் புறக்கணிப்பவர்.
தன்னுடைய பெற்றோரின் கசப்பான திருமண வாழ்வைப் பார்த்துக் கல்யாணம் என்பதே கெட்ட வார்த்தை என்று முடிவுசெய்தவள் தாரா. ‘பேப்பரில் ரெஜிஸ்டர் பண்ணிட்டா எல்லாம் சரியா?’ எனக் கேள்விகேட்பவர். தன்னுடைய வாழ்க்கையைத் தானே வடிவமைக்கும் தாகம் கொண்ட கட்டிடக் கலை நிபுணரான அவள் பாலியல் சுதந்திரத்துக்கு வழிவிடும் மும்பை நகரில் திருமணம் செய்துகொள்ளாமல் காதலனுடன் இணைந்து வாழத் தொடங்குகிறாள்.
அதேபோல ஐ.டி. துறையில் உயர் சம்பளம் வாங்கும் சுயசார்புமிக்க ஆங்கிலோ இந்தியப் பெண் அல்தியா. கணவர் தன்பாலினத்தவர் எனத் தெரிந்த பிறகு அவரைக் காப்பாற்றத் தன்னைத்தானே ‘பிட்ச்’ எனச் சொல்லச் சமூகத்துக்கு அனுமதி வழங்கியவர். வழிப்போக்கனை வாழ்க்கை துணையாக ஏற்று தன் மகனுடன் தன்னுடைய அடுக்குமாடி வீட்டிலேயே வாழத் துணிபவர்.
இந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியவர்கள் அதை ஏற்று நடித்த நடிகைகளே. ஆனால், பாலியல் சுதந்திரம் கோருவதாலேயே மலர், தாரா, அல்தியா ஆகிய மூவரும் பாதாளத்தில் விழுந்து பரிதவிப்பதாக கார்த்திக் சுப்புராஜும் ராமும் மணிரத்னமும் நிறுவியிருக்கிறார்கள். சுயசிந்தனை கொண்ட பெண்களாகப் புனையப்படும் இவர்கள் மூவருமே படுதோல்வி அடைகிறார்கள்.
பெண்ணின் வாழ் உலகை, அகவுலகைத் திரைச் சித்திரமாகப் படைக்கும் முயற்சியில் பெண்ணின் பேசப்படாத சில பக்கங்களைச் சில படங்கள் மேலோட்டமாகப் புரட்டியுள்ளன. நடைமுறையில் உழன்று தன்னுடைய தனித்துவத்தை இழக்கும் நடுத்தர வயது வசந்தி மீண்டும் தன்னுள் ஒளிந்திருக்கும் ஆற்றலை அடையாளம் காண ‘36 வயதினிலே’ முயன்றது.
மூன்று பெண்கள்… அவர்களின் திருமணங்கள்… எனத் திருமணச் சந்தைக்குத் தயார்படுத்தப்படும் பெண்களின் நிலையை ‘ஒரு நாள் கூத்து’ விமர்சித்தது. தியேட்டரில் ஆடி, பாடி, கொண்டாடி சினிமா பார்ப்பது என்பது ஆண்களின் சராசரி வாழ்கையில் சகஜமான ஒன்று.
ஆனால், அது பெண்களைப் பொறுத்தவரை வாழ்நாள் கனவாக, ஏக்கமாக எஞ்சி நிற்கும் நிலையில்தான் நம் சமூகம் உள்ளது என்பதைச் சுவாரசியமான காட்சி மொழியில் பதிவுசெய்த படம் இயக்குநர் பிரம்மாவின் ‘மகளிர் மட்டும்’.
ஆண்-பெண் உறவுச் சிக்கலை ‘காற்று வெளியிடை’யில் களமாடினார் மணிரத்னம். அருகில் இருந்தபோதெல்லாம் நோகடித்த காதலியை எப்படியாவது சந்தித்து மன்னிப்பு கேட்கத் துடிக்கும் காதலனின் கதை. ஆனால், அன்பென்ற மழையில் தன்னை நனைத்த காதல் தேவதையிடம் முழுவதுமாக சரணாகதி அடைய அவனைக் கடைசிவரை அனுமதிக்கவில்லை மணிரத்னம்.
நுண்ணிய பதிவு
தனது மூன்றாண்டு கால உழைப்பை ‘இறுதிச் சுற்று’ படம் மூலம் நாக்அவுட் முத்திரையாகப் பதித்துக்காட்டியவர் இயக்குநர் சுதா கொங்கரா. குப்பத்து இளம்பெண்ணை உலகக் குத்துச் சண்டை வீராங்கனையாக்கும் திரைவடிவில் ரித்திகா சிங் என்ற திறமைசாலியை அடையாளம் கண்டது இப்படம். தன் தங்கையே தனக்குப் போட்டியாளராக வந்துவிட்டாலும் அவளுடைய வலியைக் கண்டு துடிக்கும் அக்கா, மதியின் வெற்றி ஒட்டுமொத்தப் பெண்களின் வெற்றி என்பதைக் காட்சிப்படுத்தும் விதமாகத் தங்களுடைய முகத்திரையை விலக்கி எழுந்து நிற்கும் பர்தா அணிந்த இரு இளம் பெண்கள் என மனதில் பதிந்த காட்சிகள் இறுதிச் சுற்றில் ஏராளம்.
காலங்காலமாக ஆண்கள் ஏற்ற கம்பீரமான கதாபாத்திரங்களைப் பெண்களுக்குச் சூட்டி அழகு பார்த்தவை ‘அறம்’, ‘நாச்சியார்’. அதிகாரம் படைத்த பெண், சமூக நீதியை நிலைநாட்டுவார் எனக் காட்ட முயன்ற திரைவடிவங்கள் இவை. பல மாஸ் ஹீரோக்கள் நடிக்கத் தயங்கிய நிலையில் ‘கலெக்டர் மதிவதனி’ அவதாரம் எடுத்தார் நயன்தாரா. மறுபுறம் பாலாவின் நாச்சியார் போலீஸ் அராஜகத்தை ஆராதிக்கும் அதிகாரத் துஷ்பிரயோகத்தின் பிரதிநிதியாகித் தோற்றுப்போய் நிற்கிறார்.
இதற்கிடையில் நாயகி (த்ரிஷா), பாகமதி (அனுஷ்கா) போன்ற திகில் படங்களும் பெண் மையக் கதாபாத்திரங்களைப் புனைந்தன. ஆனால், எப்போதுமே பெண்ணைத் தானே பேய் பிடித்தாட்டும்! அந்த வேலையை மட்டுமே இந்தப் படங்களும் செய்தன. மறுமுனையில் தனித்து வாழும் தாய்களின் வாழ்க்கைப் போராட்டங்களைத் தன் வழியாகப் பிரதிபலித்திருந்தார் ‘மாயா’வின் அப்சரா (நயன்தாரா). பரிதவித்து நிர்க்கதியாகி விழும் அப்சராவைத் தாங்கிப் பிடிக்கும்போது ஏதோ ஒரு கணத்தில் பெண்கள் அனைவரும் மாயாவிடம் சரணாகதி அடைந்தோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT