Published : 17 May 2019 09:01 AM
Last Updated : 17 May 2019 09:01 AM
செழியன் இயக்கத்தில் வெளியான ‘டுலெட்’ படத்தைப் பார்த்தவர்கள் கறாரான வீட்டு ஓனர் அம்மா கதாபாத்திரத்தை மறந்திருக்க மாட்டார்கள். கெடுபிடி காட்டும் வீட்டு ஓனர் தோரணையைக் கண்முன்னே கொண்டுவந்து காட்டிய அவர், ‘தியேட்டர் ஆர்டிஸ்ட்’ என்று பெயரெடுத்த ஆதிரா பாண்டிலெட்சுமி.
கோடம்பாக்கத்தின் அண்மைக்கால ஸ்வீட் அம்மா கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதில் ஆதிரா முன்னணியில் இருக்கிறார். அம்மா கதாபாத்திரங்களைத் தாண்டி குணச்சித்திர வேடங்களிலும் தனித்துத் தன்னை அடையாளம் காட்டி வருபவர்.
ஆதிராவுக்கு மதுரைதான் சொந்த ஊர். பதின்ம வயதிலேயே திருமணம் முடிந்து துபாயில் செட்டிலாகிவிட்டார். அங்கே அழகுக் கலை நிபுணராக இருந்தார். 15 ஆண்டுகள் உருண்டோடிவிட, அம்மா, அப்பாவோடு வசிக்க வேண்டும் என்ற ஆவலுடன் 2007-ல் சென்னைக்குத் திரும்பினார்.
ஆனால், அந்த ஆண்டே உடல்நலம் பாதிக்கப்பட்டு அவருடைய அம்மா இறந்துபோனார். அந்தப் பிரிவு அவருக்குப் பெரும் மனவலியைத் தந்தது. அதிலிருந்து மீள முடியாமல் துடித்தார். ஒரு கட்டத்தில் கவனத்தைத் திசை திருப்பக் கிராமியக் கலைகளில் ஈடுபடத் தொடங்கினார். பின்னர் கூத்துப்பட்டறையில் சேர்ந்தார்.
அங்கே ஆறு ஆண்டுகள் அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொண்ட ஆதிரா, பின்னர் தெருக்கூத்துக் கலையிலும் ஈடுபட்டார். நாடகக் கலையில் அடுத்த தலைமுறையினருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த 2014-ல் நவீனக் கூத்துப்பட்டறையைத் தொடங்கினார் ஆதிரா.
அங்கே இளம் கலைஞர்களுக்கு நடிக்கக் கற்றுக்கொடுத்துவருகிறார். இவரிடம் பயிற்சிபெற்ற பலர் இன்று திரையில் பிரபலமாகியிருக்கிறார்கள். மேடையிலிருந்து திரைக்கு இடம்பெயர்ந்தது பற்றிக் கேட்டதும் ஆர்வம் கொப்பளிக்கப் பதில் வருகிறது.
“நாடகத் துறையில் இருந்தாலும், சினிமாவை இயக்க வேண்டும் என்ற என்ணம் இருந்துச்சு. சினிமாவில் நடிக்கணும்னு நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. ஆனால், சினிமாவில் நடிக்கணும்னு நிறையப் பேர் என்னிடம் கற்றுக்கொள்ள வந்தாங்க.
அவங்களுக்கு முன்மாதிரியாக இருக்கணும் என்றால், அதற்கு நான் சினிமாவில் நடித்திருக்கணுமே என்ற எண்ணம் அப்போதான் வந்துச்சு. அந்த நேரத்தில் 2016-ல் ‘கணிதன்’ என்ற படத்தில் அதர்வாவின் அம்மாவாக நடிக்க அழைப்பு வந்துச்சு.
என்னுடைய நாடகத்தை யூடியூபில் பார்த்துட்டு என்னை நடிக்கக் கூப்பிட்டாங்க. அதனால், அந்த வாய்ப்பை மறுக்காம ஏற்றுக்கொண்டேன்” என்கிறார் ஆதிரா.
‘கணிதன்’ படத்தின் மூலம் கவனிக்கப்பட்ட ஆதிராவுக்கு ‘பாம்புச் சட்டை’, ‘மருது’, ‘ஒரு குப்பைக் கதை’, ‘திமிருபுடிச்சவன்’, ‘சர்வம் தாளமயம்’, ‘டுலெட்’ என டஜன் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்ததும் ஏற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு வண்ணத்தில் இருக்க, அத்தனையிலும் கதாபாத்திரமாக மட்டுமே தோன்றியதும் தற்போது ஆதிராவை கோடம்பாக்கத்தின் மோஸ்ட் வான்டட் குணசித்திர நட்சத்திரம் ஆக்கியிருக்கிறது.
“இந்தக் கதாபாத்திரத்துக்கு ஆதிரா நல்லா இருப்பார் என்ற நம்பிக்கையில் கேட்குறவங்க கதையில்தான் நடிக்கிறேன். அம்மா கதாபாத்திரங்கள் மட்டுமல்ல, ‘ஆந்திரா மெஸ்’ படத்தில் ஹீரோவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தேன். தொடர்ந்து வித்தியாசமா நடிக்கணும்னு என்பதே என் ஆசை” என்கிறார் ஆதிரா.
‘டுலெட்’ படத்தில் கறாரான வீட்டு ஓனர் கதாபாத்திரத்தில் அமைதியான குரூரத்தை எப்படிக் காட்டமுடிந்தது என்றால், “அந்தக் கதாபாத்திரத்தின் உத்வேகத்துக்கு நாங்க பழநியில குடியிருந்த வீட்டோட ஓனரும், சென்னையில் என்னுடைய வீட்டில் குடியிருந்த ஒருவரோடு ஏற்பட்ட அனுபவமும் காரணம். அந்த இரண்டு நிஜ கேரக்டர்களை மனத்தில்கொண்டு நடிச்சேன்.
‘டுலெட்’ எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்துச்சு” என்கிறார் ஆதிரா. ‘ஒரு குப்பைக் கதை’யில் மீன்காரம்மா… ‘சர்வம் தாளமயம்’ படத்தில் சூப் விற்று குடும்பத்தின் தேவைகளைச் சந்திக்கும் ஒரு ஏழைக் குடும்பத் தலைவி என எப்படி சாமானியக் கதாபாத்திரங்களில் இவ்வளவு ஜெல்லியாக இவரால் ஒட்டிக்கொள்ள முடிகிறது என்றால்.. அதற்கு அவர் கூறிய பதில் நேர் எதிராக, ஆனால் நேர்மையாக இருந்தது!
“உண்மையில் நான் ஒரு ஹைஃபையான மாடர்ன் பெண். எளிய, சாமானிய கதாபாத்திரங்களில் நடிக்குற அளவுக்கு அந்த மாதிரி வாழ்க்கையை முன்னபின்ன நான் பார்த்ததும் இல்லை, வாழ்ந்ததும் இல்லை.
ஆனால், இதுதான் எனது கதாபாத்திரம் எனத் தெரிந்ததும் அந்தக் கதாபாத்திரத்தை நிஜவாழ்க்கையில் வாழ்ந்துகொண்டு இருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக்கொண்ட பிறகே நடிக்கிறேன்”.
சினிமாவில் ‘காப்பி - பேஸ்ட்’ நடிப்பு பெருகிவருவதாக வருத்தப்படும் ஆதிரா, “எதையாவது பார்த்து அதை அப்படியே ‘இமிடேட்’ செய்து நடிப்பது நடிப்பல்ல. வித்தியாசமான நடிப்புக் களத்தை இங்கே உருவாக்க வேண்டும். அதன் மூலம் வித்தியாசமான நடிகர்களை உருவாக்க வேண்டும் என்பதே என் இலக்கு” என்றும் உறுதியாகச் சொல்கிறார் ஆதிரா
அம்மா கதாபாத்திரம் மட்டும் போதுமா? பிரகாஷ்ராஜ் மாதிரி எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். கலையுலகக் கனவு? சினிமாவை இயக்க வேண்டும். சமீபத்தில் மறக்க முடியாதது? ‘டுலெட்’ படத்துக்காகச் சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்தது. அடுத்த படங்கள்? இயக்குநர் அமீரின் ‘அச்சமில்லை அச்சமில்லை’; கலையரசன் நடிக்கும் ‘குதிரை வால்’; கதிர் நடிக்கும் ‘ஜடா’; பெயரிடாத சிவகார்த்திகேயன் படம். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT