Published : 16 Mar 2018 11:55 AM
Last Updated : 16 Mar 2018 11:55 AM
சிலி நாட்டு ஸ்பானிய மொழித் திரைப்படம் ‘எ ஃபெண்டாஸ்டிக் வுமன்’. நடந்துமுடிந்த 90-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த அயல்மொழித் திரைப்படத்துக்கான விருதை வென்றிருக்கிறது. ஆஸ்கர் வரலாற்றில் திருநங்கையை மையக் கதாபாத்திரமாகச் சித்தரிக்கும் படம் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை.
சிலி நாட்டில் பாலினச் சிறுபான்மையினருக்கான அடையாளம் குறித்த சட்ட வரைவு இதுவரை அமல்படுத்தப்படாத நிலையில் இந்தப் படத்துக்குக்குக் கிடைத்திருக்கும் ஆஸ்கர் அங்கீகாரம் அரசியல்ரீதியாகவும் கவனம்பெற்றிருக்கிறது.
ஓர் இரவில்
மரினாவும் ஓர்லந்தோவும் காதலர்கள். மரினா, விடுதியொன்றில் பாடகியாகவும் பணிப்பெண்ணாகவும் இருக்கிறார். கண்கள் பளபளக்கக் காதலும் குறும்பும் கலந்து தன் காதலன் ஓர்லந்தோவைப் பார்த்துக் கண்சிமிட்டியபடி பாடுகிறார். மரினாவின் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, ஆசை தீர நடனமாடிக் களித்து, பிளாட்டுக்குத் திரும்புகிறார்கள். இருவரும் சுற்றுலா செல்லத் திட்டமிட்டு உறங்கி, மகிழ்ச்சியாகக் கழிந்திருக்க வேண்டிய இரவு அது. ஆனால், ஓர்லந்தோ திடீரெனப் படுக்கையில் இருந்து எழுந்து அமர்கிறார்.
வலியால் துடிக்கும் அவரைச் சுவர் மீது சாய்த்து நிறுத்திவிட்டு மரினா வீட்டைப் பூட்ட எத்தனிப்பதற்குள் படிகளில் சரிந்துவிழுகிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டுக் காத்திருக்கிறார் மரினா. ஓர்லந்தோ இறந்துவிட, காதலனின் மரணத்துக்கு அழக்கூட முடியாத வகையில் மரினாவைச் சிக்கல்கள் சூழ்ந்துகொள்கின்றன.
காரணம் மரினா, திருநங்கை. மருத்துவர்களும் ஓர்லந்தோவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மரினாவுக்கு அந்த மரணத்தில் தொடர்பிருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கிறார்கள். அவரைக் குற்றவாளிபோல் நடத்துகிறார்கள். அதுவரை காதலனின் அரவணைப்பில் இருந்த மரினாவுக்கு ஒரே இரவில் எல்லாமே தலைகீழாகிவிடுகிறது. ஒவ்வொரு நொடியும் தன்னை நிரூபிக்கும் போராட்டம் தொடர்கிறது.
பிணைக்கும் சந்தேகக் கண்ணி
காதலன் மரணித்த வலியோடு தன் மீது விழுந்துவிட்ட பழியையும் உள்ளுக்குள்ளேயே அடக்கிவைத்து ஒவ்வொரு சூழலையும் பக்குவத்துடன் எதிர்கொள்கிறார் மரினா. பெண் விசாரணை அதிகாரி ஒருவர், தான் திருநங்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகச் சொல்லி மரினாவை விசாரிக்கிறார்.
ஓர்லந்தோவின் உடலில் இருந்த காயங்களை மரினா ஏற்படுத்தியிருக்கக் கூடும் எனச் சந்தேகித்து அவரை மருத்துவப் பரிசோதனைக்கு வரச் சொல்கிறார். மருத்துவர் வெளியேறச் சொல்லியும் கேட்காமல் விசாரணை அதிகாரி அந்த அறையிலேயே அமர்ந்திருப்பார்.
மருத்துவப் பரிசோதனையின்போது மரினா நடத்தப்படுகிறவிதம் பாலினச் சிறுபான்மையினர் மீது ஏவப்படும் வன்முறைகளின் ஒரு சோற்றுப் பதம். கார், தான் தங்கியிருக்கும் பிளாட் அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேற வேண்டிய சூழலுக்கு மரினா தள்ளப்படுகிறார்.
ஓர்லந்தோவின் முன்னாள் மனைவி, தன்னை மிகக் கண்ணியம் நிறைந்தவராகச் சொல்லிக்கொண்டு மரினாவை வார்த்தைகளால் சிதைப்பார். தந்தை வயதில் இருக்கும் ஒருவருடன் எப்படி வாழ முடிந்தது என்பதைச் சொல்லிக்காட்டி மரினாவின் செயலை வக்கிரம் எனக் குறிப்பிடுவார். ஓர்லந்தோவின் இறுதிச் சடங்கில் மரினா பங்கேற்கக் கூடாது எனச் சொல்வார்.
ஓர்லந்தோவின் மகனும் தன் பங்குக்கு மரினாவைச் சிறுமைப்படுத்துவார். வேண்டுமென்றே அவரை மரிசா என அழைப்பார். தான் மரினா எனச் சொல்பவரிடம், “உண்மையிலேயே நீ யார்?” எனக் கேட்பார் ஓர்லந்தோவின் மகன். படம் முழுவதும் தன்னை மரினாவாக, பெண்ணாக நிரூபிக்க அவர் போராடுவார்.
தன் காதலனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால், “வேற வீட்டைப் பாரு” எனக் கீழ்த்தரமாக விமர்சிக்கப்படும்போதும் அமைதியாகக் கடந்து செல்ல முயல்வார். அதையும் மீறி மரினாவை உடல்ரீதியான தாக்குதலுக்கு அவர்கள் ஆளாக்குவார்கள். காதலனையும் வீட்டையும் இழந்து நிர்கதியாக நிற்கும் மரினாவின் உறுதியை ஆங்காங்கே தோன்றும் காதலனின் மாய பிம்பங்கள் சற்றே குலைத்துப்போடும்.
ஆனால், அடுத்த நொடியே உறுதியும் துணிவும் மரினாவிடம் குடிகொண்டுவிடும். அதுவே மரினாவை அவள் விருப்பப்படியே பெண்ணாக, காதலியாக நிலைநிறுத்தும். ‘மரினா’ என்பவர் யார் என்பதற்கான விடையைச் சின்னதொரு காட்சியில் கச்சிதமாகச் சொல்லியிருப்பார் இயக்குநர் செபாஸ்டியன் லெலியோ.
தன் அடையாளத்தை நிரூபிக்கப் போராடுவதுதான் வாழ்வின் வேறெந்த வலியைவிடவும் கொடிது. எந்தச் சூழலிலும் தளராமல் போராடி, தன் அடையாளத்தை நிரூபிப்பதாலேயே அற்புதப் பெண்ணாகிறார் மரினா!தன்னை வீழ்த்த நினைக்கிற புயலை எதிர்த்துத் தனியொரு பெண்ணாக மரினா நிற்பதைப் போல ஒரு காட்சி வரும். உண்மையில் உலகம் முழுவதும் இருக்கும் ஒவ்வொரு பாலினச் சிறுபான்மையினரும் சமூகப் புறக்கணிப்பு எனும் பெரும் புயலை எதிர்த்துதான் வாழ வேண்டியிருக்கிறது.
படத்தில் மரினாவாக நடித்திருக்கும் டேன்யலா பேகா, திருநங்கை. ஆஸ்கர் விழாவில் பரிசு வழங்குபவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை இவர். இந்தப் படத்துக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரத்தால் சிலி நாட்டைச் சேர்ந்த பாலியல் சிறுபான்மையினர் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். தாங்கள் விரும்பிய பால் அடையாளத்துடன் வாழ்வதற்கான சட்ட வரைவுக்குத் தங்கள் அரசு அனுமதியளிக்கும் என்ற நம்பிக்கையோடு அவர்கள் காத்திருக்கிறார்கள்.
தொடர்புக்கு brindha.s@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT