Published : 23 Sep 2014 12:20 PM
Last Updated : 23 Sep 2014 12:20 PM
ஊருக்கு வெளியே ஐந்து வருடங்களாகப் பூட்டிக் கிடக்கும் பிரம்மாண்டமான அரண்மையைச் சுத்தம் செய்து விற்க ஏற்பாடு செய்கிறார் பொறுப்பாளர் அய்யனார் (சரவணன்). அதே நேரத்தில் ரயிலில் அந்த ஊரைக் கடந்து செல்லும் சாமியார் ஒருவர் “இங்கு நான் கூடிய சீக்கிரம் வர வேண்டியிருக்கும்” என எடுத்த எடுப்பிலேயே திகிலூட்டுகிறார்.
இருபது வருடங்களுக்கு முன்பு சமையல்காரருடன் (மனோ பாலா) ஊரைவிட்டுப் போன கோவை சரளா, அவர்கள் மகன், தனக்கும் ஜமீன் சொத்தில் பங்கு உண்டு எனத் தெரிந்து சமையல்காரர் வேடத்தில் வரும் பால்சாமி (சந்தானம்), அவன் கூட்டாளிகள். ஐந்து வருடங்களுக்குப் பிறகு தன் மனைவி மாதவியோடு (ஆண்ட்ரியா) வரும் முரளி (வினய் ராய்), கோவை சரளாவின் அண்ணன் மகளாக ராய் லட்சுமி எனக் குடும்பத்து வாரிசுகள் எல்லாம் புதுப்பிக்கப்பட்ட அந்த அரண்மனையில் வந்து தங்குகிறார்கள்.
இதில் அரண்மனையின் சமையல்காரர், கார் டிரைவர், வேலைக்காரர் ஆகியோர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். சில நாட்கள் கழித்து அங்கு வந்து தங்கும் மாதவியின் அண்ணன் (சுந்தர்.சி) பேய் பிசாசு நம்பிக்கை இல்லாதவன். ஆனால் தொடர்ந்து நடக்கும் பல சம்பவங்களுக்குப் பிறகு ஆவி இருப்பதையும் அந்த அரண்மனையில் யார் உடலை ஆவி பிடித்திருக் கிறது என்பதையும் கண்டுபிடித்து விடுகிறான்.
ஆவியின் கொலை வெறிக்குக் காரணம் என்ன? ஆவியிடம் இருந்து எப்படித் தப்பிப்பது?
சந்திரமுகி, முனி, காஞ்சனா வரிசையில் திகிலும், நகைச்சுவையும் கலந்த படம் அரண்மனை. சந்திரமுகியும் காஞ்சனாவும் காமெடியாகத் தொடங்கி அங்கும் இங்கும் திகிலூட்டி, இறுதியில் முழு திகிலாக மாறின. அரண்மனையில் படம் முழுவதும் நகைச்சுவை ஊடாடுகிறது. திகில் அம்சம் குறைவாகவே உள்ளது.
மனநலம் குன்றிய பெண் குழந்தை, கண்ணாடியில் தெரியும் பேய், ஒட்டடை படிந்த நிலையில் பூட்டிக் கிடக்கும் மர்ம அறை, ஃபிளாஷ்பேக்கில் கொல்லப்படும் பெண்ணின் ஆவி கிளிஷே காட்சிகள் படத்தில் இருந்தாலும் மாதவி (ஆண்ட்ரியா), செல்வி (ஹன்ஸிகா) இருவரின் கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் வித்தியாசமாக இருக்கிறது.
சில காட்சிகளில் பின்னணி இசை அச்சத்தில் ஆழ்த்துகிறது. ஆனால் பெரும்பாலான காட்சிகளில் எடுபடவில்லை. திகில் படத்துக்கு நிசப்தமும் முக்கியம். கார்த்திக் ராஜா இதை மனதில் வைத்துப் பின்னணி இசை அமைத்திருக்கலாம். பாடல்கள் இசை பரத்வாஜ். சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
சந்தானம், மனோபாலா, சுவாமிநாதன் என நகைச்சுவை நட்சத்திரங்களின் கூட்டணி நன்றாக வேலைசெய்திருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்தானத்தின் காமெடி சுறுசுறு வென்று இருக்கிறது. இரட்டை அர்த்த, ஆணாதிக்க வசனங்களை அவரும் அவர் கூட்டாளிகளும் விட்டபாடில்லை. பாட்டியின் உழைப்பு என்று அவர் அடிக்கடி சொல்வது அருவருப்பு.
பேயை வைத்து மிரட்ட மட்டுமல்லாமல் சிரிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. சந்தானமும், சுவாமிநாதனும் பேயிடம் அடி வாங்கும் காட்சி பார்வையாளர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறது. “ஆம்பளன்னா தப்பு பண்ணுவீங்களாடா” என்று கேட்டுக் கேட்டு பேய் அடிப்பது படத்தில் வரும் ஆணாதிக்க வசனங்களுக்கும் சேர்த்துச் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். பேயாக வந்துதான் ஆண் திமிரை அடக்க முடியும் என்று சொல்லவருகிறாரா இயக்குநர்?
தமிழில் இதுவரை வெளிப்படாமல் இருந்த ஆண்ட்ரியாவின் நடிப்புத் திறனை இந்தப் படம் நன்கு வெளிக்கொணர்ந்துள்ளது. ஹன்ஸிகா கிராமத்து தேவதையாக வந்து ரசிகர்களைக் கொள்ளை கொள்கிறார். நம்ம கிராமத்துல இப்படி ஒரு பொண்ணா என்ற லாஜிக் கேள்வி வரக்கூடாது என்பதற்காக வட இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த குடும்பத்தின் பெண் என்ற வசனம் சேர்க்கப்பட்டிருக்கிறது.
ராய் லட்சுமி வரும் காட்சிகள் கவர்ச்சிக்கான சாக்குகள்தான் என்றாலும் அளவு மீறவில்லை. கலை இயக்குநர் குருராஜின் கைவண்ணமும் யு.கே. செந்தில் குமாரின் மிரட்டலான ஒளிப்பதிவும் படத்துக்குத் துணைபுரிகின்றன. மிதமான ஹீரோயிஸத்தோடும் அளவான கிளாமரோடும் வந்திருக்கும் அரண்மனை, தியேட்டரில் சிரிப்பலைகளை எழ வைக்கிறது.
திகில் விஷயத்தில் புதுமையாக யோசித்திருந்தால் திகில் + நகைச்சுவைப் படமாக ஜெயித்திருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment