Published : 30 Mar 2018 10:12 AM
Last Updated : 30 Mar 2018 10:12 AM
ச
மூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத, புறக்கணிப்புக்கு ஆளாகிற மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டிருப்பது தற்செயல் நிகழ்வா அல்லது சமூக மாற்றத்துக்கான முன்னெடுப்புகளுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமா எனத் தெரியவில்லை. தன்பால் உறவை மையப்படுத்தி இத்தாலி இயக்குநர் லூகா குவாடனீனோ இயக்கிய ‘கால் மீ பை யுவர் நேம்’ (Call me by your name) படம், சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறது.
ஆதியிலே காதல் இருந்தது
வடக்கு இத்தாலியில் உள்ள சிறு கிராமத்தில் 1980-களில் நடக்கிறது கதை. ஏலியோ, இசையில் ஆர்வம் கொண்ட 17 வயது இளைஞன். கோடை விடுமுறையைக் கழிக்க ஏலியோவின் வீட்டுக்கு வருகிறான் 24 வயது ஆலிவர். இருவருக்கும் ஏற்படுகிற ஈர்ப்பு ஒவ்வொரு காட்சியிலும் வெவ்வேறு வண்ணமும் வடிவமும் கொள்கிறது. பழ மரங்கள் நிறைந்த தோட்டம், பளிங்கு போன்ற நீர் நிலைகள், பசுமை போர்த்திய மலைகள் என இயற்கையின் ஆதித் தன்மையைப் படம் நெடுகக் காட்சிப்படுத்தியிருப்பது, தன்பால் ஈர்ப்பும் அப்படியானது என்பதை உணர்த்துகிறது.
சமூகத்தின் வெவ்வேறு படிநிலைகளில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட ஆணும் பெண்ணும் காதலித்தால் ஆணவக் கொலைக்குப் பலியாகிற நம் சமூகத்தில் திருநங்கைகள், தன்பால் ஈர்ப்பாளர்கள் ஆகியோரது காதல், கலாச்சார சீர்கேடாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், ஏலியோவுக்கும் ஆலிவருக்குமான ஈர்ப்பை ‘முதல் காதல்’ என்று ஏலியோவின் தந்தை சொல்கிறபோது நாம் அடைய வேண்டிய கலாச்சார உயரம் புலனாகிறது.
இதுவும் இயற்கையே
ஏலியோவும் ஆலிவரும் தயக்கத்தையும் மனத்தடையையும் கடந்துதான் தங்கள் நேசத்தை வெளிப்படுத்திக்கொள்வார்கள். பிறகு தற்காலிகப் பிரிவுகூட இருவரையும் பாதிக்கும். காலை உணவுக்குப் பிறகு மாயமாகிவிடும் ஆலிவரை ஏலியோ தேடியபடியே இருப்பதும் தன் தோழியோடு தனித்திருக்கும் வேளையிலும் ஆலிவரைச் சந்திக்கும் நேரத்துக்காகக் கைக்கடிகாரத்தைப் பார்ப்பதும் இருவருக்கும் இடையேயான காதலை அதன் ஆழத்தை உணர்த்துகின்றன. பிணைப்பு வலுப்படுகிற ஒரு கட்டத்தில், “உன் பெயரால் என்னைக் கூப்பிடு, என் பெயர் சொல்லி உன்னை அழைக்கிறேன்” என்பான் ஆலிவர். இருவர் ஒருவராகிப் போகும் காதலின் இறுதிநிலைக்கு இருவரும் ஆட்படுகிறார்கள். பொதுவாகத் தன்பால் ஈர்ப்பாளர்கள் அருவருக்கத்தக்கவர்களாகவும் இளமைப் பாய்ச்சலுக்கு வடிகால் தேடுகிறவர்களாகவும் வன்முறையில் விருப்பம் கொண்டவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுவரும் நிலையில் ஏலியோ – ஆலிவர் உறவு, உண்மைக்கு நெருக்கமான சிலவற்றை உணர்த்துகிறது. ஆண் – பெண் காதலில் இருக்கிற அதீதமும் தேடலும் தன்பால் ஈர்ப்பிலும் உண்டு எனச் சொல்லியிருப்பதன் மூலம் தன்பால் ஈர்ப்பு இயற்கைக்கு எதிரானது என்ற பிற்போக்கு சிந்தனையை இயக்குநர் கேள்விக்குள்ளாக் கியிருக்கிறார்.
சமூக அங்கீகாரமே தேவை
சிலவற்றை அறிவாலும் அறிவியலாலும் பகுத்தாராய முடியாது. அவற்றை அந்தக் கணத்தின் வலியோடும் மகிழ்வோடும் ஏற்றுக்கொண்டு அனுபவிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இயக்குநர் சொல்வதும் இதைத்தான். தன்பால் ஈர்ப்பு என்பது காலம் முழுக்கத் தொடரவோ அல்லது இடையில் மறையவோ கூடும் என்பதற்கும் ஏலியோவின் தந்தையே சாட்சி. பாலியல் சிறுபான்மையினர், தன்பால் உறவாளர்கள் போன்றோரின் தேவையெல்லாம் குடும்பம், சமூகம் ஆகியவற்றின் ஏற்றுக்கொள்ளுதலே. “அம்மாவுக்கு இது தெரியுமா?” என ஏலியோ பதற்றத்துடன் தன் தந்தையிடம் கேட்பதற்கும், “நம்மைப் பற்றி என் பெற்றோருக்குத் தெரியும்” என ஆசுவாசத்துடன் ஆலிவரிடம் சொல்வதற்குமான இடைவெளியில்தான் தன்பால் ஈர்ப்பாளர்களின் இருப்பும் காதலும் அடங்கியிருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT