Last Updated : 16 Mar, 2018 11:50 AM

 

Published : 16 Mar 2018 11:50 AM
Last Updated : 16 Mar 2018 11:50 AM

ஹாலிவுட் ஜன்னல்: மனமே மற!

கா

தலும் நகைச்சுவையும் கலந்த கதைகளுக்கு எல்லாக் காலங்களிலும் வரவேற்பு உண்டு. ஏப்ரல் 13 அன்று வெளியாகும் ‘ஓவர்போர்ட்’ அந்த ரகப் படம்தான்.

பெரும் பணக்காரனான நாயகன், தீராத விளையாட்டுப் பிள்ளை. தனது உல்லாசத்துக்காகப் பணத்தைத் தண்ணீராக இரைப்பவன். பணியாட்களிடம் மட்டும் கடுமையாக நடந்து கொள்பவன். மூன்று குழந்தைகளின் தாயாக, பொருளாதாரத்தில் தடுமாறும் நாயகி. நாயகனின் சுபாவம் தெரியாமல் அவனது உல்லாசப் படகின் பணிப்பெண்ணாக மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறாள். திடீரென ஒரு நாள் அவள் வேலையை விட்டுத் துரத்தப்படுகிறாள். அன்றைய தினமே அவன் படகிலிருந்து தவறிவிழுகிறான், தலையில் அடிபடுகிறது.

சம்பளப் பாக்கிக்காக முதலாளியைச் சந்திக்க மருத்துவமனைக்கு வரும் நாயகிக்கு, அவன் பழைய நினைவுகளை இழந்து தவிப்பது தெரியவருகிறது. இனித் தனதுமுறை என முடிவு செய்தவளாக அவனுடைய மனைவியாக நடிக்க ஆரம்பிக்கிறாள். அம்னீஷியாவால் அலைக்கழிபவன், பிறர் அறிந்திராத தனது ரகசிய ‘டாட்டூ’வை அவள் வெளிச்சொன்னதும் நம்புகிறான். கூடவே அவளது அணுகுமுறையால் படிப்படியாக ஆளே மாறுகிறான். குடும்பத்துக்காக உழைப்பது, அனைவரிடமும் பரிவு காட்டுவது என அவன் திருந்தி வரும்போது பழைய நினைவுகள் இனித் திரும்பும் என மருத்துவர்கள் அறிவிக்கின்றனர். தொடரும் ‘கிரேஸி மோகன்’ பாணி கலாட்டாக்களே மீதிப் படம்.

30 வருடங்களுக்கு முன் இதே பெயரில் வெளியான ஹாலிவுட் படத்தின் மறு ஆக்கமாகத் தற்போதைய ‘ஓவர்போர்ட்’ தயாராகி உள்ளது. தென்கொரியத் திரைப்படங்களின் கதையை உருவி உலகம் முழுவதுமிருந்து சினிமாக்கள் எடுத்துக்கொண்டிருக்க, தென்கொரியர்கள் தொலைக்காட்சித் தொடராக எடுத்த ஹாலிவுட் திரைக்கதை என்ற சிறப்பு 1987-ல் வெளியான ‘ஓவர்போர்ட்’ படத்துக்கு உண்டு. பழைய படத்தின் நாயகன் – நாயகி கதாபாத்திரங்களை பரஸ்பரம் மாற்றியமைத்த திரைக்கதையில், கூடுதலான காமெடி மற்றும் ரொமான்ஸ் உடன் புதிய ‘ஓவர்போர்ட்’ திரைக்கு வருகிறது.

அன்னா ஃபாரிஸ், யூஜினியோ டெர்பெஸ் (Eugenio Derbez), சூஸி கர்ட்ஸ் (Swoosie Kurtz) உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படத்தை ராப் க்ரீன்பெர்க் இயக்கி இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x