Last Updated : 03 May, 2019 09:49 AM

 

Published : 03 May 2019 09:49 AM
Last Updated : 03 May 2019 09:49 AM

திரைப் பார்வை: ஒரு யமண்டன் பிரம கத; நகைச்சுவை ஆன த்ரில்லர்! (மலையாளம்)

இரட்டைக் கதாயாசியர்கள் கடந்த இரு தலைமுறைக் காலகட்டத்தில் மலையாள சினிமாவுக்குப் புதுத் தெம்பு அளித்திருக்கிறார்கள். சித்திக் – லால், போபி-சஞ்சய், ராஃபி –மெக்கார்டின், உதய் கிருஷ்ணா – சிபி கே தோமஸ், ஷியாம் புஷ்கரன் – திலீஷ் நாயர் போன்ற வெற்றிபெற்ற இரட்டைக் கதாயாசிரியர்கள் வணிகரீதியிலும் பெரிய வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார்கள். 

இரட்டைக் கதாயாசிரியர்களின் இந்தத் தலைமுறையின் தொடர்ச்சிதான் விஷ்ணு உண்ணிகிருஷ்ணன் – பிபின் ஜார்ஜ். இந்தக் கூட்டணியின் புதிய படம்தான் ‘ஒரு யமண்டன் பிரம கத’.

வெற்றிக்காக...

இரண்டு ஆண்டுக் கால இடைவெளிக்குப் பிறகு துல்கர் சல்மானைக் கதாநாயகனாகக் கொண்டு வெளிவந்துள்ள படம் இது. 2017 மே மாதம் அவருடைய ‘காம்ரேட் இன் அமெரிக்கா’வுக்குப் பிறகு வெளிவரும் நேரடி மலையாளப் படம் இதுதான்.  2017, செப்டம்பரில்  சவ்பின் ஷாகிர் இயக்கத்தில் ‘பரவ’ படத்தில் கவுரத் தோற்றம்  ஏற்றிருந்தார்.

இந்த இடைவெளியில் அவர் நடித்த பிறமொழிப் படங்கள், கேரளத்தில் வெற்றியும் பெறவில்லை. ஓர் உறுதியான வெற்றியைத் தருவதற்காகத்தான் விஷ்ணு-பிபின் ஜோடியுடன் இணைந்திருக்கிறார் துல்கர். கதாயாசிரியர்களை வைத்துத்தான் இந்தப் படம் வியாபாரம் செய்யப்படுகிறது. இயக்குநர் புது முகம், பி.சி.நவ்ஃபல்.

இரட்டைக் கதாயாசிரியர்களில் போபி-சஞ்சய், ஷியாம்புஷ்கரன் – திலீஷ் நாயர் இந்த இரு இணைகள் தவிர்த்து மற்றவர்கள், நகைச்சுவை, காதல், சண்டை எனப் பல்சுவைக் கதைகளை உருவாக்குபவர்கள்தாம். விஷ்ணு-பிபினும் அந்த வகையைச் சேர்ந்தவர்கள்தாம்.

 இவர்களுடைய ‘அமர், அக்பர், ஆண்டனி’ மலையாளம் தாண்டி இந்தி, தெலுங்கு மொழிகளையும் எட்டியிருக்கிறது. அடுத்த படமான ‘கட்டப்பனயிலெ ஹ்ருத்திக் ரோஷன்’ மிகப் பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. தமிழில் தனுஷ் தயாரிப்பில் மொழி மாற்றமும் ஆகவுள்ளது.

இணையின் தனித்துவம்

காதல், சண்டை, நகைச்சுவை என நகரும் கதையில் ஒரு த்ரில்லர் அம்சத்தை இணைப்பதுதான் விஷ்ணு-பிபின் இணையின் தனித்துவம். அதை இந்தப் படத்திலும் செய்திருக்கிறார்கள். ஆனால், நகைச்சுவையைத்தான் களமாக்கியிருக்கிறார்கள். அதனால் சலீம் குமார், சவ்பின், விஷ்ணு, தர்மஜன், ஹரீஷ் கனாரன், பைஜூ, மோளி ஜோசப் என இன்றைய தேதியில் மலையாளத்தின் பிரபலமான நகைச்சுவை நடிகர்கள் இதில் இணைந்திருக்கிறார்கள். பற்றாக்குறைக்குக் குணச்சித்திர நடிகர்களும் கைகொடுக்கிறார்கள்.

இதற்கிடையே துல்கரின் நட்சத்திர அந்தஸ்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. கன்னியரின் காதல் காளையாக, உதவி மனப்பான்மை படைத்தவராக, வாழ்க்கையின் பரபரப்பை வெறுப்பவராக எனப் பல நிலைகளில் நல்லுள்ளம் கொண்ட ஒருவராக நாயகனை முன்னிறுத்த கதாயாசிரியர்கள் அரும்பாடுபட்டிருக்கிறார்கள் . நாயகன், தன் பின்னால் பெண்கள் பல நூறு பேர் அலைந்தாலும் தனக்கு 'ஸ்பார்க்' உண்டாக்கும் பெண்ணுக்காகக் காத்திருக்கிறார்.

அப்படிப் பார்த்ததும் ஒரு பெண்ணின் ஒளிப்படம் ‘ஸ்பார்க்’ உண்டாக்குகிறது. பத்திரிகையில் வந்திக்கும் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில் இருக்கிறது அந்தப் படம். அந்தப் பெண்ணைத் தேடிச் செல்கிறது படம். இந்தத் திருப்புமுனைக்குக் கொண்டுவர பார்வையாளர்களைக் கடினமான பாலைவனப் பாதை யாத்திரைக்கு அழைத்துச் செல்கிறது படம்.

எண்ணற்ற கதாபாத்திரங்களைக் கொண்டுள்ள இந்தப் படம் அவற்றைச் சரியாக இணைக்கவில்லை. திரைக்கதையின் சிறு சித்து வேலைகளில் பார்வையாளர்களைக் கவர்ந்துவிட முனைந்திருக்கிறார்கள். ஆனால், கதையின் சம்பவங்கள், அதன் பின்னணிக் காரணங்களின் நம்பகத்தன்மை குறித்த அஜாக்கிரதை வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்தப் படம், தெலுங்கு, இந்தியில் மொழி மாற்றம் செய்யப்படலாம் என்பதை முன்னுணர்ந்து கதையை எழுதியிருக்கிறது விஷ்ணு-பிபின் இணை. ஒரு தெலுங்குப் படத்தை அவர்கள் ஏன் மலையாளத்திலிருந்து மொழிமாற்றம் செய்ய வேண்டும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x