Published : 31 May 2019 11:35 AM
Last Updated : 31 May 2019 11:35 AM
அண்மைக் காலத்தில் காமெடியில் குழந்தைகளையும் கவர்ந்தவர் தேவதர்ஷினி. ‘காஞ்சனா’ படத்தில் கோவை சரளா, ஸ்ரீமன்னுடன் சேர்ந்து பேயுடன் அடிக்கும் லூட்டிகள் சிறந்த நகைச்சுவை நடிகை என்ற அந்தஸ்தையும் அவருக்குக் கொடுத்திருக்கின்றன.
20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொலைக்காட்சி மூலம் வீட்டு வரவேற்பறைக்கு தேவதர்ஷினி சென்றிருந்தாலும் இப்போதுதான் அவர் மீது புகழ் வெளிச்சம் பாய தொடங்கியிருக்கிறது. கணவர் சேத்தன், சின்னத்திரை, சினிமா இரண்டிலுமே கலக்கிக்கொண்டிருக்க, தற்போது இந்தக் கலைத் தம்பதியின் மகளும் திரைக்கு வந்துவிட்டார்.
தொலைக்காட்சி தொடர்கள் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் தேவதர்ஷினி. 1990-களில் தொலைக்காட்சியில் திகில் கதையைச் சொன்ன ‘மர்ம தேசம்’, காமெடி அலப்பறைகள் செய்த ‘ரமணி Vs ரமணி’ போன்ற தொடர்களின் கதாநாயகி தேவதர்ஷினிதான். இந்த இரு தொடர்களுக்கும் பெரும் வரவேற்பு கிடைக்கவே, தொலைக்காட்சி தொடர்களில் தவிர்க்க முடியாத சின்னத்திரை நட்சத்திரம்.
“1997-ல் எனக்கு ‘மர்ம தேசம்’ தொடரில் நடிக்க வாய்ப்பு வந்துச்சு. அந்தத் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. தொடர்களில் நடிப்பதற்கு முன்பாக எனக்கு நல்லா நடிக்க வரும்ணு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, உண்மையில் நடிப்பு என்பது என்னவென்று கற்றுக்கொடுத்தது ‘மர்ம தேசம்’ இயக்குநர் நாகாதான். அதேபோல எனக்கு காமெடியில் புகழ் தேடி கொடுத்த ‘ரமணி Vs ரமணி’ தொடரையும் அவருதான் இயக்கினார். இந்தத் தொடர்தான் எனக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு வாங்கிக் கொடுத்துச்சு” என்கிறார் தேவதர்ஷினி.
தொலைக்காட்சித் தொடர்களில் பிஸியாக இருந்த தேவதர்ஷினிக்கு முதல் பட வாய்ப்பு, ‘எனக்கு 20 உனக்கு 18’ மூலமாக வந்தது. ஆனால், அந்தப் படத்துக்கு முன்பாகவே ‘பார்த்திபன் கனவு’ படம் வெளியானதால், அதுவே தேவதர்ஷினியின் முதல் படமாக அமைந்தது.
முதல் படமே நல்ல நகைச்சுவைக் கதாபாத்திரமாக அவருக்கு அமைந்தது. வேலை, வெட்டி இல்லாத கணவர் விவேக்குடன் அவர் செய்த காமெடி அலப்பறைகள் இப்போதும்கூடத் தொலைக்காட்சிகளில் மிகப் பிரபலம். நடிகை ராதிகாவின் ‘அண்ணாமலை’, ‘ரமணி Vs ரமணி’ தொடரைப் பார்த்துவிட்டுத்தான் ‘பார்த்திபன் கனவு’ படத்தில் நடிக்கத் தனக்கு அழைப்பு வந்ததாகச் சொல்கிறார் தேவதர்ஷினி.
“ ‘பார்த்திபன் கனவு’ படத்துக்கு முன்புவரை சினிமாவுல நடிக்கணும்னு நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை. ஆனா, ‘பார்த்திபன் கனவு’ படத்துக்குப் பிறகு சினிமாவில் நடிக்க நிறைய வாய்ப்பு வர ஆரம்பிச்சது” என்கிற தேவதர்ஷினிக்குப் பெரிய திருப்புமுனையைக் கொடுத்த படம் , 2011-ல் வெளியான ‘காஞ்சனா’தான். ‘பார்த்திபன் கனவு’ படத்துக்குப் பிறகு முழுமையாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தேவதர்ஷினி. கோவை சரளா, ஸ்ரீமன் கூட்டணியில் காமெடியில் தேவதர்ஷினி செய்த அலப்பறை கவனிக்க வைத்தது.
‘காஞ்சனா’ படத்துக்கு உங்களை லாரன்ஸ் எப்படித் தேர்வுசெய்தார் என்று கேட்டால், கலகலவெனச் சிரிக்கிறார் தேவதர்ஷினி. “உண்மையில் லாரன்ஸ் மாஸ்டர் என்னை எப்படித் தேர்வு செஞ்சாருன்னு எனக்கே தெரியல. ஆனால், அந்தக் கதாபாத்திரத்துக்கு என்னை அவரிடம் பரிந்துரை செஞ்சது இணை இயக்குநர் துவாரகா என்பவர்தான். ‘காஞ்சனா 1’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு முதல்ல முக்கியத்துவம் இல்ல.
காமெடியான அண்ணி என்ற அளவில்தான் இருந்துச்சு. ஷூட்டிங் நேரத்தில்தான் கோவை சரளா-ஸ்ரீமன்னுடன் என்னுடைய கதாபாத்திரம் ஒர்க் அவுட் ஆகும்ன்ற நம்பிக்கையில் என் கதாபாத்திரத்தை லாரன்ஸ் மாஸ்டர் டெவலப் செய்தார். அண்ணி கதாபாத்திரத்துக்கு 25 நாட்கள் தேதி கேட்டப்ப, நானே ஆடிப்போய்விட்டேன்” என்று சிரித்தபடி சொல்கிறார் தேவதர்ஷினி.
‘காஞ்சனா 1’ மட்டுமல்ல, அண்மையில் வெளியான ‘காஞ்சனா 3’ படத்திலும் கோவை சரளா, ஸ்ரீமன்னுடன் சேர்ந்து தேவதர்ஷினி செய்திருந்த காமெடி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தது. ‘காஞ்சனா’ படம் தேவதர்ஷினியின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமும்கூட. ‘96’ படத்தில் யதார்த்தமான தோழியாக நடித்தும் ஸ்கோர் செய்திருந்த தேவதர்ஷினி, திரையைத் தாண்டி மனநல ஆலோசகராகவும் பணி செய்துவருகிறார்.
அக்கா, அண்ணி எனக் குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நிறைய நடித்து விட்டார் தேவதர்ஷினி. ‘காக்க காக்க’ போன்ற சில படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்கள் தேவதர்ஷினிக்கு அமைந்தன. ‘காஞ்சனா’ மூலம் முத்திரை பதித்துள்ள தேவதர்ஷினியை காமெடி நடிகையாகத் தொடர்ந்து பார்க்க முடியுமா? “முன்பெல்லாம் காமெடி என்பது தனி டிராக்காக இருக்கும். இப்போது வில்லன்கூட காமெடி செய்கிறார். பேய்கள் காமெடி செய்கின்றன. எல்லாருடைய பார்வையும் காமெடி பக்கம் திரும்பிவிட்டதால், காமெடி கதாபாத்திரங்கள் தொடர்ந்து கிடைக்கும்ணு நம்புகிறேன்” என்கிறார் தேவதர்ஷினி.
அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் தேவதர்ஷினி நடிப்பதைவிட காமெடியில் அவருக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ள நிலையில், மனோரமா, கோவை சரளா போன்ற நகைச்சுவை நடிகைகளின் வரிசையில் வர தேவதர்ஷினி விரும்பவில்லையா என்று கேட்டால், பதறுகிறார். “அய்யய்யோ... அது மிகப் பெரிய இடம். நம்ம வேலையைப் பார்த்துக்கிட்டுப் போக வேண்டியதுதான்”என்று அழுத்தமாகச் சொல்கிறார் தேவதர்ஷினி.
பட எண்ணிக்கை? நூறு படங்களைத் தாண்டிவிட்டேன் மகிழ்ச்சியான தருணம்? ‘96’ படத்தில் என்னுடைய பள்ளிப்பருவக் கதாபாத்திரத்துக்கு என் மகள் நடித்தது. இணைந்து நடிக்க ஆசைப்படும் நடிகர்? கமல் படத்தில் நடிக்க வேண்டும் நடித்துக்கொண்டிருக்கும் படங்கள்? என் கணவர் சேத்தனுக்கு ஜோடியாக ‘பிஇ’. பெயரிடப்படாத விஜய் படம், ‘தண்ணி வண்டி’ ‘கூர்கா’, ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’. ‘ஜோதிகாவோடு ஒரு படம், தெலுங்குப் படம் ஒன்று. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT