Published : 02 Mar 2018 11:14 AM
Last Updated : 02 Mar 2018 11:14 AM
யா
ருமே சொல்ல யோசிக்கும் அல்லது கூச்சப்படும் ஒரு விஷயம், பாடல் வரியாக எழுதப்படும்போது அது சடாரென்ற கவன ஈர்ப்பாக மாறுகிறது. ‘கொலவெறி’ பாடல் உடனடியாக வெற்றிபெற்றதன் பின்னணியில் இருந்தது அதுபோன்ற ஈர்ப்பே. இப்படி அட்டென்ஷனைத் திருப்பினால் போதும் என்று எழுதப்படும் பாடல்கள் நிலைத்து நிற்காது. ஆனால், திரையிசை தொடங்கிய காலம் முதல், ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றும் ஆயுளுடன் எப்படி நிலைத்து நிற்க முடிகிறது! அந்தப் பாடல்களின் இசையைத் தாண்டி, வரிகளில் வெளிப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகள், பார்வையாளர்களின் உணர்ச்சிகளோடு தலைமுறைகள் கடந்து பொருந்திப்போகக்கூடியவையாக அவை இருக்கின்றன. அதுதான் அமரத்துவத்துக்குக் காரணம். முக்கியமாக, அவற்றில் வாழ்க்கையின் பொதுமை கவிதையாக வடிக்கப்பட்டிருந்தது. கண்ணதாசன் பாடல்களே இதற்கு உதாரணம்.
இரண்டு வகை இசையமைப்பு
இசையமைப்பாளர், பாடலாசிரியர் ஆகிய இரண்டு படைப்பாளிகளின் சரியான அலைவரிசையும் உயர்வான ரசனையும் கொண்ட கூட்டணியில்தான் அமரத்துவம் வாய்ந்த பாடல்கள் பிறக்கின்றன. ஒரு பாடலை உருவாக்க இன்று இருவித இசையமைப்பு முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. மெட்டை கம்போஸ் செய்துவிட்டு மெட்டுக்கு ஏற்ப வரிகளை எழுதுவது ஒரு விதம். இரண்டாவது, பாடலின் வரிகளை முதலில் எழுதிவிட்டு அதற்கு மெட்டு அமைப்பது. எனது முதல் இரண்டு படங்களுக்கு மெட்டு அமைத்தபின் வரிகள் எழுதப்பட்டன. அதன்பிறகு வரிகளுக்கு இசையமைக்கும் முறையை அதிகமாகக் கடைப்பிடிக்கிறேன்.
எழுதியபின் மெட்டமைக்கப்படும் பாடலில் கிடைக்கும் உணர்வு, மெட்டமைத்தபின் எழுதப்படும் பாடலில் கிடைப்பதில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. பாடலின் சூழலைக் கேட்டு முதலிலேயே வரிகளாக எழுதப்படும் பாடலுக்கு இசையமைப்பது கடினமான ஒன்றுதான். ஆனால், இயக்குநர் விவரிக்கும் சூழ்நிலையை உள்வாங்கி, அனுபவம் மிக்க கவிஞர் எழுதும்போது, இயக்குநர் எதிர்பார்த்ததைவிட வரிகள் சிறப்பாக வெளிப்பட்டுவிடும். இப்படி அனுபவம் மிக்க கவிஞரால் எழுதப்பட்ட பாடலை, இசையமைப்பாளர் எடுத்துப் படிக்கும்போதே அதில் ஒளிந்திருக்கும் பல மெட்டுகளை அவரால் கண்டுபிடிக்க முடியும். அவற்றில் எந்த மெட்டைப் பயன்படுத்தப்போகிறோம் என்பது இசையமைப்பாளருக்குச் சவாலாக மாறிவிடும்.
வளரும் பாடலாசிரியர்களும் மெட்டுக்கு முன்பே எழுதக்கூடியவர்கள்தான். அவர்களது வரிகளை எடுத்துப் படிக்கத் தொடங்கினால் பல்லவியுடனோ சரணத்தின் சில வரிகளுடனோ மெட்டு நின்றுவிடுவதை உணர்ந்திருக்கிறேன். கவிதை எழுதத் தெரிந்தால் மட்டும் திரைக்கான பாடலை எழுதிவிட முடியாது. கவிஞர்களின் வாசிப்பு, அவர்களின் எழுத்து, வாழ்வனுபவம், இசையமைப்பாளர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வந்திருக்கும் தொழில் அனுபவம் எல்லாம் சேர்ந்தே இது அமையும்.
மெட்டுக்கு முன்பாக எழுதப்படும் ஒரு பாடலின் வரிகளில் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளைச் சரியான வார்த்தைகளில் பல்லவி, சரணம் என்று நிரவி பாடலாசிரியர் எழுதுகிறார். இப்படி எழுதும்போது கதாபாத்திர உணர்ச்சி அல்லது காட்சியின் உணர்ச்சியை முதல் சரணத்திலேயே கொட்டித் தீர்த்துவிட மாட்டார். மூன்று சரணங்கள் என்றால் மூன்றிலும் உணர்ச்சியின் பயணம் சீராக நிரவப்பட்டிருக்கும். இந்த ஜாலத்தை அற்புதமாகக் கவிதை எழுதும் ஆற்றல் கொண்ட வளரும் கவிஞர்களிடம் எதிர்பார்ப்பது கடினம்.
பயிற்சியின் வலிமை
பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு தினசரி எனக்கு இரண்டு தொலைபேசி அழைப்புகளாவது வந்துவிடும். இவர்களின் தொடர்முயற்சி, தன்னம்பிக்கையைக் கண்டு என்னிடம் வருபவர்களுக்கு சூடான தேநீருடன் ஒரு பயிற்சியையும் கொடுப்பது எனது வழக்கம். நா.முத்துக்குமாரின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றை எடுத்து அவர்களிடம் கொடுத்து வெள்ளைத் தாளில் எழுதச் சொல்வேன். இப்படி எழுதும்போது அந்தப் பாடலில் வெளிப்பட்டிருக்கும் ‘சீர்கள்’ பற்றிய அறிவு அவர்களையும் அறியாமல் மனதுக்குள் பதியும்.
அதன்பிறகு நான் கொடுத்த பாடலில் இழையோடும் முதன்மையான ஒற்றை உணர்ச்சி எதுவென்பதைக் கண்டுபிடித்து அந்த உணர்ச்சியை உங்கள் வார்த்தைகளில் வெளிப்படுத்திப் பாடல் எழுதும்படி அவர்களைக் கேட்பேன். ஆனால், பலர் கட்டுரைபோல் எழுத முயல்கிறார்கள். இதில் உணர்ச்சி இருக்கும், வாசிக்க நன்றாக இருக்கும். ஆனால், மெட்டுக்கான சாளரம் திறக்காது. எனவே, திரும்பத் திரும்ப நா.முத்துக்குமாரின் பாடல்களை எழுதி பயிற்சி செய்து வந்து காட்டும்படி கூறுவேன். பொறுமையுடன் பயிற்சி செய்த பல புதிய இளைஞர்கள் இன்று திறமையாகப் பாடல்களை எழுதிக்கொண்டி ருக்கிறார்கள்.
மெட்டுக்குப் பாட்டு
மெட்டுக்கு வரிகளை எழுதும்போது புதியவர்கள் நிறையவே தடுமாறுகிறார்கள். மெட்டுக்கான ‘தத்தகார’த்தை முதலில் எழுதி, அவற்றின் அசைவுகளுக்குக் கச்சிதமாகப் பொருந்தும் விதமாக வார்த்தைகளை உட்கார வைக்க எழுதிப் பழகுவதுதான் தத்தகாரப் பயிற்சி. உதாரணத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘ நீதானே நீதானே’ பாடலை வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பாடலின் பல்லவியின் முதல் இரு வரிகளின் தத்தகாரம் இப்படி அமையும்
தானானே தானானே தன் தந்தானானே தானா
தனனா தனனா தனனே தனனா
இந்தத் தத்தகாரத்துக்கு பாடலாசிரியர்
நீதானே... நீதானே... என் நெஞ்சை தட்டும் சத்தம்....
அழகாய் உடைந்தேன்... நீயே அர்த்தம்....
என்று எழுதியிருக்கிறார். தத்தகாரத்தின் சீர்களில் உள்ள அசைவுகள் மீட்டர் பிசகாமல் உட்கார வேண்டியது முக்கியம். எனது அனுபவத்தில் மெட்டின் மீட்டருக்கு ஜெட் வேகத்தில் தரம் குறையாமல் பாடல் எழுதித்தரும் ஒரு பாடலாசிரியராக மறைந்த நா.முத்துக்குமாரைப் பார்க்கிறேன். ‘வம்சம்’ படத்தில் தொடங்கி எனது எல்லாப் படங்களிலும் பாடல்களை எழுதியிருக்கிறார். எனக்கு மெட்டையே கொடுத்துவிடுங்கள் என்பார்.
மெட்டின் தத்தக்காரத்தை ஒருமுறைதான் வாயில் முணுமுணுத்துப் பார்ப்பார். உடனே அவருக்கு வார்த்தைகள் ஊற்றெடுக்கத் தொடங்கிவிடும். அதிகபட்சம் 45 நிமிடத்துக்குள் முழுப்பாடலையும் முடித்துக்கொடுத்துவிடுவார். அப்படி அவர் தரும் பாடல் முழுமையான தரத்துடன் இருக்கும். சரணத்தின் கடைசி வரியைப் பல்லவியுடன் பாந்தமாக இணைத்துவிடும் ஆற்றல் அவருக்கே உரியது.
‘அடித்தள’மும் அனுபவமும்
‘எனது இசையமைப்பில் ‘அடித்தளம்’ என்ற ஒரு படம் வெளிவர இருக்கிறது. கட்டிடத் தொழிலாளர்களின் சொல்லப்படாத வாழ்க்கையின் ஒரு பகுதியைச் சொல்லவரும் படம். இந்தப் படத்துக்கு எல்லாப் பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதுகிறார் என்று முடிவான உடன், அவரையும் படத்தின் இயக்குநர் இளங்கண்ணன் காரில் அழைத்துக்கொண்டு ஊர் அடங்கியதும் இரவு 11 மணிக்கு கிழக்குக் கடற்கரை சாலையில் பயணிக்கத் தொடங்கினோம்.. குடியிருப்புகளைத் தாண்டியதும் கார் ஸ்டீரியோவில் முதல் மெட்டின் தத்தக்காரத்தை பிளே செய்தேன். அதைக் கேட்டுவிட்டு எழுத ஆரம்பித்தார்.
மரக்காணம் சென்று அடையும்போது மூன்று மெட்டுக்களுக்குப் பாடல் எழுதி விட்டார். அங்கிருந்து மீண்டும் சென்னைக்குத் திரும்பினோம். கோவளம் கடற்கரையை நெருங்கியபோது அதிகாலை 5 மணி. முத்தான அடுத்த இரண்டு பாடல்களையும் முடித்துவிட்டார். அதுதான் முத்துக்குமார். விரைவில் அந்தப் பாடல்களைக் கேட்பீர்கள். வாலி, வைரமுத்து, அறிவுமதி, கவிக்கோ அப்துல் ரகுமான் தொடங்கி இன்று எழுதுகிற புதியவர் வரை 50-க்கும் அதிகமான பாடலாசிரியர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன்.
ஆனால் நா. முத்துக்குமாரைப் போன்ற ஒரு அதிசயக் கவிஞனை நான் கண்டதில்லை என அவரை இந்தநேரத்தில் நினைவுகூர்கிறேன். இன்று பாடல்கள் அனைத்தும் ‘மாண்டேஜ் சாங்ஸ்’ ஆக ஏன் மாறிக்கொண்டிருக்கின்றன என ரசிகர்கள் கேட்கிறார்கள். அன்று படங்களில் இடம்பெற்ற கதைப் பாடல் இன்று தீம் இசை ‘பிட்’டுகளாக மாறிவிட்டன. காதல், வீரம், சோகம், துள்ளல், எள்ளல் என்று குறிப்பிட்ட உணர்வைச் சொன்ன பாடல்கள் என்னவாயின? என்றும் கேட்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் அடுத்தவாரம் பதில் தருகிறேன்.
தொடபுக்கு tajnoormd@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT