Published : 02 Mar 2018 11:12 AM
Last Updated : 02 Mar 2018 11:12 AM
மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் பின்னணியிலான அரிதான ஹாலிவுட் படங்களின் வரிசையில் சேர வருகிறது ‘பெய்ருட்’ திரைப்படம். வரும் ஏப்ரல் 11 அன்று படம் வெளியாக உள்ளது.
படத்தின் கதை ‘80-களில் லெபனான் உள்நாட்டுக் கலவரச் சூழலில் நடக்கிறது. லெபனான் தீவிரவாதக் குழு ஒன்று, தலைநகர் பெய்ருட்டிலிருந்து அமெரிக்க அதிகாரி ஒருவரைக் கடத்துகிறது. அவரை மீட்கும் நடவடிக்கைக்காக, பெய்ருட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தூதரக அதிகாரியாக இருந்த ஜான் ஹாமை சிஐஏ வரவழைக்கிறது. களத்தில் இறங்கிய பின்னரே ஜான்ஹாமுக்கான தனிப்பட்ட உண்மைகள் சிலவும் தெரிய வருகின்றன. பணியாற்றிய காலத்தில் தன் மனைவியைக் கொன்ற லெபனானில் தீவிரவாதக் குழுவை எதிர்கொள்கிறோம் என்பதை ஹாம் உணர்ந்ததும் கதை வேகமெடுக்கிறது. கடமையுணர்வுடன் நாயகனின் சொந்தப் பகையும் சேர்ந்துகொள்ள வழக்கமான ஹாலிவுட் அதிரடி படமாகிறது பெய்ருட்.
இப்படிச் சாதாரணமாகச் செல்லும் பழிவாங்கல் கதையில் மத்தியக் கிழக்கு நாடுகளில் மண்டிய ஆயிரம் ஆண்டு அரசியல் குழப்பங்கள், உச்சத்திலிருந்த உள்நாட்டுக் கலவரம், லெபனான் மற்றும் அரேபிய நாடுகளின் இஸ்ரேலிய எதிர்ப்புணர்வு, அடிப்படைவாதிகளின் புகலிடம் எனப் பல அம்சங்களைத் தூவியிருக்கிறார்கள். இதனால் இப்படத்துக்கு லெபனான் மற்றும் அதன் ஆதரவு நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
படத்தில் லெபனான் நாடு, மக்கள் மற்றும் கலாச்சாரத்தைச் சிறுமைப்படுத்தி இருப்பதாகவும், லெபனானை எட்டிப்பார்க்காது மொராக்கோவில் எடுத்த படத்துக்கு பெய்ருட் எனப் பெயரிட்டதை எதிர்த்தும் மத்திய கிழக்கு நாடுகளில் எதிர்ப்பு வலுத்திருக்கிறது. வழக்கம்போல் சமூக ஊடகங்கள் வாயிலான இந்த எதிர்ப்புப் பிரச்சாரமே படத்துக்கு விளம்பரமாகவும் மாறி இருக்கிறது.
பிராட் ஆண்டர்சன் இயக்கிய இப்படத்துக்குத் திரைக்கதை எழுதி படத் தயாரிப்பில் இணைந்திருக்கிறார் டோனி கில்ராய். ஜான் ஹாம், ரோஸமன்ட் பைக், டீன் நோரீஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT