Last Updated : 24 May, 2019 12:05 PM

 

Published : 24 May 2019 12:05 PM
Last Updated : 24 May 2019 12:05 PM

டிஜிட்டல் மேடை 28: ஆவிகளைச் சமாளிக்கும் அமலா

எண்பதுகளின் மத்தியில் தொடங்கி தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களுடன் வெற்றிகரமாக வலம் வந்தவர் அமலா. நாகார்ஜுனைத் திருமணம் செய்துகொண்டு அக்கினேனி குடும்பத்தில் இணைந்தபின் திரைத்துரையிலிருந்து தள்ளியிருந்தார். தற்போது தனது நீண்ட இடைவெளியை ‘ஹை பிரிஸ்டஸ்’ இணையத் தொடர் வழியாக முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறார்.

அமானுஷ்யங்கள் நிறைந்த இத்தொடரில் கதையைச் சுமக்கும் முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அமலாவுடன் கிஷோர் குமார், வரலெட்சுமி சரத்குமார், சுனைனா, விஜயலட்சுமி எனப் பல தற்கால நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தெலுங்கில் தயாரான இந்த இணையத் தொடரைத் தமிழ் உள்படப் பல்வேறு பிராந்திய மொழிகளில் மொழிமாற்றத்துடன் வெளியிட்டிருக்கிறது ‘ஜீ5’.

ஐரோப்பிய ‘டாரட் அட்டை’களைப் பயன்படுத்தி அமானுஷ்ய பிரச்சினைகளுக்கு ஆலோசனைகள் வழங்குபவராக அமலா வருகிறார். ஆவிகளின் நடமாட்டத்தை அறிவதுடன் அவற்றுடன் உரையாடவும் முடியும் என்ற டாரட் அபிமானிகளின் நம்பிக்கை கதைக்குக் கைகொடுத்துள்ளது. டாரட் அட்டைகளில் பிரசித்தி பெற்ற  ‘தி ஹை பிரிஸ்டஸ்’ அமலாவைக் குறிப்பதுடன் தொடரின் தலைப்பாகவும் ஆகியுள்ளது.

தன்னிடம் வரும் ‘காணாமல் போன ஒரு மருத்துவரை தேடும்’ வழக்கைத் தனது பாணியில் ஆராயும் அமலா, அதற்கும் தனது வீட்டில் அடிக்கடி தோன்றி இறைஞ்சும் கர்ப்பிணி ஆவிக்குமான தொடர்பைக் கண்டறிவதுடன் முதல் அத்தியாயம் தொடங்குகிறது.

அடுத்த அத்தியாயத்தில் கல்லூரித் தோழனும் முன்னாள் காதலனுமான கிஷோர் குமார் திடீரென அமலாவைத் தேடி வருகிறார். அன்றைய தினத்தை முழுவதுமாக ஒதுக்கி இருவரும் தங்களது பழைய நினைவுகளில் மூழ்கித் திளைக்கிறார்கள்.

இடையிடையே தான் சந்தித்த அமானுஷ்ய வழக்குகளில் சுவாரசியமானதை கிஷோருடன் பகிர்வதாக எட்டு அத்தியாயங்களில் ஏழு கதைகள் விரிகின்றன. அமலா - கிஷோர் கதை முதன்மை இழையாகவும் கிளைக் கதைகள் தனியிழைகளாகவும் தொடர்வதுடன் இரண்டும் ஆங்காங்கே பிணைந்து கொள்கின்றன.

அத்தியாயம் தோறும் முளைக்கும் பேய்க் கதைகளில் இறந்தவர்களின் ஆவிகளும் உடன் வரும் திடுக்கிடல்களுமாக ஓர் அமானுஷ்ய த்ரில்லருக்கான அனுபவத்தை நிறைவாக வழங்குகின்றன. மற்றபடி பார்வையாளரை இருக்கை நுனியில் அமர்த்தி வீறிடச் செய்யும் மலினமான பயமுறுத்தல்கள் இல்லாதது பெரும் ஆறுதல். பேய்களில் பலதும் நிராசைகள், ஏமாற்றங்கள், ஏக்கங்களுடன் எதிர்பாராது சாவைச் சந்திக்கும் அபலை ஆத்மாக்களாகவே வளையவருவதும் கதையுடன் ஒன்ற வைக்கிறது.

துணி துவைக்கும் இயந்திரத்தில் ஒளிந்திருக்கும் குழந்தைப் பேய், காஞ்சனா பாணியிலான பாசம் கொண்ட திருநங்கையின் ஆவி, மகளுக்காக வழக்கறிஞரைத் திருத்தும் அபலைத் தாயின் ஆவி, தற்கொலைத் தருணத்தில் தொலைபேசி அழைப்பை செவிமெடுக்காதவனைத் துரத்தும் தோழியின் ஆவி எனத் தினுசாய் பேய்கள் வந்து செல்கின்றன.

தொடர்புடைய நபர்களோ அமலாவோ அந்தப் பேய்களை அணுகி ஆற்றுப்படுத்தியதும் அவை சமர்த்தாக விலகிப் போகின்றன. ஒரு பேய்க்கதையில் வாழ்க்கையின் தத்துவங்கள், இறப்புக்கு முந்தைய வாழ்வின் அருமை பெருமைகள், மனித உறவுகளின் தாத்பரியங்களைச் சொல்வது நன்றாக எடுப்படுகிறது.

அமலா - கிஷோர் உரையாடும் தொடக்கக் காட்சிகள் அலுப்பூட்டினாலும் நிறைவாக அந்தச் சந்திப்பில் புதைந்திருக்கும் ரகசியங்கள் நெகிழ்வூட்டுகின்றன. ஆனால், துரோகம் செய்த காதலனை மீண்டும் சந்திக்கையில் கண்ணீர் விடும் காதலி, இன்னொருத்தியிடம் தாவும் கணவனைத் திருத்த தன்னை அழகுபடுத்திக்கொண்டு தவிக்கும் மனைவி என இயல்புக்கு ஒட்டாத தெலுங்கு சினிமாவின் அபத்தங்கள் இந்த தெலுங்குத் தொடரிலும் நிறைந்திருக்கின்றன.

அத்தியாயங்களை அரை மணி நேரத்துக்கு மேல் இழுக்காதது,  கண்களை உறுத்தாத சௌந்தர்ராஜனின் இரவுக் காட்சி ஒளிப்பதிவு, கோபால் ராவின் இம்சிக்காத பின்னணி இசை ஆகியவை தொடருக்கு வலுசேர்க்கின்றன. உதட்டசைவில் சரியாக உட்காராது தமிழ் டப்பிங் அடிக்கடி தடுமாறுகிறது.

எழுதி இயக்கி இருக்கும் புஷ்பா இக்னேசியஸ், மனித ஆழ்மனங்களில் ஆட்டம்போடும் அடங்காத ஆசைகள், தவிப்புகள், இச்சைகளையே வெளியுலகின் பேய்களாக நடமாட விட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

பிளாஷ்-பேக் காதலை நினைவில் மீட்கும் அமலாவின் அரிதான வெட்கமும் கிஷோரின் அமைதியான நடிப்பும் எதிர்பார்ப்பைத் தூண்டினாலும் இந்த அனுபவசாலிகளுக்கான வாய்ப்பை இறுதி அத்தியாயங்கள் வரை இழுத்தடித்திருக்கிறார்கள்.

தீவிர பேய்ப்பட ரசிகர்கள் ஏமாந்து போகலாம். ஆனால், அமானுஷ்யத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கான உருக்கமான கதைகள் காத்திருக்கின்றன.

 

முன்னோட்டத்தைக் காண:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x